என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மோடிக்கு முரட்டு அடிமையாக இபிஎஸ் இருக்கிறார் - மேற்கு மண்டல மாநாட்டில் உதயநிதி பேச்சு
    X

    மோடிக்கு முரட்டு அடிமையாக இபிஎஸ் இருக்கிறார் - மேற்கு மண்டல மாநாட்டில் உதயநிதி பேச்சு

    • பா.ஜ.க.வின் கலவர அரசியல் ஒருபோதும் எடுபடாது.
    • சங்கிக்கூட்டத்தின் முகத்தில் மக்கள் கரி பூசுவது உறுதி

    கோவை, கருமத்தம்பட்டியில் தி.மு.க இளைஞர் அணி மேற்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு எழுச்சியுடன் தொடங்கியது.

    இந்த மாநாட்டில் தி.மு.க இளைஞரணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு நிர்வாகிகளிடம் உரையாற்றினார்.

    மாநாட்டில் பேசிய உதயநிதி, "இன்றைக்கு மேற்கு மண்டல இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பில் கோவையில் உங்களையெல்லம் சந்தித்து பேசுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஏற்கனவே திருவண்ணாமலையில் டிசம்பர் மாதம் வடக்கு மண்டல நிர்வாகிகளைச் சந்தித்தோம். அதன் பிறகு விருதுநகரில் தெற்கு மண்டல நிர்வாகிகளை எல்லாம் சந்தித்தோம். அந்த நிகழ்ச்சிகளுக்கெல்லாம் நம் கழகத் தலைவர் முதலமைச்சர் அவர்கள் வந்து நிர்வாகிகளைச் சந்தித்து வாழ்த்துச் சொன்னார்கள். இன்றைக்குப் பல்வேறு பணிச்சூழல் காரணமாக கழகத் தலைவர் அவர்களால் வர முடியவில்லை. அதனால் உங்களையெல்லாம் சந்திப்பதற்காக நான் வந்திருக்கிறேன்.

    நிச்சயம் உங்களுக்கு ஒரு வாக்குறுதி கொடுப்பேன். நம் கழகத் தலைவர் அவர்கள் மீண்டும் முதல்வராக வென்று இந்த மேற்கு மண்டலத்தின் நன்றி அறிவிப்பு நிகழ்ச்சியில், வெற்றி விழாவில் நிச்சயமாகக் கலந்துகொண்டு உங்களையெல்லாம் சந்திப்பார். இன்றைக்குத் தலைவர் அவர்கள் நிகழ்ச்சிக்கு வரவில்லை என்றாலும் அவரின் எண்ணம் முழுவதும் இந்த இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு எப்படி நடந்துகொண்டிருக்கும் என்பதுதான் தலைவர் அவர்கள் யோசித்துக்கொண்டிருப்பார்.

    இந்த மேற்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பை இவ்வளவு சிறப்பாகக் கிட்டத்தட்ட ஒரு மாநாடு போல நடத்திக் கொண்டிருக்கக்கூடிய மண்டலப் பொறுப்பாளர் அண்ணன் செந்தில் பாலாஜி அவர்களுக்கும், மாநாட்டின் வெற்றிக்காகக் கடந்த பத்து பதினைந்து நாட்களாகக் கடுமையாக உழைத்த அனைத்து மாவட்ட கழகச் செயலாளர்களுக்கும் பொறுப்பாளர்களுக்கும் அனைத்து அமைப்பாளர்களுக்கும் இந்தப் பகுதியின் மாவட்ட கழகச் செயலாளர் அண்ணன் தளபதி முருகேசன் அவர்களுக்கும், செந்தமிழ்ச்செல்வன் அவர்களுக்கும், அண்ணன் தொண்டாமுத்தூர் ரவி அவர்களுக்கும் அனைத்து நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இளைஞர் அணியின் மாநில துணைச் செயலாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் அனைத்து நிர்வாகிகளுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இன்றைக்கு மேற்கு மண்டலத்தில் உள்ள 16 கழக மாவட்டங்கள், 39 தொகுதிகளில் இருந்து சுமார் 80 ஆயிரம் இளைஞர் அணி நிர்வாகிகள் நீங்கள் வந்திருக்கிறீர்கள். உங்களின் எழுச்சியைப் பார்க்கும்பொழுது ஒன்று மட்டும் உறுதி, வெஸ்டிலும் தி.மு.க தான் பெஸ்ட் என்பதை இந்தக்கூட்டம் நிச்சயம் நிரூபித்துக் காட்டும். அதற்கு உங்களின் எழுச்சியே உதாரணம், சாட்சி.

    இன்றைக்கு இந்தியாவிலேயே எந்த ஒரு அரசியல் கட்சியும் செய்யாத ஒரு பணியை இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பை மாநாடு போலத் தொடர்ந்து நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம். இன்றைக்குப் பல கட்சிகள் தமிழ்நாட்டில் எத்தனை வாக்குச்சாவடிகள் இருக்கின்றன என்று தெரியாமல் சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள், இப்பொழுதுதான் கணக்கு எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் நாம் வாக்குச்சாவடிகளுக்கு என்று இத்தனை நிர்வாகிகளை நியமனம் செய்து, தரவுகளுடன் களப்பணியில், கட்சிப்பணியில், இளைஞர் அணி பணியில் நாம் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம். இன்றைக்கு இளைஞர் அணியில் மட்டும் ஐந்து லட்சம் நிர்வாகிகளை நாம் பெற்றிருக்கிறோம். ஐம்பது லட்சம் உறுப்பினர்களைப் பெற்றிருக்கிறோம். தமிழ்நாட்டில் இல்லை, இந்தியாவிலேயே எந்த இயக்கத்தின் ஒரு அணிக்கும் இப்படிப்பட்ட சிறப்பு கிடையவே கிடையாது.

    நம் இளைஞர் அணியைக் கழகத்தின் இராணுவம் என்று தலைவர் சொல்வது போல ஒரு கட்டுப்பாட்டோடு நடத்திக் கொண்டிருக்கிறோம். உதாரணமாகக் கடந்த ஆறு ஆண்டுகளில் மட்டும் களப்பணிகளை, கழகப் பணிகளை, மக்கள் பணிகளைச் செய்திருக்கிறோம். கடந்த ஆறு ஆண்டுகள் மட்டும் எடுத்துக்கொண்டோம் என்றால் நீர்நிலைகளைத் தூர்வாரியது, சிறுபான்மையினர் நலன் காக்க சி.ஏ.ஏ, என்.ஆர்.சி சட்டத்தை எதிர்த்தது, கொரோனா காலத்தில் மக்களைக் காப்பதற்கு உதவி எண் தொடங்கியது, மாணவர்களின் கல்வி உரிமையை காக்க நீட் ஒழிப்பு உண்ணாவிரதம், தொகுதிதோறும் கலைஞர் நூற்றாண்டு நூலகம், தொகுதிதோறும் பயிற்சி பாசறைக் கூட்டங்கள், 200-க்கு அதிகமான இளம் பேச்சாளர்களைத் தேர்வு செய்தது, வாசிப்பை மேம்படுத்த முத்தமிழறிஞர் பதிப்பகம், கழக வரலாற்றைச் சொல்கின்ற முரசொலி பாசறைப் பக்கம், கொள்கை உணர்வைக் கொண்டாட அறிவுத் திருவிழா - இப்படி எத்தனையோ பணிகளை நம் இளைஞர் அணி வெற்றிகரமாகச் செய்து முடித்திருக்கிறது என்றால், இங்கே வந்திருக்கக்கூடிய இளைஞர் அணி நிர்வாகிகள் அந்த வெற்றியின் உழைப்புக்கு முழு காரணம்.

    மெயின் மேட்ச் விளையாடுவதற்கு முன்னால் எல்லாம் நெட்டில் பயிற்சி செய்வார்கள். கழகத்தில் பணியாற்றுவதற்கு இன்று இளைஞர் அணி ஒரு பயிற்சிக் களமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதை ஏன் நான் இன்றைக்குச் சொல்கிறேன் என்றால், தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பல சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், மாநகர செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் இவர்கள் எல்லாம் இளைஞர் அணியில் பயிற்சி எடுத்துத் தாய்க்கழகத்திற்குச் சென்றவர்கள். அதற்கு இந்த மேடையே ஒரு சிறந்த உதாரணம்.

    இன்றைக்கு அமைச்சராக, கழகத்தின் துணை பொதுச் செயலாளராக இருக்கக்கூடிய அண்ணன் மு.பெ.சாமிநாதன் அவர்கள், தலைவர் இளைஞர் அணி செயலாளராக இருக்கும்போது தலைவருக்குத் துணையாக இருந்தவர். அதன் பிறகு அவரும் இளைஞர் அணியின் செயலாளராகப் பணியாற்றியவர். அதேமாதிரி நம் அமைச்சர் மதிவேந்தன் அவர்கள் இளைஞர் அணியில் பயிற்சி எடுத்தவர். நாடாளுமன்ற உறுப்பினர் பிரகாஷ் அவர்கள், கோவை மாநகர பொறுப்பாளர் அன்புச்செல்வன், நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளர் சகோதரர் ராஜேஷ் இப்படி இங்கே இருக்கக்கூடிய ஏராளமானவர்கள் இளைஞர் அணியில் பயிற்சி எடுத்தவர்கள். இன்னும் சொல்லப்போனால் இன்றைக்குத் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சரையும், முதலமைச்சரையும் கொடுத்தது கழக இளைஞர் அணி என்று சொன்னால் அதுதான் இளைஞர் அணியின் பெருமை.

    அப்படிப்பட்ட இளைஞர் அணி தந்த நம் தலைவர் அவர்கள் இன்றைக்கு ஆட்சி, அரசியல் என இரண்டிலுமே இந்தியாவுக்கே ஒரு வழிகாட்டக்கூடிய ஒரு தலைவராகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அரசியல் என்று எடுத்துக்கொண்டால் இன்றைக்கு இந்திய அளவில் பா.ஜ.க-வுக்கு எதிரான ஒரு ஜனநாயகப் போரை நம் தலைவர் தலைமையில் நடத்த வேண்டும் என்று இந்தியாவில் இருக்கக்கூடிய மற்ற மாநிலத் தலைவர்கள் எல்லாம் பேச ஆரம்பித்துவிட்டார்கள். ஆட்சியைப் பொறுத்தவரைக்கும் நம் தலைவர் அவர்கள் எண்ணற்ற திட்டங்களைக் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்.

    ஒரு சில திட்டங்களை மட்டும் இங்கே நினைவுபடுத்த விரும்புகிறேன். 2021-இல் ஆட்சிக்கு வந்ததும் நம் தலைவர் இட்ட முதல் கையெழுத்து மகளிருக்கான விடியல் பயணத் திட்டம். அடுத்து பள்ளிக் குழந்தைகளுக்கான முதலமைச்சர் காலை உணவுத் திட்டம், கல்லூரி மாணவர்களுக்காக புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம், நான் முதல்வன் திட்டம். 10 லட்சம் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்குகின்ற திட்டம். இவை அனைத்தையும் விட இன்றைக்கு இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த ஒரு திட்டம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம். ஒவ்வொரு மாதமும் ஒரு கோடியே 31 லட்சம் மகளிருக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் நம் முதலமைச்சர் அவர்கள் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

    குறிப்பாக இந்த மாதம் நம் முதலமைச்சர் அவர்கள் மகளிருக்கெல்லாம் மிகப்பெரிய ஒரு சர்ப்ரைஸ் (Surprise) கொடுத்தார். எதிர்க்கட்சிகளுக்கு மிகப்பெரிய ஓர் ஷாக்கை (Shock) கொடுத்தார். மகளிரின் வங்கிக் கணக்கில் காலையில் 6 மணிக்கு எழுந்து பார்த்தால் திடீரென்று 5,000 ரூபாய் வரவு வைத்துவிட்டார். இது மகளிருக்கு மிகப்பெரிய ஆச்சரியம், அடிமைகளுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி. என்ன காரணம்? பா.ஜ.க, அதன் அடிமைக் கூட்டம், பாசிசக் கூட்டம் சட்டமன்றத் தேர்தல் வருகிறது, அதைக் காரணம் காட்டி நீதிமன்றத்திற்கு சென்று எப்படியாவது அடுத்த மூன்று மாதங்களுக்கு இந்த உரிமைத் தொகையை நிறுத்திவிடலாம் என்று முயற்சி செய்தார்கள். நம் தலைவர் 'என்னுடைய தமிழ்நாட்டு மகளிருக்கு நான் கொடுக்கக்கூடிய 1,000 ரூபாயை நீ தடுக்க முயற்சி செய்கிறாயா? இதோ நான் கொடுக்கிறேன் ஒவ்வொருவருக்கும் 5,000 ரூபாய்' என்று கொடுத்திருக்கிறார் நம் தலைவர் முதலமைச்சர் அவர்கள். அதுமட்டுமல்லாமல் கோடைக்கால சிறப்பு நிதியாக 2,000 என்று 5,000 ரூபாய் சேர்த்துத் கொடுத்திருக்கிறார்.

    இன்னொரு வாக்குறுதியும் கொடுத்திருக்கிறார். மீண்டும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்தவுடனே, நம் தலைவர் முதலமைச்சர் ஆனவுடன் மகளிர் உரிமைத் தொகையை 1,000 ரூபாயிலிருந்து 2,000 ரூபாயாக உயர்த்திக் கொடுப்பேன் என்கின்ற வாக்குறுதியையும் இன்றைக்குக் கொடுத்திருக்கிறார். இதுதான் நம் ஆட்சிக்கும் சங்கிக் கூட்டத்திற்கும் இருக்கக்கூடிய ஒரு வித்தியாசம்.

    அதிலும் தலைவர் 7 மணிக்கு வரவு வைத்தார். நம் தமிழ்நாட்டு மகளிர் 9 மணிக்கெல்லாம் வங்கிக்குப் சென்று பணத்தை எடுத்துவிட்டார்கள். அந்த அளவுக்கு ஒன்றிய அரசு மீது தமிழ்நாட்டு மக்களுக்கு, மகளிருக்கு பயம். குறிப்பாக நீங்கள் ஒன்று நினைவு வைத்துக்கொள்ள வேண்டும். ஒன்றிய பிரதமர் மோடி அவர்கள் அவ்வப்போது தொலைக்காட்சியில் வருவார். அவர் எப்போது தொலைக்காட்சியில் வந்தாலும், டிவியில் வந்தாலும் மக்கள் ஒரு விதமான பயத்திற்குச் சென்றுவிடுவார்கள். இந்த முறை என்ன சொல்லப் போகிறாரோ என்று மக்கள் பயந்துவிடுவார்கள்.

    ஏனென்றால் 2020-இல் உங்களுக்கு ஞாபகம் இருக்கும், ஒரு நாள் திடீரென்று தொலைக்காட்சியில் தோன்றி 'கொரோனா வரப்போகிறது, அதைச் சமாளிப்பதற்கு ஒரே வழிதான், எல்லாரும் வீட்டுக்குள் ஒரு மாதம் ஒளிந்துகொள்ளுங்கள்' என்று சொல்லிவிட்டுப் சென்றுவிட்டார். அதுமட்டுமல்லாமல் உங்களுக்கு இன்னொன்று ஞாபகம் இருக்கும், 2016-ஆம் ஆண்டு இதே மாதிரி திடீரென்று டிவியில் வந்தார். 'பண மதிப்பிழப்பு' என்று சொல்லி எல்லாரிடமும் இருக்கின்ற 500 ரூபாய் 1,000 ரூபாய் செல்லாது என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். அன்றைக்கு எவ்வளவு மக்கள், நூற்றுக்கணக்கான மக்கள் வெயிலில் நின்று இறந்தார்கள். இதுதான் நம் தலைவர் தொலைக்காட்சியில் வந்தால் மக்கள் மகிழ்ச்சியோடு பார்க்கிறார்கள். இதுதான் நம் தலைவருக்கும் ஒன்றிய பிரதமருக்குமான வித்தியாசம்.

    அதுமட்டுமல்லாமல் மக்களிடம் இருப்பதைப் பிடுங்குகின்ற ஆட்சி ஒன்றிய பா.ஜ.க ஆட்சி. மக்களுக்கு எப்போதுமே கொடுக்கின்ற ஆட்சி நம் திராவிட மாடல் ஆட்சி. இப்படிப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துவதனால்தான் இன்றைக்கு நம் முதலமைச்சர், நம் தமிழ்நாடு 11.19 சதவிகித வளர்ச்சியோடு இன்றைக்கு இந்தியாவிலேயே தலைசிறந்த மாநிலமாக இருக்கிறது. அதற்கு என்னவெல்லாம் இடைஞ்சல் செய்யலாம் என்று இன்றைக்குத் திட்டம் போட்டு ஒன்றிய பா.ஜ.க அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

    மொழியுரிமை, கல்வியுரிமை, நிதியுரிமை என்று ஒவ்வொரு உரிமையையும் பறிக்கப் பார்க்கிறார்கள். 'புதிய கல்விக் கொள்கை' என்று கொண்டு வந்து தமிழ்நாட்டிற்குள் இந்தியையும் சமஸ்கிருதத்தையும் நுழைக்கப் பார்க்கிறார்கள். இதுவரைக்கும் தமிழ்நாடு பக்கமே எட்டிப் பார்க்காத திரு. அமித்ஷா அவர்களும் திரு. மோடி அவர்களும் தேர்தல் வருகிறது என்ற உடனே வர ஆரம்பித்து இருக்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் மட்டும்தான் வருவார்கள், தமிழ்நாட்டிற்கு எந்த நிதியும் வராது, எந்தத் திட்டமும் வராது.

    சமீபத்தில் ஒன்றிய அரசு பட்ஜெட் தாக்கல் செய்தது. அந்தத் பட்ஜெட்டை பார்த்தீர்கள் என்றால் தமிழ்நாட்டிற்கு எந்தத் திட்டத்தையும் ஒதுக்கவில்லை. ஆனால் அவர்கள் பட்ஜெட்டை முழுமையாக வாசித்து முடிப்பதற்கு முன்னாலேயே தமிழ்நாட்டிலிருந்து ஒரு பாராட்டுக் குரல். யாரு? எதிர்க்கட்சித் தலைவர் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்கள். அதனால்தான் 'பட்ஜெட் சிறப்பு' என்று 'டயர் புகழ்' பழனிசாமி இன்றைக்கு பயர் விட்டிருக்கிறார். அதனால்தான் அடிக்கடி சொல்வேன், அரசியலில் நாம் பல முரட்டு பக்தர்களைப் பார்த்திருப்போம், முரட்டுத் தொண்டர்களைப் பார்த்திருப்போம், ஆனால் இன்றைக்கு ஒரு முரட்டு அடிமையாகத் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்கள் திரு. மோடி அவர்களுக்கு மாறியிருக்கிறார்.

    நீங்கள் தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள், மூன்று நாட்களுக்கு முன்பு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஒரு திரையரங்கிற்கு சென்று படம் பார்க்கிறார். திரு. எம்.ஜி.ஆர் அவர்கள் நடித்த படம். பார்த்துவிட்டு அப்படியே கண்கலங்குகிறார், அழுகிறார். நான் யோசித்துப் பார்த்தேன், இந்நேரம் திரு. எம்.ஜி.ஆர் அவர்கள் உயிரோடு இருந்திருந்தால், இவரைப் பார்த்து 'என் கட்சியை இப்படி ஆக்கிவிட்டீர்களே' என்று பார்த்து எப்படி அழுதிருப்பார் என்று யோசித்துப் பார்த்தேன். 2019-இல் அ.தி.மு.க-வை பா.ஜ.க-வுக்கு அடகு வைத்தார். 2021-இல் அ.தி.மு.க-வை பா.ஜ.க-வுக்கு குத்தகைக்கு விட்டார். இப்போது 2026-இல் அ.தி.மு.க-வை பா.ஜ.க-வுக்கு மொத்தமாக விற்றுவிட்டார். தன் சுயநலத்திற்காக எடப்பாடி பழனிசாமி அவர்கள் அ.தி.மு.க-வை அழிவுப் பாதையில் கொண்டு செல்கிறார்.

    ஆனால் நம் தலைவர் அவர்கள் நம் தமிழ்நாட்டை அறிவுப் பாதையில் அழைத்துச் சென்று கொண்டிருக்கிறார். அதனால்தான் சங்கிகளுக்குத் தமிழ்நாட்டைப் பார்த்தாலே எப்போதுமே ஒரு வயிற்றெரிச்சல். ஒரு இயக்கத்தை எப்படியாவது மிரட்டலாம், உருட்டலாம் என்று ஈடி (ED), சி.பி.ஐ (CBI) இப்படிப் பல்வேறு அமைப்புகளை வைத்து மிரட்டிக்கொண்டு இருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் நம் தலைவர் அவர்கள் நேற்று மதுரையில் தெளிவாக ஒரு பதில் சொன்னார்கள். 'என்ன வழக்குதானே போடுவீர்கள்? தி.மு.க உடன்பிறப்புகள் பார்க்காத வழக்குகளா? மொழிப்போரில் இராணுவத்தையே எதிர்த்து நின்ற இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். மிசாவை பார்த்த இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம், நம் தலைவர் அவர்கள். உயிரே போனாலும் எங்களின் சுயமரியாதையை நாங்கள் என்றைக்கும் விட்டுக்கொடுக்க மாட்டோம். தமிழ்நாட்டின் உரிமைகளை என்றைக்கும் விட்டுக்கொடுக்க மாட்டோம். அதனால்தான் அடிக்கடி நான் சொல்வேன், நாங்கள் ஈடிக்கும் பயப்பட மாட்டோம், மோடிக்கும் பயப்பட மாட்டோம். மோடி அல்ல, மோடியின் டாடி வந்தாலும் நாங்கள் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம்.

    இந்த லட்சணத்தில் திரு. மோடி அவர்கள் தமிழ்நாட்டிற்கு வந்து பேசுகிறார், என்ன? டபிள் என்ஜின் சர்கார் வேண்டுமாம். தமிழ்நாட்டின் இன்ஜின் பலமான ஒரு திராவிட மாடல் என்ஜின். இது எப்போதுமே தனிப் பாதையில் முன்னேறிப் போய்க்கொண்டிருக்கிற இயந்திரம். நம்மிடம் இருக்கின்ற என்ஜின் வளர்ச்சி என்ஜின், நம்மிடம் இருக்கின்ற இயந்திரம் மேம்பாட்டு என்ஜின், நம்மிடம் இருக்கின்ற இயந்திரம் முற்போக்கு என்ஜின். இன்றைக்கு மகளிருக்கான விடியல் பயணத் திட்டத்தைத் திரு. மோடி அவர்கள் விமர்சனம் செய்கிறார்.

    'மகளிர் எல்லாரும் பேருந்தில் போய்விடுகிறார்களாம், அதனால் மெட்ரோவுக்குக் கூட்டம் வருவதில்லை என்று சொல்கிறார் திரு. மோடி அவர்கள். ஆனால் அதே மெட்ரோவுக்கு நாம் நிதி கேட்கும்போது கோயம்புத்தூருக்கும் மதுரைக்கும் நிதி கேட்டோம், அந்த மெட்ரோ நிதியை ஒன்றிய அரசு ஒதுக்கவில்லை. இதில் மகளிர் விடியல் பயணத்தை எப்படியாவது ரத்து செய்ய வேண்டும் என்று திரு. மோடி அவர்கள் விமர்சனம் செய்கிறார். நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள் ஒரு பழமொழி, 'ஜாடிக்கு ஏற்ற மூடி' என்று சொல்வார்கள். அது மாதிரி இன்றைக்கு மோடிக்கு ஏற்ற ஒரு அடிமையாக எடப்பாடி பழனிசாமி அவர்கள் கிடைத்திருக்கிறார்.

    இன்றைக்கு பா.ஜ.க-வின் நோக்கம் மக்களை எப்படியாவது தொந்தரவு செய்து வெறுப்பைப் பரப்ப வேண்டும். அதனால்தான் ஒவ்வொரு மாநிலமாக வெறுப்பு அரசியலைப் பரப்பிக்கொண்டு இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் வாலாட்டலாம் என்று முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்கள். நிச்சயம் நம் தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் என்ற மகத்தான தலைவர் இருக்கின்ற வரைக்கும் பா.ஜ.க-வின் கலவர அரசியலைத் தமிழ்நாட்டு மக்கள் என்றைக்கும் உள்ளே நுழைய விடமாட்டார்கள். சென்ற வாரம் காரைக்காலுக்கு வந்த திரு. அமித்ஷா அவர்கள், ஒரு சுவரில் பெயிண்ட் அடித்துக்கொண்டு இருந்தார். நீங்கள் எவ்வளவுதான் பெயிண்ட் அடித்தாலும் சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் உங்களின் சங்கிக் கூட்டத்தின் முகத்தில் கரியைத் தான் பூசுவார்கள்.

    இப்போது நடப்பது எட்டு கோடி மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கின்ற ஒரு போர். பாசிஸ்டுகள், அடிமைகள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து வருகிறார்கள். தமிழ்நாட்டை எப்படியாவது சீரழிக்க வேண்டும் என்று முயற்சி செய்கிறார்கள். அதைத் தடுக்க வேண்டிய பொறுப்பு இளைஞர் அணி நிர்வாகிகள் உங்களின் கைகளில் இருக்கிறது. நிர்வாகிகளுக்கெல்லாம் ஒரு அன்பு வேண்டுகோள். உங்களின் வீட்டை முதலில் அரசியல் படுத்துங்கள். தினமும் உங்கள் வீட்டில் இருப்பவர்களோடு அரசியல் பேசுங்கள், விவாதம் செய்யுங்கள். டெல்லி பாசிஸ்டுகளும் உள்ளூர் அடிமைகளும் தமிழ்நாட்டிற்கு என்னவெல்லாம் துரோகம் செய்திருக்கிறார்கள் என்று எடுத்துச் சொல்லுங்கள். உங்களின் வாழ்க்கையை முதலில் நீங்கள் நன்றாக உறுதியாகப் புரிந்துகொள்ளுங்கள். குடும்பம் மிக மிக முக்கியம். அதைவிட முக்கியம் உங்களின் அடுத்த தலைமுறையினர். அதனால்தான் நாம் இத்தனை விஷயங்களையும் போராடிச் செய்துகொண்டு இருக்கிறோம்.

    வீடு நன்றாக இருந்தால்தான் நாடு நன்றாக இருக்கும் என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் நமக்குச் சொல்லியிருக்கிறார்கள். இதையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு இளைஞர் அணி நிர்வாகிகள் நீங்கள் பணியாற்ற வேண்டும். ஒவ்வொரு வீடாகப் போய்க் கழகத்தின் கொள்கைகளையும் அரசின் திட்டங்களையும் சாதனைகளையும் எடுத்துக் கூறுங்கள்.

    சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் வெறும் 50 நாட்கள்தான் இருக்கின்றன. இந்த 50 நாட்களுக்கு நீங்கள் கொடுக்கப்போகின்ற உங்களின் உழைப்பு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குத் தமிழ்நாட்டைக் காப்பாற்றப்போகிறது என்பதை மனதில் வைத்துக்கொண்டு உங்களின் பணிகளைச் செய்யுங்கள்.

    இந்தத் தேர்தல் தமிழ்நாட்டுக்கும் டெல்லிக்கும் இடையே நடக்கின்ற ஒரு ஜனநாயகப் போர். இந்தப் போரில் தமிழ்நாடு நிச்சயம் வெற்றிப் பெற்றுக் காட்டும். டெல்லிக்கு என்றைக்கும் அவுட் ஆப் கண்ட்ரோல் தமிழ்நாடு என்பதைத் தமிழ்நாட்டு இளைஞர்கள் நிரூபித்துக் காட்ட வேண்டிய நேரம். அதற்கு இளைஞர் அணி நிர்வாகிகள் உங்களின் உழைப்பு மிக மிக முக்கியமானதாக இருக்க வேண்டும்.

    நான் அடிக்கடி சொல்வது உண்டு. இளைஞர் அணியில் சரியாக உழைத்தீர்கள் என்றால் உங்களுக்கான அங்கீகாரத்தை நம் தலைவர் அவர்கள் நிச்சயம் சரியான நேரத்தில் கொடுப்பார். இந்தத் தேர்தலில் இளைஞர்களுக்கு அதிகமான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று தலைவரிடம் என் வேண்டுகோளைப் பலமுறை வைத்திருந்தேன். நிச்சயம் தலைவர் அவர்கள் கொடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதனால் உற்சாகமாக வேலை செய்யுங்கள். இன்றைக்குச் சில பேர் நம் இயக்கத்தை அழித்துவிடலாம் என்று பகற்கனவு கண்டுகொண்டு இருக்கிறார்கள். நம்மை யாராலும் எந்த நேரத்திலும் அழிக்க முடியாது. பேரறிஞர் அண்ணா அவர்கள் ஏற்கனவே இதற்கான ஒரு பதிலைக் கொடுத்திருக்கிறார்.

    பேரறிஞர் அண்ணா சொன்னது: "எங்களை அழித்துப் புதைக்கலாம் என்று நீங்கள் நான்கு அடிக்கு ஒரு குழியை வெட்டுவீர்கள். நீங்கள் குழியை வெட்டுவதற்குள் நாங்கள் ஆறு அடி வளர்ந்திருப்போம். உடனே எங்களுக்காக ஆறு அடிக்கு ஒரு குழியை வெட்டுவீர்கள். நீங்கள் குழியை வெட்டுவதற்குள் நாங்கள் எட்டு அடி வளர்ந்திருப்போம். உடனே எங்களுக்காக எட்டு அடிக்கு ஒரு குழியை வெட்டுவீர்கள். அதற்குள் நாங்கள் பதினாறு அடி வளர்ந்திருப்போம். நீங்கள் எங்களை வெட்ட நினைத்தீர்கள் என்றால் நாங்கள் வளர்ந்துகொண்டே இருப்போம்." என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் நம் கழக இளைஞர் அணியைப் பார்த்துச் சொன்னார். அதேபோல உங்களுக்கு நாங்கள் சொல்வதெல்லாம் இத்தனை லட்சக்கணக்கான உடன்பிறப்புகள் இருக்கின்ற வரை நாங்கள் வளர்ந்துகொண்டே தான் இருப்போமே தவிர உங்களால் எங்களை அழிக்கவே முடியாது. இங்கே கூடியிருக்கக்கூடிய லட்சக்கணக்கான இளைஞர் அணி தம்பிமார்கள் சார்பாக நான் மீண்டும் சொல்கிறேன்.

    எங்களின் உதயசூரியன் என்பது வெறும் ஏதோ சுவரில் வரைந்து வைக்கின்ற சின்னம் கிடையாது. கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவரின் இதயத்திலும் இரத்தத்திலும் ஊறிப்போன சின்னம் உதயசூரியன். அண்ணா கண்டெடுத்த சின்னம் உதயசூரியன். கலைஞர் கட்டி காத்த சின்னம் உதயசூரியன். தலைவர் அவர்களால் வெற்றியை மட்டுமே பெற்றுக் கொண்டிருக்கக்கூடிய சின்னம் உதயசூரியன். உயிர் போனாலும் போகுமே தவிர உதயசூரியன் எங்களை விட்டுப் போகாது. எத்தனை பேர் வந்தாலும் யார் எங்களை எதிர்த்து நின்றாலும் களத்தில் ஜெயித்து மீண்டும் ஆட்சி அமைக்கப் போவது உதயசூரியன்தான்.

    நம் தலைவர் அவர்கள் நமக்கு ஒரு இலக்கு கொடுத்திருக்கிறார்கள் 'வெல்வோம் 200, படைப்போம் வரலாறு' என்று. நம் இளைஞர் அணி தம்பிமார்கள் அடுத்த 50 நாட்கள் களத்தில் இறங்கிப் பிரச்சாரத்தை மேற்கொண்டீர்கள் என்றால், நம் பணிகளைச் சரியாகச் செய்தீர்கள் என்றால் 200 அல்ல, 200-க்கும் அதிகமான தொகுதிகளில் நிச்சயம் திராவிட முன்னேற்றக் கழகம், நம் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும்.

    எனவே அந்த இலக்கை மனதில் வைத்துக்கொண்டு ராக்கெட் வேகத்தில் நம் வேலைகளை நாம் செய்ய வேண்டும். ஆகவே 10 தோல்வி பழனிசாமியையும் மொத்த தோல்வி மோடியையும் மீண்டும் நீங்கள் விரட்டி அடிக்க வேண்டும். கழக அணியின் வெற்றிக் கணக்கு இந்த மேற்கு மண்டலத்திலிருந்து தொடங்க வேண்டும். கழகம் ஏழாவது முறையாக ஆட்சி அமைக்க வேண்டும். நம் தலைவர் இரண்டாவது முறையாக முதலமைச்சர் நாற்காலியில் அமர வேண்டும் என்றால் நீங்கள் ஒவ்வொருவரும் இரவு பகல் பார்க்காமல் பணியாற்றுங்கள். மேற்கு மண்டல இளைஞர் அணி நிர்வாகிகள் உங்களிடம் இருக்கின்ற உற்சாகத்தைப் பார்க்கும்பொழுது நம் வெற்றி நிச்சயம் உறுதி என்பதை இங்கே சொல்லிக்கொள்கின்றேன்.

    சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்கு இளைஞர் அணியின் பங்கு மிக மிக முக்கியக் காரணமாக இருக்க வேண்டும். உங்கள் அத்தனை பேருடைய பணிகளும் சிறக்கட்டும். பல்வேறு மாவட்டங்களில் இருந்து, பல்வேறு தூரங்களில் இருந்து, பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருக்கிறீர்கள். நான் உங்களிடம் தயவுசெய்து கேட்டுக்கொள்வதெல்லாம் திரும்பிப் போகும்போது மிகுந்த பாதுகாப்போடு கவனமாக உங்களின் பயணத்தை நீங்கள் அமைத்துக்கொள்ளுங்கள். அடுத்த பிரச்சாரத்திலும் கழகத்தின் வெற்றி விழாவிலும் மீண்டும் உங்களை எல்லாம் சந்திக்கிறேன். வெல்வோம் ஒன்றாக, தலைவர் தொடரட்டும். தமிழ்நாடு வெல்லட்டும்" என்று தெரிவித்தார்.

    Next Story
    ×