என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

திருச்சிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை வருகை: ரோடு-ஷோ சென்று மக்களை சந்திக்கிறார்
- காலை 9 மணிக்கு திருச்சி தென்னூர் அண்ணா நகர் உழவர் சந்தை அருகில் வைகோவின் சமத்துவ நடைபயணத்தை தொடங்கி வைத்து பேசுகிறார்.
- சமத்துவ நடைபயணத்தை தொடங்கி வைத்த பின்னர் முதலமைச்சர் ஸ்டாலின் விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.
திருச்சி:
போதைப்பொருளுக்கு மாணவர்கள், இளைஞர்கள் என பலரும் அடிமையாவதை தடுக்கவும், தமிழகத்தில் சாதி, மத சண்டை கூடாது என்பதை வலியுறுத்தியும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் நல்லாட்சி 2026 ஆண்டிலும் தொடரவும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, திருச்சியில் நாளை (2-ந்தேதி) சமத்துவ நடைபயணத்தை தொடங்குகிறார்.
இந்த பயணம் மதுரையில் வருகிற 12-ந்தேதி நிறைவுபெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. 190 கிலோ மீட்டர் நடைபெறும் இந்த நடைபயணத்தில் பங்கேற்க ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தொண்டர்கள் சோர்வடையாமல் இருப்பதற்காகவும், அவர்களை ஊக்கப்படுத்தவும் பழைய திரைப்பட பாடல்களும், இரவில் தங்குமிடங்களில் ஒளிபரப்ப 12 திரைப்படங்களும் தேர்வு செய்து வைக்கப்பட்டுள்ளது.
வைகோவின் 10-வது நடைபயணமான இந்த சமத்துவ நடைபயணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதற்காக அவர் நாளை சென்னையில் இருந்து விமானம் மூலம் காலை 8 மணிக்கு திருச்சி வருகை தருகிறார்.
விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி தலைமை தபால் நிலையத்தில் இருந்து தென்னூர் அண்ணாநகர் உழவர் சந்தை திடல் வரை ரோடு-ஷோ சென்று பொதுமக்களை சந்திக்கிறார்.
பின்னர் காலை 9 மணிக்கு திருச்சி தென்னூர் அண்ணா நகர் உழவர் சந்தை அருகில் வைகோவின் சமத்துவ நடைபயணத்தை தொடங்கி வைத்து பேசுகிறார். இந்த நிகழ்ச்சியில் ம.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் துரை.வைகோ மற்றும் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கூட்டணி கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.
சமத்துவ நடைபயணத்தை தொடங்கி வைத்த பின்னர் முதலமைச்சர் ஸ்டாலின் விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார். முதலமைச்சர் வருகை தொடர்பாக சென்னையில் இருந்து பாதுகாப்பு துறை அதிகாரிகள் இன்று திருச்சிக்கு வந்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள். மேலும் நாளை திருச்சி நகர் பகுதியில் டிரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.






