என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கரூர் கூட்டநெரிசல் வழக்கு: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
    X

    கரூர் கூட்டநெரிசல் வழக்கு: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

    • உச்ச நீதிமன்றம், கரூர் கூட்டநெரிசல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.
    • ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் 3 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    கரூரில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.

    இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு தமிழக வெற்றிக்கழகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    சென்னை ஐகோர்ட்டு தனி நீதிபதி, கரூர் சம்பவம் தொடர்பாக விசாரணை குழு அமைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்றது. இந்த மனு, நீதிபதிகள் மகேஸ்வரி, அஞ்சாரியா ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக போலீசை மட்டும் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட வேண்டும் என்று தவெக தரப்பு வலியுறுத்தியது.

    இந்நிலையில், இந்த வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், கரூர் கூட்டநெரிசல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.

    இது இடைக்கால உத்தரவு மட்டுமே என்று தெளிவுபடுத்திய உச்சநீதிமன்றம், சிபிஐ விசாரணையை கண்காணிக்க ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் 3 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    விசாரணை குழுவில் 2 ஐபிஎஸ் அதிகாரிகள் இடம்பெறுவார்கள். எனினும் அவர்கள் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர்களாக இருக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    கரூர் கூட்ட நெரிசல் வழக்கை விசாரித்த விதத்திற்கு சென்னை உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

    எதையும் ஆய்வு செய்யாமல் சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி சிறப்பு புலனாய்வு குழுவுக்கு உத்தரவிட்டுள்ளார் என கூறிய உச்சநீதிமன்றம், சிறப்பு விசாரணை குழு விசாரணைக்கு உத்தரவிட்டது எப்படி என்றும் சென்னை உயர்நீதிமன்றத்திடம் உச்சநீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது.

    பரப்புரை குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க கோரிய வழக்கு, கிரிமினல் வழக்காக பட்டியலிடப்பட்டது எப்படி? என உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் அறிக்கை தர ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×