என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் அக்கா, தம்பி உயிரிழந்த சோகம்- முழு விவரம்
    X

    பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் அக்கா, தம்பி உயிரிழந்த சோகம்- முழு விவரம்

    • வேன் இடிபாடுகளை அகற்றி உள்ளே சிக்கிஇருந்த மாணவர்களை மீட்கும் முயற்சிகளில் ஈடுபட்டனர்.
    • வேன் டிரைவர் சங்கரும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    கடலூர்:

    கடலூர் அருகே இன்று காலை பள்ளி வேன் மீது ரெயில் மோதிய சம்பவம் தமிழக மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்து உள்ளது. இன்று காலை 7.40 மணிக்கு நடந்த இந்த விபத்து பற்றிய தகவல்கள் வருமாறு:-

    கடலூரில் பிரபலமான தனியார் பள்ளி ஒன்று உள்ளது. அந்த பள்ளியில் படிக்கும் கடலூர் சுற்றுப் பகுதி மாணவ-மாணவிகள் தனியார் வேன்கள் மூலம் அழைத்து வரப்படுவது வழக்கம்.

    கடலூரில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செம்மங்குப்பம் பகுதியில் இருந்தும் மாணவர்களை ஏற்றிக் கொண்டு வேன்கள் அந்த பள்ளிக்கு வருவது உண்டு. இன்று காலை சங்கர் என்ற டிரைவர் தனது வேனில் செம்மங்குப்பத்தில் இருந்து 3 மாணவர்கள் மற்றும் ஒரு மாணவியை ஏற்றிக் கொண்டு வந்தார்.

    அருகில் உள்ள மற்ற பகுதிகளுக்கு சென்று மாணவ-மாணவிகளை ஏற்றிக் கொண்டு பள்ளிக்கு செல்ல வேண்டும் என்பதால் வேகவேகமாக சென்று கொண்டு இருந்தார். காலை 7.40 மணிக்கு அவரது வேன் செம்மங்குப்பம் ரெயில்வே தண்டவாளத்தை கடக்கும் பகுதிக்கு வந்தது.

    அப்போது ரெயில்வே கேட் திறந்து இருந்ததாக தெரிகிறது. இதனால் டிரைவர் சங்கர் வேனை தண்டவாளத்தை கடந்து செல்ல ஓட்டினார். ஆனால் அந்த சமயத்தில் விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறைக்கு செல்லும் பயணிகள் ரெயில் மின்னல் வேகத்தில் வந்தது. ரெயில் வந்த சத்தம் கேட்காத நிலையில் தண்டவாளத்தின் மத்திய பகுதி வரை சென்று விட்ட டிரைவர் சங்கர் இதை கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தார்.

    வேனை ஓட்டி சென்று விடலாம் என்று வேகமாக ஓட்டினார். ஆனால் அடுத்த ஓரிரு நிமிடங்களில் அந்த பயணிகள் ரெயில் வேன் மீது பயங்கரமாக மோதியது. இதில் வேன் நிலைகுலைந்து என்ஜின் பகுதியில் சிக்கிக் கொண்டது.

    வேன் மீது ரெயில் மோதிய சத்தம் அந்த பகுதி முழுக்க கேட்டது.

    மோதிய வேகத்தில் வேனை ரெயில் இழுத்து சென்றது. சுமார் 50 மீட்டர் தூரம் பள்ளி வேன் இழுத்து செல்லப்பட்டதால் அது நொறுங்கி தகர்ந்தது. வேனுக்குள் இருந்த 3 மாணவர்களும், ஒரு மாணவியும் அலறினார்கள். ஆனால் அடுத்த சில நிமிடங்களில் வேன் இடிபாடுகளுக்குள் சிக்கி அவர்கள் ரத்த வெள்ளத்தில் மிதந்தனர்.

    இதை கண்டதும் பயணிகள் ரெயிலை டிரைவர் நிறுத்தினார். அப்போது அந்த வேன் தண்டவாளம் ஓரத்தில் நொறுங்கி அப்பளமாக சிதறியது. சத்தம் கேட்டு அந்த பகுதியில் உள்ள மக்கள் பதட்டத்துடன் சம்பவ இடத்துக்கு ஓடி வந்தனர்.

    வேன் இடிபாடுகளை அகற்றி உள்ளே சிக்கிஇருந்த மாணவர்களை மீட்கும் முயற்சிகளில் ஈடுபட்டனர். அப்போதுதான் தண்டவாளத்தில் ஒரு மாணவரின் உடல் சிதறி கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடல் சிதறி பலியான அந்த மாணவரின் பெயர் நிவாஸ். இவன் 6-ம் வகுப்பு படித்து வந்தான்.

    வேனுக்குள் சிக்கி இருந்த மாணவர்களை மீட்டபோது சாருமதி என்ற மாணவி உடல் நசுங்கி பலியாகி இருப்பது தெரிந்தது. இவர் 11-ம் வகுப்பு படித்து வந்தார். உடனடியாக மாணவன் நிவாஸ் உடலும், மாணவி சாருமதி உடலும் கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.


    வேன் டிரைவர் சங்கர்

    செழியன் (வயது15), விஸ்வேஸ் (16) என்ற 2 மாணவர்களும் படுகாயங்களுடன் வேனுக்குள் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். அவர்கள் 2 பேரும் மீட்கப்பட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதற்கிடையே வேன் டிரைவர் சங்கரும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    இவர் கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியை சேர்ந்தவர். தினமும் காலை நேரம் வேனில் கடலூர் சுற்றுப் பகுதிக்கு சென்று மாணவ-மாணவிகளை அழைத்து வருவதை வழக்கமாக வைத்திருந்தார். இன்று காலை அவரது வேன் விபத்தில் சிக்கி நொறுங்கி போனது.

    இதற்கிடையே கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த மாணவர் செழியன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் பள்ளி வேன் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.


    கதறி அழும் பெற்றோர்

    உயிரிழந்த செழியன் மாணவி சாருமதியின் சகோதரர் ஆவார். ஒரே குடும்பத்தில் அக்காவும், தம்பியும் பலியானது மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மற்றும் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். விபத்துக்கான காரணங்களை கேட்டறிந்தனர்.

    முதல் கட்ட விசாரணையில் ரெயில்வே கேட் கீப்பர் தூங்கி விட்டதால் கேட்டை மூடவில்லை என்று தெரிகிறது. கேட் மூடாததால் பள்ளி வேன் டிரைவர் தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்ததும் தெரிய வந்துள்ளது.

    ஆனால் இதை தெற்கு ரெயில்வே மறுத்துள்ளது. ரெயில்வே கேட் மூடப்பட்டதாகவும், பள்ளி வேன் டிரைவர் சங்கர் கேட்டுக்கொண்டதால் ரெயில்வே கேட்டை ஊழியர் திறந்ததாகவும் அதனால் தான் விபத்து ஏற்பட்டு இருக்கிறது என்றும் தென்னக ரெயில்வே கூறி உள்ளது.



    Next Story
    ×