என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

எழுத்தாளர்களுக்கு எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது திராவிட மாடல் அரசு- முதலமைச்சர் பெருமிதம்
- புத்தகங்கள் பறிமாற்றத்தை ஒரு இயக்கமாகவே முன்னெடுத்து வருகிறோம்.
- தினமும் ஒரு மணி நேரம் புத்தகம் வாசிப்பதை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.
சென்னையில் 49வது புத்தகக் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பின்னர் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டின் அனைத்து இடங்களிலும் அரசின் முயற்சியால் புத்தகக் கண்காட்சி நடக்கிறது. புத்தக வாசிப்பை ஊக்குவிக்க திராவிட மாடல் அரசு எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.
சென்னை புத்தகக் காட்சிக்கு ஆண்டுக்கு ரூ.25 லட்சம், தமிழ்நாடு அரசு வழங்குகிறது. தமிழகத்தில் பழைய நூலகங்கள் மற்றும் நூல்கள் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
ரூ.218 கோடி செலவில் மதுரையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகம்தான் நான் நினைத்து நினைத்து பெருமைப்படக்கூடிய ஒன்று.
திருச்சியில் காமராஜர் அறிவுலகம், கோவையில் பெரியார் அறிவுலகம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலைய வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை புத்தகக்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
அறிவுப்புரட்சிக்கு முக்கியமானது புத்தகங்கள். என்னை சந்திக்க வருவோர் அளித்த சுமார் 4 லட்சம் புத்தகங்கள் இளைஞர்கள் படிப்பு வட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர்களுக்கு எண்ணற்ற திட்டங்களை திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வருகிறது.
தமிழ்நாடு மட்டுமல்ல இலங்கை உள்ளிட்ட தமிழ் மக்கள் வசிக்கும் பல நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. புத்தகங்கள் பறிமாற்றத்தை ஒரு இயக்கமாகவே முன்னெடுத்து வருகிறோம்.
புத்தகக்காட்சிக்கு இன்னும் அதிகமான மக்கள் வர வேண்டும்; அறிவை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்; அவ்வகையில் புத்தகக்காட்சி செயல்படுவது பாராட்டுக்குரியது.
புத்தகக்காட்சி அரங்குகளை பார்வையிட கட்டணம் வசூலிக்காதது வரவேற்கத்தக்கது; 13 அரங்குகளோடு தொடங்கப்பட்ட புத்தகக்காட்சி இன்று 1000 அரங்குகளோடு 49ஆம் ஆண்டை எட்டியுள்ளது.
தினமும் ஒரு மணி நேரம் புத்தகம் வாசிப்பதை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.






