என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தூங்கிக் கொண்டிருப்பவர்கள் காதில் விசில் அடிக்காதீர்கள் - தவெக தொண்டர்களுக்கு செங்கோட்டையன் அறிவுரை!
- விசிலை பொறுத்தவரை எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
- விஜய் தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் ஆவதை எந்த சக்தியாலும் தடுத்து விட முடியாது.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் இன்று த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் அக்கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பேசியதாவது:-
"அரசியல் வரலாற்றில் 50 ஆண்டு காலத்திற்கு பிறகு ஒரு புதிய முகத்தை, எதிர் கால தமிழ்நாட்டை ஆளப் போகிற தமிழக வெற்றிக் கழக தலைவருடன் இணைந்து இந்த பணிகளை ஆற்றுகிற நல்ல வாய்ப்பை எனக்கு தந்து இருக்கிறார்கள். இங்கு எல்லோர் கையிலும் விசில் வைத்துக் கொண்டு இருக்கிறீர்கள். ஆனால் நாளை காவல்துறை கூட விசிலை வைக்க முடியாத சூழல் ஏற்படும்.
அதை போலத்தான் பஸ்சில் பயணம் செய்கின்ற போது கண்டக்டர் விசில் அடிக்க மாட்டார்கள் என்ற நிலையும் உருவாகும். விஜய் திரைப்படத்தில் ஹீரோ அல்ல, தமிழ்நாட்டின் எதிர்காலத்தினுடைய ஹீரோ என்பதை நாட்டு மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். 2 நாட்களுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கு ஒரு ஆளுக்கு 1000 ரூபாய். தொலை தூரத்திலே தாய்மார்கள் தூங்கிக் கொண்டிருந்தார்கள். அதில் பேசியவர்கள் தி.மு.க.வை வீழ்த்துவோம் என்று குரல் கொடுத்தார்கள். ஒருவரும் கை தட்டவில்லை.
ஆனால் தி.மு.க.வை வீழ்த்தக்கூடிய ஒரே தளபதி நம்முடைய தலைவர்தான். 10 கூட்டணி, 8 கூட்டணி ஆகியவற்றை தூள் தூளாக்குகிற சக்தி த.வெ.க. தலைவராக மட்டுமல்ல எதிர்கால தமிழ்நாட்டை ஆளப் போகிற நம்முடைய விஜய்க்குதான் உண்டு. நான் பல தலைவர்களை பார்த்து இருக்கிறேன். புரட்சித் தலைவரை பார்த்தேன். அப்போது 26 வயதில் நான் சட்டமன்ற உறுப்பினர். அப்போது உங்களை போலத்தான் நானும் இருந்தேன்.
இந்திய வரலாற்றில் யாருக்கும் இல்லாத புகழ் விஜய்க்கு இருக்கிறது. ரூ.1000 கோடி வருவாயை வேண்டாம் என்று கூறி விட்டு மக்களை காப்பதற்காக ஒரு தலைவர் இங்கு வந்திருக்கிறார் என்று சொன்னால் இந்த தலைவரின், ஆற்றல், சிந்தனை, தொலைநோக்கு பார்வையை மக்கள் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். இங்கு எந்த வீட்டை எடுத்துக் கொண்டாலும் விஜய்க்குதான் ஓட்டு உள்ளது.
கேட்காமல் கொடுக்கக்கூடிய ஒரு தலைவர் தமிழ்நாட்டில் தோன்றப் போகிறார். அவர் முதல்-அமைச்சராக வரப்போகிறார். அந்த வரலாறு படைக்கப்படும். 10 கட்சிகளின் கூட்டணியை அசைத்து விட முடியுமா? என்று நினைக்கிறார்கள். எல்லோரும் ஆடிப்போய் நிற்கிறார்கள். ஏனென்றால் அந்த இரு கட்சிகளிலும் இருக்கின்ற தலைவர்கள் தலைவர்களே அல்ல. தலைமை என்பது வேறு. இன்று இருக்கிற தலைமை ஆடிப் போய் இருக்கிறது.
இவரை தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் ஆக்குவோம் என்று மக்கள் சூளுரை ஏற்று பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். நாளை தமிழ்நாட்டில் நல்லாட்சி நடத்தக்கூடிய ஆற்றல், சிந்தனை, தொலைநோக்கு பார்வை, மனித நேயம் ஆகியவற்றுடன் சாதி மத பேதமற்ற சமுதாயத்தை தமிழகத்தில் உருவாக்கக் கூடிய ஒரே தலைவர் விஜய் மட்டும்தான். எந்த சக்தியாலும் தமிழ்நாட்டில் இனி விஜய்யை தடுத்து நிறுத்த முடியாது. அவர் தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் ஆவதை எந்த சக்தியாலும் தடுத்து விட முடியாது. நமக்கு கிடைத்திருப்பது விசில் சின்னம். நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தூங்கிக் கொண்டிருப்பவர்கள் காதில் விசில் அடித்து விடாதீர்கள். ஓட்டு போய்விடும்.
வயதாகி தடுமாறிக் கொண்டிருக்கும் பெரியவர்களிடத்தில் விசில் அடித்தால் அவர் தடுமாறி போய்விடுவார். எனவே விசிலை பொறுத்தவரை எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அங்கு 1000 ரூபாய் கொடுத்து கூட்டத்தை கூட்டுகிறார்கள். இங்கு ஒரு ரூபாய் கூட கொடுக்காமல் கூடுகிற கூட்டத்தை பார்க்கும் போது நம்மை வெல்வதற்கு எந்த சக்தியும் இனி தமிழ்நாட்டில் இல்லை என்று வரலாறு படைக்கின்ற காலம் அமையும்.
இவ்வாறு அவர் பேசி னார்.






