என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

'முடிந்துபோன ஆர்.எஸ்.எஸ் குரலை எதிரொலிக்கிறார் மாணிக்கம் தாகூர்' - முன்னாள் எம்.பி அப்துல்லா!
- ஓரணியில் நின்று ஆர்.எஸ்.எஸ் சக்திகளை விரட்டி அடித்து தமிழ்நாட்டைக் காப்பதுதான் இந்தக் கூட்டணியின் ஒற்றை நோக்கம்
- ஆட்சியில் பங்கு என்பது இந்துத்துவா அமைப்புகளால் உருவாக்கப்பட்டது என்பதை உணராத பேச்சு
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் நீண்ட நாட்களாகவே ஒரு புகை கசிந்துவருகிறது. குறிப்பாக காங்கிரஸ், திமுக மத்தியில். காங்கிரஸ் உள்ளேயே உட்கட்சி மோதல் தொடரும் நிலையில், இடையிடேயே கூட்டணி இடங்கள் தொடர்பாக திமுகவுடனும் ஒரு கருத்து முரண்பாடு நீடிப்பதுபோல் தகவல்கள் வருகிறது. ஆனால் திமுகவுடன் மட்டும்தான் கூட்டணி என மாநிலத்தலைவர் செல்வப்பெருந்தை உறுதியாக இருக்கிறார்.
இதனிடையே கூட்டணி இல்லாமல் தமிழ்நாட்டில் யாரும் வெல்ல முடியாது. அதே நேரம், இப்போது அதிகாரம் மட்டும் அல்ல – அதிகாரப் பகிர்வு குறித்தும் விவாதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். மாணிக்கம் தாகூரின் இந்த கருத்துக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சிகள் பதிலளித்து வருகின்றன. அந்த வரிசையில் தற்போது திமுக முன்னாள் எம்.பி. எம்.எம்.அப்துல்லாவும் கருத்து தெரிவித்துள்ளார்.
மாணிக்கம் தாகூரின் பதிவுக்கு பதில் அளிக்கும் வகையில் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அப்துல்லா,
"சமூக ஊடகங்களைத் தொடர்ந்து கவனிப்பவர்களுக்குத் தெரியும்.. கடந்த ஓராண்டாக இந்துத்துவ ஆதரவு பக்கங்கள் தமிழ்நாட்டு ஆட்சியிலும் அதிகாரப் பகிர்வு வருமா என்ற செய்தியை தொடர்ந்து பேசி வந்தனர்.
இன்றைய சூழ்நிலையில் அவர்கள் கூட்டணி தமிழ்நாட்டில் ஆட்சியை ஒரு போதும் பிடிக்கப் போவதில்லை என்ற நிலையில், வலுவாக இருக்கும் திமுக கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்துவதற்காக அவர்கள் செய்யும் திட்டமிட்ட அஜெண்டா என்பதை உணர்ந்த எழுச்சித் தமிழர் திருமாவளவன், தகைசால் தமிழர் பேராசிரியர் காதர்மொய்தீன் போன்ற கூட்டணித் தலைவர்கள் "ஓரணியில் நின்று ஆர்.எஸ்.எஸ் சக்திகளை விரட்டி அடித்து தமிழ்நாட்டைக் காப்பதுதான் இந்தக் கூட்டணியின் ஒற்றை நோக்கம்" என்பதனைத் தங்கள் பேட்டிகளில் தெளிவுபடுத்தினர்.
அதன் பிறகு இந்துத்துவ சமூக ஊடகங்களில் இந்தப் பேச்சுகள் கிட்டத்தட்ட மறைந்து விட்ட நிலையில் தற்போது மாணிக்கம் தாகூர் "இந்தப் பேச்சு எங்கிருந்து யாரால் உருவாக்கப்பட்டது என்பதனை உணராது" மீண்டும் இந்தப் பேச்சை எடுக்கின்றார்!! அனைத்து தலைவர்களும் மிகச் சரியாக இருக்கின்றார்கள். அனைத்து தொண்டர்களும் மிகுந்த ஒருங்கிணைப்போடு தேர்தல் பணியை எதிர் நோக்கிக் இருக்கின்றார்கள்.
இந்த நிலையில் கூட்டணியின் தொண்டர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தி ஒருங்கிணைப்பை சீர்குழைக்க ஆர் எஸ் எஸ் உருவாக்கிய "முடிந்து போன" குரலை மாணிக்கம் தாகூர் இப்போது எதிரொலிப்பது யாருக்கு பயன் தருவதாய் அமையும்!?" எனக் குறிப்பிட்டுள்ளார்.






