என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    திருச்செந்தூர் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்- 5 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்
    X

    திருச்செந்தூர் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்- 5 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்

    • தற்போது ஐயப்ப பக்தர்கள் சீசன் என்பதால் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
    • பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகையால் திருச்செந்தூர் நகர் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

    திருச்செந்தூர்:

    அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சிறந்த பரிகார தலமாகவும், ஆன்மீக சுற்றுலா தலமாகவும் விளங்கி வருகிறது.

    இங்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். தற்போது பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர்.

    தற்போது ஐயப்ப பக்தர்கள் சீசன் என்பதால் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். மேலும் மார்கழி மாதம் என்பதால் பாதயாத்திரை பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் போன்ற மாவட்டங்களில் இருந்து பாத யாத்திரையாக ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்து வந்தும் அதிகாலையில் இருந்தே கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் சுமார் 5 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    இன்று கோவில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டது. 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாரா தனையும், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 5மணிக்கு திருப்பள்ளி எழுச்சி நடந்தது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது.

    பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகையால் திருச்செந்தூர் நகர் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

    வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் இல்லாமல் ஆங்காங்கே சாலை ஓரத்தில் வாகனங்கள் நிறுத்தப்பட்டதால், நகர் பகுதி மக்கள் அவசர தேவைகளுக்கு கூட வெளியே வரமுடியாத சூழ்நிலை உள்ளது.

    Next Story
    ×