என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கோடை வெயில்: பறவைகளுக்கு நீரும் உணவும் கொடையளிப்போம்!- மு.க.ஸ்டாலின்
- தமிழ்நாட்டில் 100 டிகிரியை தாண்டி பதிவாகும் இடங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
- இன்று முதல் மேலும் 3 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் தெரிவித்து உள்ளார்.
கோடை வெயிலின் கோரத்தாண்டவம் இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கி விட்டது. குறிப்பாக கடந்த 27-ந் தேதியில் இருந்து வெப்பத்தின் அளவு இயல்பைவிட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து பதிவாகி வருவதை பார்க்க முடிகிறது.
இதனால் தமிழ்நாட்டில் 100 டிகிரியை தாண்டி பதிவாகும் இடங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நேற்று 6 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவானது. அதில் அதிகபட்சமாக சேலத்தில் 102.2 டிகிரி வெயில் பதிவாகி இருந்தது.
வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் பலரும் வெளியில் தலைகாட்ட முடியாமல் ஏ.சி. அறைகளிலும், மரங்கள் நிறைந்த நிழல் பகுதிகளிலும் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.
கடந்த 27-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை வெப்பம் வாட்டி வதைக்கும் என வானிலை ஆய்வாளர்கள் முன்னெச்சரிக்கை விடுத்து இருந்தனர். அதன்படியே வெயில் சுட்டெரித்த நிலையில், அதன் தொடர்ச்சியாக இன்று முதல் மேலும் 3 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்திரன் தெரிவித்து உள்ளார்.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்
கோடை வெயிலால் தவிக்கும் பறவைகளுக்கு நீரும் உணவும் கொடையளிப்போம்! என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பறவைகளுக்கு நீர், உணவு அளிக்கும் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.






