என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தி.மு.க. தேர்தல் அறிக்கை - பிரத்யேக செயலியை மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்
- அரசியல் கட்சிகள், முழுவீச்சில் தேர்தலுக்கான பணியை தொடங்கி இருக்கின்றன.
- கனிமொழி தலைமையில் 12 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை தி.மு.க. அமைத்துள்ளது
தமிழக சட்டசபையின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. எனவே அடுத்த சட்டசபைக்கான தேர்தலை அடுத்த ஆண்டு (2026) மே மாதத்துக்குள் நடத்தி முடிக்க வேண்டும்.சட்டசபை தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் தொடங்கி விட்டது. இது ஒருபுறம் இருக்க அரசியல் கட்சிகள், முழுவீச்சில் தேர்தலுக்கான பணியை தொடங்கி இருக்கின்றன.
தற்போதைய சூழ்நிலையில் தி.மு.க., அ.தி.மு.க., த.வெ.க. ஆகிய 3 கட்சிகளின் தலைமையிலும், நாம் தமிழர் கட்சி தனித்தும் என நான்கு முனை போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தி.மு.க. ஏற்கனவே தனது கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகள், ம.தி.மு.க. உள்ளிட்ட சில கட்சிகளுடன் இணைந்து வரும் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள உள்ளது.
கடந்த தேர்தலில் தி.மு.க.வின் தேர்தல் வெற்றிக்கு அதன் தேர்தல் அறிக்கை தான் மிக முக்கிய காரணமாகும். இந்த நிலையில், தி.மு.க.வும் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை அமைத்துள்ளது.
துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் 12 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை தி.மு.க. அமைத்துள்ளது
இந்நிலையில் தேர்தல் அறிக்கையில் பொதுமக்களின் கருத்துகளை பெறும் விதமாக பிரத்யேக செயலியை தி.மு.க. உருவாக்கி உள்ளது. இந்த செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.






