என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஆலங்குளம் அருகே பூ வியாபாரி கொலையில் 5 வாலிபர்கள் கைது
- வீட்டில் தனியாக இருந்த சுடர் வடிவேலுவை ஒரு கும்பல் வீட்டுக்குள் புகுந்து சரமாரியாக வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலங்குளம்:
நெல்லை மாவட்டம் தேவர்குளம் அருகே உள்ள சுண்டங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சுடர் வடிவேலு (வயது 57).
இவருக்கு தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள ஊத்துமலை பவுண்டு தெருவை சேர்ந்த தவமாரியம்மாள் என்பவருடன் திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர்.
தற்போது சுடர் வடிவேலு தனது குடும்பத்துடன் மனைவி ஊரான ஊத்து மலையில் வசித்து வந்தார். அவர் அங்குள்ள பஸ் நிறுத்தம் பகுதியில் பூக்கடை வைத்து நடத்தி வந்தார்.
இந்நிலையில் அவரது இளைய மகளுக்கு பாம்பு கடித்ததால் தவமாரியம்மாள் அவரை அழைத்துக் கொண்டு சங்கரன்கோவில் ஆஸ்பத்திரிக்கு சென்று விட்டார். இதனால் சுடர் வடிவேலு வீட்டில் தனியாக இருந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தனியாக இருந்த சுடர் வடிவேலுவை ஒரு கும்பல் வீட்டுக்குள் புகுந்து சரமாரியாக வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றது. இதில் அவரது கையும் துண்டானது.
இந்த பயங்கர கொலை சம்பவம் தொடர்பாக ஊத்துமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஆடிவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
அதில் முன்விரோதத்தில் அதே பகுதியை சேர்ந்த கார்த்திக்(35) என்பவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து வெறிச்செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.
சுடர் வடிவேலு பஸ் நிறுத்தம் பகுதியில் கடை வைத்திருக்கும் நிலையில் அதன் எதிர் திசையில் சாலையின் மற்றொரு புறத்தில் கார்த்திக் கடை வைத்து நடத்தி வருகிறார்.
சமீபத்தில் சுடர் வடிவேலு பூக்கடையை விரிவாக்கம் செய்தார். அப்போது சாலையை ஒட்டி விபத்தை ஏற்படுத்தும் வகையில் ஆக்கிரமித்து கட்டியிருப்பதாக கார்த்திக் அவரிடம் சத்தம் போட்டுள்ளார். அதற்கு சுடர் வடிவேலுவும் பதிலுக்கு சத்தம் போட்டுள்ளார்.
ஒருகட்டத்தில் கார்த்திக் தனது ஆதரவாளர்களுடனும், சுடர் வடிவேலு தனது ஆதரவாளர்களுடனும் என இருதரப்பாக பிரிந்து 2 நாட்களுக்கு முன்பு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் கார்த்திக் ஆத்திரம் அடைந்துள்ளார். வெளியூரில் இருந்து வந்து சொந்த ஊரை சார்ந்த தன்னையே சுடர் வடிவேலு எதிர்க்கிறார் என்று கருதிய கார்த்திக், அவரை கொலை செய்ய திட்டமிட்டார்.
அதன்படி நேற்று முன்தினம் இரவு கார்த்திக், தனது கூட்டாளிகளான அதே பகுதியில் வசிக்கும் கணேசன்(30), மணி வண்ணன் (28), அருள் பாண்டியன், உதயகுமார் ஆகியோரை காரில் அழைத்துக்கொண்டு சுடர் வடிவேலு வீட்டுக்கு சென்றுள்ளார்.
அங்கு தனியாக இருந்த சுடர் வடிவேலுவை சரமாரியாக அரிவாளால் வெட்டிக்கொலை செய்து விட்டு அந்த கும்பல் தப்பிச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து கார்த்திக் மற்றும் அவரது கூட்டாளிகள் 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய கார், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.






