என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட மாநில பட்டியலில் மீண்டும் கல்வியை சேர்க்க வேண்டும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- மாநில அரசின் உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்படுகிறது. இதனால் மாநிலங்களுக்கு கடும் பாதிப்புகள் ஏற்படுகின்றன.
- மும்மொழி கொள்கை மூலம் தமிழக மாணவர்களிடம் மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சி செய்கிறது.
சென்னை:
சட்டசபையில் மாநில சுயாட்சி தொடர்பான தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முன்மொழிந்தார்.
தி.மு.க.வின் ஐம்பெரும் முழக்கங்களில் ஒன்று மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி. முதலமைச்சர்கள் கொடியேற்றுவது தொடங்கி மாநில உரிமைகளை தி.மு.க. பல சமயங்களில் நிலைநாட்டியதோடு தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அதே சமயம் மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு மாநில உரிமைகள் பறிக்கப்படுவதாக தொடர்ச்சியாக தி.மு.க. குற்றம்சாட்டி வருகிறது.
நீட் விவகாரம், மும்மொழிக்கொள்கை, நிதி பகிர்ந்தளிப்பு, பேரிடர் நிவாரணம், திட்டங்கள் என பல வகைகளில் தமிழகம் புறக்கணிக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்தும் விமர்சனங்கள் வைத்துள்ளார். மாநிலப் பட்டியலில் உள்ள விவகாரங்களிலும் மத்திய அரசு கைவைப்பதாக விமர்சனம் செய்து வருகிறார்.
குறிப்பாக எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை செயல்படவிடாமல் கவர்னர்கள் மூலம் மத்திய அரசு போட்டி அரசு நடத்துவதாக குற்றம்சாட்டினார்.
சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாவுக்கு கவர்னர் அனுமதி வழங்காத நிலையில், அதற்கு எதிராக தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கில் கவர்னரின் செயல் சட்ட விரோதம் என அவருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அத்துடன், மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க குடியரசுத் தலைவர், கவர்னர்களுக்கு காலக்கெடுவும் விதித்தது.
இதுதொடர்பாக சட்டசபையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "மாநில சுயாட்சியை உறுதி செய்து மாநில உரிமைகளை நிலைநாட்டினால் தான் தமிழ் மொழியை காக்க முடியும். தமிழ் இனத்தையும் உயர்த்த முடியும். இதனை உறுதி செய்திடும் வகையில் இதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன்" என்று தகவல் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் விடுமுறைக்குப் பிறகு தமிழ்நாடு சட்டசபை இன்று கூடியது. அப்போது மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் வழங்க வலியுறுத்தும் வகையில், மாநில சுயாட்சி தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டசபையில் 110-வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
மாநில அரசின் உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்படுகிறது. இதனால் மாநிலங்களுக்கு கடும் பாதிப்புகள் ஏற்படுகின்றன.
நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். ஆனால் இதுவரை மத்திய அரசு அதை ஏற்கவில்லை. நீட் தேர்வு காரணமாக தமிழகத்தில் பல மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
நீர் தேர்வை அமல்படுத்துவதன் மூலம் கல்வி கொள்கை முழுவதையும் மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்து இருக்கிறது. கல்வியை மீண்டும் மாநில பட்டியலில் சேர்க்க வேண்டும்.
மும்மொழி கொள்கை மூலம் தமிழக மாணவர்களிடம் மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சி செய்கிறது. மும்மொழி கொள்கையை ஏற்காததால் தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய ரூ.2 ஆயிரம் கோடி நிதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டுக்கு பொதுவாகவே நிதி குறைவாகவே பகிரப்படுகிறது. மாநில அரசுக்கு இத்தகைய காரணங்களால் கடும் பாதிப்புகள் ஏற்படுகிறது.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் தெரிவித்தார்.
அதன்பிறகு ஒவ்வொரு கட்சி உறுப்பினர்களும் இதன் மீது பேசினார்கள். இறுதியாக உறுப்பினர்களின் வாக்கெ டுப்புக்குப் பிறகு அது நிறைவேறியது.
மாநில உரிமைகள் தொடர்பான விவாதங்கள் இந்திய அளவில் எழுந்துள்ள நிலையில் முதல்-அமைச்ச ரின் இந்த கோரிக்கை முக்கி யத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.






