என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மு.க.ஸ்டாலின் ஆட்சியா, முகமது ஸ்டாலின் ஆட்சியா? போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஹெச். ராஜா!
- தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் இன்னும் பட்டியல்கூட இடவில்லை
- இளைஞர் பூர்ணசந்திரனின் இறப்பிற்கு காரணம் மதுரை மாவட்ட ஆட்சியரும், காவல் ஆணையரும்தான்.
திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், தீபம் ஏற்ற காவல் துறை, மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை. இது தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.
இதனிடையே மலைக்குச் செல்லும் பாதை இரும்புத் தடுப்புகளால் அடைக்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. பக்தர்கள் யாரும் மலை மீது செல்ல அனுமதிக்கப்படவில்லை.இந்நிலையில், மலை மீது உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்கா மற்றும் பள்ளிவாசலில் சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றம் இன்று நடைபெறுகிறது. இதையொட்டி திருமங்கலம் கோட்டாட்சியர் சிவஜோதி தலைமையில் சமாதானக் கூட்டம் நடைபெற்றது. அதில், கடந்த காலங்களில் விதிக்கப்பட்ட நிபந்தனைகளை பின்பற்றி சந்தனக்கூடு விழாவை நடத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து முஸ்லீம்கள் மட்டும் எவ்வாறு மலைமீது செல்ல அனுமதிக்கப்படலாம் என அக்கிராம மக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சிலர் போராட்டத்திலும் ஈடுபட முயன்றனர். அவர்கள் கைது செய்யப்பட்டு அங்குள்ள மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா அவர்களை சந்திக்க வேண்டும் என போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர்,
"இளைஞர் பூர்ணசந்திரனின் இறப்பிற்கு காரணம் மதுரை மாவட்ட ஆட்சியரும், காவல் ஆணையரும்தான். நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றாத சட்டவிரோத காவல்துறை, தமிழ்நாடு காவல்துறை. தமிழ்நாடு காவல்துறை சட்டவிரோதமானவர்கள் இல்லை என்றால் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதியின் தீர்ப்பை செயல்படுத்தி இருக்க வேண்டும். ஏன் செயல்படுத்தவில்லை? தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் இன்னும் பட்டியல்கூட இடவில்லை. நீங்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள்.
இந்த மக்களை ஏன் கைதுசெய்ய வேண்டும்? அவர்களுக்கு சந்தனக்கூடு விழா நடத்த அனுமதி என்றால், இந்துக்கள் காசி விஸ்வநாதரை சென்று வணங்குவதற்கு ஏன் தடை? இது என்ன ஔரங்கசீப் ஆட்சியா? மு.க. ஸ்டாலின் ஆட்சியா, முகமது ஸ்டாலின் ஆட்சியா? தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது? மு.க.ஸ்டாலின், மதுரை ஆட்சியர், காவல் ஆணையர் அனைவரும் இந்து விரோதிகள்." என தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் வாக்குவாதத்தில் ஈடுபட, ஹெச். ராஜா மற்றும் பாஜகவை சேர்ந்த மற்ற ஒருவர் மட்டும் கைது செய்யப்பட்ட மக்களை காண உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.






