என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

புகைப்படம் எடுக்க வந்த சுற்றுலா பயணியை துரத்தி தாக்கிய காட்டு யானை: முதுமலை அருகே பரபரப்பு
- யானை சாலைக்கு வந்ததால் அந்த வழியாக வந்த அனைத்து வாகனங்களும் சாலையிலேயே நிறுத்தப்பட்டன.
- சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் முதுமலை தமிழ்நாடு-கர்நாடக பாதையில் பந்திப்பூர் புலிகள் காப்பகம் வழியாக தேசிய நெடுஞ்சாலை செல்கிறது.
இந்த வழியாக நேற்று ஏராளமான வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது வனத்தில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று சாலைக்கு வந்தது.
அந்த வழியாக கேரட் ஏற்றி சென்ற லாரியை அந்த யானை வழிமறித்தது. டிரைவரும் உடனே வண்டியை நிறுத்தி விட்டார். பின்னர் யானை அங்கு நின்றபடியே லாரியில் இருந்த கேரட்டை எடுத்து சாப்பிட்டு கொண்டிருந்தது.
யானை சாலைக்கு வந்ததால் அந்த வழியாக வந்த அனைத்து வாகனங்களும் சாலையிலேயே நிறுத்தப்பட்டன. அப்போது யானை நிற்பதை பார்த்ததும் அங்கு நின்றிருந்த சுற்றுலா பயணி ஒருவர் ஆர்வ மிகுதியில் யானை அருகே சென்று புகைப்படம் எடுக்க முயன்றார்.
அப்போது யானை திடீரென சுற்றுலா பயணியை நோக்கி விரட்டி வந்தது. இதனால் சுற்றுலா பயணி வாலிபரிடம் இருந்து தப்பிக்க அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.
ஆனால் யானை விடாமல் துரத்தி வந்தது. அப்போது திடீரென சுற்றுலா பயணி சாலையில் தடுக்கி விழுந்தார். உடனே யானை அவரை தனது காலால் தாக்கியது. இதில் சுற்றுலா பயணி பலத்த காயம் அடைந்தார்.
இதனால் அதிர்ச்சியான சக சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து யானையை வனத்திற்குள் விரட்டினர்.
பின்னர் பலத்த காயம் அடைந்த சுற்றுலா பயணியை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சுற்றுலா பயணியை காட்டு யானை தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.






