என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    2538 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை வழங்குகிறார்
    X

    2538 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை வழங்குகிறார்

    • விழாவுக்கு அமைச்சர் கே.என்.நேரு முன்னிலை வகிக்கிறார்.
    • விழாவுக்கு வருகை தரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஏற்பாடு செய்துள்ளார்.

    சென்னை:

    நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக உதவிப் பொறியாளர்கள், நகரமைப்பு அலுவலர்கள், இளநிலை பொறியாளர்கள், துப்புரவு ஆய்வாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு 2538 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

    இவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நாளை காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று தலைமை தாங்கி 2538 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

    விழாவுக்கு அமைச்சர் கே.என்.நேரு முன்னிலை வகிக்கிறார். அரசு முதன்மை செயலாளர் முனைவர் கார்த்திகேயன் வரவேற்று பேசுகிறார். இதில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

    இந்த விழாவுக்கு வருகை தரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஏற்பாடு செய்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் நகராட்சி நிர்வாக துறையில் 2538 இளைஞர்களுக்கு அரசு வேலைக்கான பணி நியமன ஆணைகளை வழங்க வருகை தரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கண்டோன்மென்ட் பட்ரோடு அண்ணா சிலை அருகே நாளை (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

    மேளதாளம், பேண்டு வாத்தியம் முழங்க பிரமாண்ட வரவேற்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் கழக நிர்வாகிகள் பல்லாயிரக்கணக்கில் அணி திரண்டு வந்து பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் அறிக்கையில் கூறி உள்ளார்.

    Next Story
    ×