மு.க.ஸ்டாலின் தான் தமிழ்நாடு அரசாங்கத்தை நடத்தி வருகிறார்- அரசு கூடுதல் வழக்கறிஞர்

எழுத்தாளர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்தது என்பது உணர்வுபூர்வமான விஷயம் கலைஞர் இதை ஒருபோதும் அனுமதித்திருக்க மாட்டார்.
மு.க.ஸ்டாலின் தான் தமிழ்நாடு அரசாங்கத்தை நடத்தி வருகிறார்- அரசு கூடுதல் வழக்கறிஞர்
Published on

'கலைஞரின் கனவு இல்லம் திட்டம்' என்ற பெயரில், தமிழ் எழுத்தாளர்களுக்கு வீடு வழங்கும் திட்டம் 2022ல் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், ஏற்கனவே வீட்டுவசதி வாரியத்தில் வீடு வாங்கியவர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் வீடு பெற தகுதியில்லை என்று அரசு ஒரு திருத்த அரசாணையை பிறப்பித்தது. இதன் காரணமாக, ஏற்கனவே வீடு ஒதுக்கீடு செய்யப்பட்ட பல எழுத்தாளர்களின் வீடுகள் ரத்து செய்யப்பட்டன.

இந்த ரத்து உத்தரவை எதிர்த்து முன்னாள் டி.ஜி.பி. திலகவதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, அரசின் முடிவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், "தமிழுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்களை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தனது வாழ்நாள் இறுதி வரை கவுரவப்படுத்தினார். தற்போது அரசு பிறப்பித்துள்ள திருத்த அரசாணை, கருணாநிதியின் விருப்பத்துக்கு முரணானது" என்றும் கருத்து தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்க தொடர்பாக ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறுகையில்,

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஒரு இணை அரசாங்கத்தை நடத்தி வருகின்றனர். ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இணையான ஒரு அரசாங்கத்தை நடத்துவது துரதிஷ்டவசமானது.

எழுத்தாளர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்தது என்பது உணர்வுபூர்வமான விஷயம், இது ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு தெரியாது. கலைஞர் இதை ஒருபோதும் அனுமதித்திருக்க மாட்டார்.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளை இணை அரசாங்கம் நடத்த அனுமதித்தால் அது பெரும் சிக்கலை ஏற்படுத்தி விடும் என்று நீதிபதி எச்சரிக்கை விடுத்தார்.

இதனையடுத்து, அரசை நடத்துவது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான், அதிகாரிகள் கிடையாது என்று உயர் நீதிமன்றத்தில் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் பதில் அளித்துள்ளார்.

இதற்கிடையே, கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து கவிஞர் வைரமுத்து வழக்கு பிற்பகலில் விசாரணைக்கு வர உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com