என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மத ரீதியிலான பாகுபாடு... ஏ.ஆர். ரகுமானுக்கு ஆதரவாக பதிவிட்ட எம்.பி. கனிமொழி!
- எனக்கு வாய்ப்பு கிடைக்காததற்கு மதரீதியான விஷயமும் காரணமாக இருக்கலாம்.
- ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்த கருத்துக்கு பாஜக எம்.பி. கங்கனா ரனாவத் கடுமையாக விமர்சித்தார்.
இந்தி திரைப்படத் துறையில் தனக்கு பாகுபாடு கட்டப்பட்டதாக அண்மையில் ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்த கருத்துகள் இணையத்தில் பேசு பொருளானது.
அண்மையில் கொடுத்த பெட்டியின் பேசிய ஏ.ஆர்.ரகுமான், ".கடந்த 8 வருடங்களாக இந்தி திரைப்படத் துறையில் இசை அமைக்கும் வாய்ப்புகள் எனக்கு அதிகம் கிடைக்கவில்லை. இசைத் துறை, இனி இசைக்கலைஞர்கள் மற்றும் இயக்குநர்களின் கைகளில் இல்லை. கார்ப்பரேட் கைகளில் உள்ளது. படைப்பாற்றல் இல்லாதவர்களிடம் இப்போது முடிவெடுக்கும் அதிகாரம் இருப்பதால் பாகுபாடு நிலவுகிறது. எனக்கு வாய்ப்பு கிடைக்காததற்கு மதரீதியான விஷயமும் காரணமாக இருக்கலாம். இது என் முகத்துக்கு நேராக நடக்கவில்லை என்றாலும், அது போன்ற விஷயங்களைக் கேள்விப்படுகிறேன். எனக்குக் கிடைக்கும் வாய்ப்புகளில் நான் மகிழ்ச்சியடைகிறேன்" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்த கருத்துக்கு பாஜக எம்.பி. கங்கனா ரனாவத் கடுமையாக விமர்சித்தார். இதனையடுத்து ஏ.ஆர். ரகுமானுக்கு ஆதரவாக திமுக எம்.பி. கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "மதம், மொழி மற்றும் அடையாளத்தைத் தாண்டிய கலையைக் கொண்ட ஒரு இசைக்கலைஞரை வேண்டுமென்றே குறிவைத்து தாக்கியதும், இந்தியாவில் அதிகாரத்தில் இருப்பவர்களின் அதிர்ச்சியூட்டும் மௌனமும் மிகவும் கவலையளிக்கிறது. ஏ.ஆர். ரகுமான் இந்த நாட்டின் இசையை உலகிற்கு எடுத்துச் சென்ற ஒரு படைப்பாளி மட்டுமல்ல, இந்தியாவின் முதன்மை கலாச்சாரத் தூதராகவும் இந்திய விழுமியங்களின் பிரதிநிதியாகவும் திகழ்கிறார். அவர் பாராட்டுக்கும் நன்றியுணர்ச்சிக்கும் தகுதியானவர், பாரபட்சத்திற்கும் வெறுப்பிற்கும் அல்ல. இத்தகைய சகிப்பின்மைக்கு ஒரு ஜனநாயக மற்றும் பன்மைத்துவ சமூகத்தில் இடமில்லை" என்று தெரிவித்துள்ளார்.






