என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தி.மு.க. நிர்வாகி மீது தாக்குதல் - சீமான் மீது 4 பிரிவுகளில் வழக்கு!
- ரங்கனை கைது செய்ய வேண்டும் என்றும் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
- திமுக பிரமுகர் ரங்கநாதன் மீதும் இரண்டு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு
விருத்தாசலத்தில் நேற்று திமுக நிர்வாகி ரங்கநாதனை தாக்கிய விவகாரத்தில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்மீது 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் மாநாடு ஒன்றில் கலந்துகொண்டு, வீடு திரும்பிய சீமானின் காரை திமுக நிர்வாகி ரங்கன் வழிமறித்து, அவரை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த சீமான் மற்றும் அவரது தொண்டர்கள் திமுக நிர்வாகி ரங்கனை சராமாரியாக தாக்கினர். தொடர்ந்து ரங்கனை கைது செய்ய வேண்டும் என்றும் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக இன்று சீமான்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தனக்கு கொலைமிரட்டல் விடுத்ததாக ரங்கநாதன் அளித்த புகாரின்பேரில் விருத்தாசலம் காவல்நிலையத்தில் சீமான் மீது நான்கு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் நாம் தமிழர் கட்சியினர் அளித்த புகாரின்பேரில் திமுக பிரமுகர் ரங்கநாதன் மீதும் இரண்டு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.






