என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு வருமான வரித்துறை சம்மன்
- வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டு விஜயபாஸ்கர் மற்றும் அவரது சகோதரர் சேகர் பெயர்கள் வழக்கில் சேர்க்கப்பட்டன.
- புகாரின் பேரில் 13 பேர் மீதும் 6 பிரிவுகளின் கீழ் வாங்கல் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
கரூர்:
கரூரில் போலி சான்றிதழ் கொடுத்து மோசடியாக பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக மேலக்கரூர் சார் பதிவாளர் கரூர் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரில், யுவராஜ், பிரவீன், ரகு, சித்தார்த்தன், மாரப்பன், செல்வராஜ், ஷோபனா ஆகிய 7 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் கடந்த ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் தானும் சேர்க்கப்படலாம் என்ற அடிப்படையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தார். மேலும் கரூரில் இருந்து தலைமறைவானார்.
இந்நிலையில் வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டு விஜயபாஸ்கர் மற்றும் அவரது சகோதரர் சேகர் பெயர்கள் வழக்கில் சேர்க்கப்பட்டன. அதே நாளில் நில உரிமையாளர் ஷோபனாவின் தந்தை பிரகாஷ் கரூர் நகர காவல் நிலையம் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர், பிரவீண் உள்ளிட்ட 13 பேர் மீது புகார் அளித்தார்.
இப்புகாரின் பேரில் 13 பேர் மீதும் 6 பிரிவுகளின் கீழ் வாங்கல் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் ரூ.100 கோடி மதிப்பிலான நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வருகிற மே 23-ந்தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று வருமான வரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது.






