என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

"மாநிலத் தலைவராகவே இருந்தாலும் கூட்டணி கட்சிகள் குறித்து பொதுவெளியில் பேசக்கூடாது" - கே.சி.வேணுகோபால்
- நாங்கள் ஒன்றாக இருந்தோம், ஒன்றாகவும் இருக்கிறோம்
- யாருக்கும் பொதுவெளியில் பேசுவதற்கு உரிமை கிடையாது.
தமிழ்நாட்டில் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், திமுக தலைமையிலான கூட்டணியில் "ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு" என்ற விவகாரம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இது வார்த்தை மோதலாகவும் நீடித்து வருகிறது. குறிப்பாக காங்கிரஸ் எம்.பி.மாணிக்கம் தாகூர் இதுதொடர்பாக கருத்து தெரிவித்து வருவது காங்கிரஸ்-திமுக இடையே மட்டுமல்லாமல் கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளிடையேயும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் மாணிக்கம் தாகூர் தொடர்பாக தலைமையிடம் பேசு முடிவெடுக்கப்படும் என மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்திருந்தார். இச்சூழலில், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் இன்று சென்னை மற்றும் புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
நிகழ்ச்சிகளை தொடர்ந்து முகப்பேரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இந்த சலசலப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பேசிய அவர்,
"காங்கிரசும் திமுகவும் நீண்டகால கூட்டாளிகள். பாசிச சக்திகளுக்கு எதிரான போராட்டத்தில் திமுக-காங்கிரஸ் ஒன்றாக உள்ளது. பொதுவான பிரச்சினைகளில் கூட்டணி வைத்து, பாசிச சக்திகளை எதிர்த்துப் போராட... வகுப்புவாத சக்திகளுக்கு எதிராகப் போராடும் பாரம்பரியம் எங்களுக்கு உண்டு. நாங்கள் ஒன்றாக இருந்தோம், ஒன்றாகவும் இருக்கிறோம். நிச்சயமாக, சட்டமன்றத் தேர்தல்கள் வருகின்றன... நாங்கள் செயல்பாட்டில் இருக்கிறோம், எங்கள் மக்களுக்கும் அரசியல் லட்சியம் உள்ளது காங்கிரஸில் இருந்து வெவ்வேறு குரல்கள் எழுந்தாலும் நாங்கள் ஒன்றாகத்தான் இருக்கிறோம். தெளிவான கூட்டணி விவாதம் இருக்க வேண்டும். விவாதத்திற்காக நாங்கள் காத்திருக்கிறோம். அது எப்போது தொடங்கும் என்பதை திமுக எங்களுக்குத் தெரிவிக்கும் என்று நினைக்கிறேன்". என தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர்,
"காங்கிரஸ் கட்சிக்குள் உள்ள 'வெவ்வேறு குரல்களைப்' பொறுத்தவரை, நான் திட்டவட்டமாகச் சொல்ல விரும்புகிறேன். கூட்டணி குறித்து வெளிவரும் கருத்துகள், அவரவர்களின் தனிப்பட்ட கருத்து. அது கட்சியின் கருத்து அல்ல. இறுதி முடிவு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியால் எடுக்கப்படும். தமிழ்நாடு கூட்டணி குறித்து உயர்மட்டக் குழுவால் இறுதி முடிவு எடுக்கப்படும். தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் உள்ளோம். கலந்தாலோசிக்க காத்திருக்கிறோம். யாருக்கும் கூட்டணி கட்சிகள் குறித்து பொதுவெளியில் பேசுவதற்கு உரிமை கிடையாது. இப்போது தெளிவாக சொல்லிக்கொள்கிறேன். மாநிலத் தலைவர்கள் உட்பட யாருக்கும் கூட்டணி கட்சிகள் குறித்து பொதுவெளியில் கருத்து தெரிவிக்க உரிமை கிடையாது." என தெரிவித்தார்.






