என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மாநில உரிமைகளை மதிக்காமல் தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசுக்கு கண்டனம் - தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம்
    X

    மாநில உரிமைகளை மதிக்காமல் தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசுக்கு கண்டனம் - தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம்

    • தமிழ்நாட்டிற்கு ரெயில்வே திட்டங்களுக்கு நிதியும் ஒதுக்காமல் வெறுக்கிறார்கள்.
    • நெல் கொள்முதல் ஈரப்பதத்தை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்த வேண்டும்.

    சென்னை:

    தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் இன்று நடந்தது. பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் எம்.பி.க்கள் திருச்சி சிவா, கனிமொழி, ஆ.ராசா, என்.ஆர். இளங்கோ, தயாநிதி மாறன், வில்சன், தமிழச்சி தங்கப்பாண்டியன், கிரிராஜன், டாக்டர் கனிமொழி, சோமு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

    * எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அதிகார துஷ்பிரயோகம் செய்யத் தூண்டுவது, எல்லாவற்றுக்கும் மேலாக கவர்னர்களை நியமித்து, பா.ஜ.க. அரசு இல்லாத மாநிலங்களில் அராஜகத்தில் ஈடுபடுவது எனக் கூட்டாட்சிக் கருத்தியலைச் சிதைக்கும் நடவடிக்கைகளைத் தனது அன்றாட "அரசு நடவடிக்கைகளாக" ஆக்கிக் கொண்டுள்ள மத்திய பா.ஜ.க அரசு, திட்டம் போட்டு தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்தை தடுத்து, நம் மாநிலத்திற்கான எந்த முத்திரைத் திட்டங்களும் தராமல் மறுத்து, அறிவிக்கப்பட்ட ஒன்றிரண்டு திட்டங்களைக்கூட முடக்கி, "ஒன்றிய-மாநில அரசு நிர்வாக ஒத்துழைப்பில்-உறவில்" ஓர் கருப்பு அத்தியாயத்தை உருவாக்கியுள்ள ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு இக்கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்து கொள்கிறது.

    * புதிய ரெயில் திட்டங்களும் இல்லை. 10 ஆண்டுகளுக்கு முன்பே அறிவிக்கப்பட்ட பல்வேறு முக்கியமான ரெயில் திட்டங்களும் செயல்படுத்தப்படுவதில்லை என்று தமிழ்நாட்டை ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்து வருகிறது.

    * தமிழ்நாட்டிற்கு ரெயில்வே திட்டங்களுக்கு நிதியும் ஒதுக்காமல் வெறுக்கிறார்கள். புதிய திட்டங்களையும் அறிவிக்க மறுக்கிறார்கள். ரெயில்வே திட்டங்களில் தமிழ்நாட்டைப் புறக்கணிக்கும் நிலையை உடனடியாக கைவிட்டு, மாநிலத்திற்கான ரெயில்வே திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்.

    * கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்கள் குறித்து மத்திய அரசு வாய் திறக்காமல் இருப்பது தமிழ்நாட்டிற்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் விரோதமான செயல் என இக்கூட்டம் தனது கண்டனத்தைப் பதிவுசெய்து, இந்த மெட்ரோ ரெயில் திட்டங்களை உடனடியாக நிறைவேற்றுவதற்கு அரசு ஒப்புதல் வழங்கிட பிரதமர் நேரிடையாகத் தலையிட வேண்டும்.

    மேலும், இந்த மெட்ரோ ரெயில் திட்டங்கள் வருவதற்கு அ.தி.மு.க. துளியளவும் துணை நிற்கவில்லை என்றாலும், "கைக்குட்டையும் கையுமாகச் சென்று" பா.ஜ.க.,வுடன் கூட்டணி வைத்துவிட்டு திரும்பிய எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி பா.ஜ.க. அரசின் வஞ்சகத்திற்குத் துணை போக வேண்டாம் என இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

    * கோவை, மதுரை விமான நிலைய விரிவாக்கம், மதுரை பன்னாட்டு விமான நிலையத் திட்டம் ஆகியவற்றிற்கு அனுமதி தர வேண்டும்.

    * கலைஞர் பல்கலைக்கழகச் சட்டமுன் வடிவுக்குக் ஜனாதிபதி ஒப்புதல் அளிக்கவும், கவர்னருக்குக் கால நிர்ணயம் செய்யவும் நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பது.

    * செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தில் விவசாயிகளைப் பாதுகாத்திட மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

    * நெல் கொள்முதல் ஈரப்பதத்தை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்த வேண்டும்.

    * கல்வியில் காவிக் கொள்கையைத் திணிக்கும் பேயாட்டத்தை நிறுத்தி ரூ. 3548.22 கோடி சமக்ர சிக்சா நிதியை உடனே விடுவிக்க வேண்டும்.

    * தொழிலாளர்களின் உரிமைகளை-அவர்களின் நலன்களைப் பாதிக்கும் வகையில் "நான்கு தொழிலாளர் சட்டத்தொகுப்புகளை" கொண்டு வந்துள்ளதையும், நாட்டிலேயே மிகச்சிறந்த தொழிலாளர் நலன் காக்கும் அமைப்புசாரா நலவாரியங்களை உருவாக்கியுள்ள தமிழ் நாட்டின் தொழிலாளர் நலத் திட்டங்களை முடக்கும் வகையில் அமைந்துள்ளதையும், நம் மாநிலத்தில் உள்ள அமைப்பு சாரா நலச் சட்டமே தொழிலாளர் நலன்களை பாதுகாக்கும் என்ற நிலையில், தமிழ்நாடு அரசின் சார்பில் எடுத்து வைத்த கருத்துகளை ஏற்று இதுவரை விலக்கு அளிக்காமலும் இருக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு இக்கூட்டம் தனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

    * இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகளை விரைவாக விடுவிப்பதற்கும் நிரந்தரத் தீர்வு காண வேண்டும்.

    * பணி நியமனம் பெற்று தற்போது ஆசிரியர்களாக பணியாற்றுபவர்களின் பணி மற்றும் பதவி உயர்வினை மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்.

    * கிராமப் புற ஏழை மக்களுக்கு முக்கியமான திட்டமாக இருக்கும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்ட நிதியை உடனடியாக தமிழ் நாட்டிற்கு வழங்க வேண்டும்.

    மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    Next Story
    ×