என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஜூன் 3 செம்மொழி நாள் விழா: கருணாநிதி சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவிக்கிறார்
- கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி சிறப்பிக்கிறார்.
- பட்டிமன்றத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
சென்னை:
மறைந்த தி.மு.க. தலைவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 102-வது பிறந்த நாள் விழா நாளை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
கருணாநிதி பிறந்தநாள் செம்மொழி நாளாக கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் அனைத்து மாவட்டங்களிலும் இந்த விழா நாளை சிறப்பாக நடைபெற உள்ளது.
சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காலை 9.30 மணியளவில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள கருணாநிதியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
அதன் பிறகு அண்ணா அறிவாலயம் சென்று அங்கு அமைந்துள்ள கருணாநிதியின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து வணங்குகிறார். கோபாலபுரம் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள கருணாநிதி படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்.
முரசொலி அலுவலகம் சென்றும் கருணாநிதியின் சிலைக்கு மரியாதை செலுத்துகிறார்.
இதன் பிறகு கலைவாணர் அரங்கில் காலை 10.15 மணிக்கு நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று செம்மொழி நாள் விழாவை தொடங்கி வைக்கிறார்.
குறிப்பாக கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி சிறப்பிக்கிறார்.
இந்த விழாவில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் புதிய நூல்களை வெளியிடுதல், அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உயர்த்தப்பட்ட உதவித் தொகை ஒப்பளிப்பு ஆணை வழங்குதல்,
போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்குவதுடன் தமிழ்நாடு அரசின் நான்காண்டு சாதனை மலர் ஆகியவற்றையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார். இது தவிர அங்கு பட்டிமன்றத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள், மேயர், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், முக்கிய பிரமுகர்கள் ஏராளமானோர் பங்கேற்கிறார்கள்.






