என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    #DMK கனவு மெய்ப்படும் நிகழ்ச்சியில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    X

    #DMK 'கனவு மெய்ப்படும்' நிகழ்ச்சியில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    • தி.மு.க. அரசின் அனைத்து திட்டங்களையும் சிறப்பான திட்டங்கள் என்று தான் கூறுவேன்.
    • 2030-க்குள் தமிழ்நாடு முழுவதும் 1000 மாதிரிப்பள்ளிகள் உருவாக்கப்படும்.

    சென்னை:

    தமிழ்நாடு அரசின் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் 'உங்க கனவ சொல்லுங்க' என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

    இதன் மூலம் தமிழ்நாடு முழுவதிலும் மக்களைச் சந்தித்து அவா்களின் எதிர்பார்ப்புகளைக் கேட்டுத் தெரிந்து பதிவு செய்ய அலுவலா்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி இருந்தார்.

    அதன்படி, மாநிலம் முழுவதும் 45 நாட்கள் 50 ஆயிரம் தன்னாா்வலா்கள் 1.92 கோடி குடும்பங்களின் எதிா்கால கனவுகளை அறிவதற்காக, வீடு வீடாகச் சென்றனா். அப்போது, பொதுமக்களை நேரில் சந்தித்து, தி.மு.க. அரசு நடைமுறைப்படுத்தி உள்ள திட்டங்கள் குறித்தும், அவர்களின் எதிா்பாா்ப்புகள், எதிா்காலக் கனவுகள் ஆகியவை குறித்தும் கேட்டறிந்து பதிவு செய்தனா்.

    இந்த பணியின்போது 'என் ஊா் என் கனவு' என்ற தலைப்பில் 38 மாவட்டங்களின் 'தொலை நோக்குத் திட்டம் 2030' குறித்து விவரங்கள் சேகரிக்கப்பட்டன. மொத்தம் 8 துறைசாா் தொலைநோக்குத் திட்டங்கள் குறித்து ஆலோசனைகள் நிகழ்த்தப்பட்டன. 10 லட்சம் இளைய சக்திகளின் 'என் கனவு என் எதிா்காலம்' என்ற நோக்கில் தரவுகள் சேகரிக்கப்பட்டன.

    இதேபோல, வெளிநாடுகளில் வாழும் தமிழ்ச் சமுதாய மக்களின் கனவுகளையும் அறியும் நோக்கில் 70-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சோ்ந்த அயலகத் தமிழா்களின் கனவுகளும் திரட்டப்பட்டு உள்ளன.

    இந்தத் திட்டத்தின் நிறைவாக, 'கனவு மெய்ப்படும்' எனும் தலைப்பில் சென்னை நத்தம்பாக்கத்தில் உள்ள வா்த்தக மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

    நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சா்கள், முக்கிய ஆளுமைகள், முக்கிய நாளிதழ்களின் பதிப்பாளா்கள், தொலைக்காட்சி நிறுவன உரிமையாளா்கள், பத்திரிகை மற்றும் ஊடக நிறு வனங்களின் ஆசிரியா்கள், முக்கிய சமூக ஊடகவியலாளா்கள், தொழில்துறை வல்லுநா்கள், முக்கிய திரையுலக ஆளுமைகள், முதன்மைக் கல்வியாளா்கள், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வல்லுநா்கள், கலை, பண்பாடு, இலக்கியம் சாா்ந்த ஆளுமைகள், சாதனை இளைஞா்கள், காலநிலை வாகையா்கள் ஆகியோரும் பங்கேற்று தங்கள் கருத்துகளைப் பகிர்ந்தனா்.

    இதனை தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-

    * தமிழ்நாட்டு மக்களுக்காக தொடர்ந்து உழைத்துக்கொண்டே இருப்பேன். இதுதான் என் வெற்றியின் ரகசியம்.

    * அத்தனை திட்டங்களையும் நிறைவேற்றிக்காட்ட வேண்டும் என்ற கனவு இருந்தது.

    * தி.மு.க. அரசின் அனைத்து திட்டங்களையும் சிறப்பான திட்டங்கள் என்று தான் கூறுவேன்.

    * தி.மு.க. அரசின் திட்டங்களால் பலன் அடையாத குடும்பங்களே இல்லை என்ற அளவுக்கு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது.

    * மக்களிடம் செல், மக்களிடம் வாழ், மக்களிடம் கற்றுக்கொள் என்ற அடிப்படையில் திட்டங்கள் கொண்டு வரப்பட்டது.

    * சில திட்டங்களில் அரசியல், நிதி நெருக்கடி போன்ற முட்டுக்கட்டைகள்.

    * ஒவ்வொரு மாவட்டங்களிலும் மன நல ஆலோசனை மையம் அமைக்கப்படும்.

    * 2030-க்குள் கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் 5 லட்சம் வீடுகள், நகர்புறங்களில் 2 லட்சம் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும்

    * நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், புற்றுநோய் போன்ற பாதிப்புகளை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிய சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.

    * 1.25 லட்சம் விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள் வழங்கப்படும்.

    * 2030-க்குள் 100 விழுக்காடு ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்படும்.

    * 2030-க்குள் தமிழ்நாடு முழுவதும் 1000 மாதிரிப்பள்ளிகள் உருவாக்கப்படும்.

    * நான் முதல்வன் 2.0 திட்டம் மூலம் கூடுதல் திறன் பயிற்சிகள் வழங்கப்படும்.

    * 2030-க்குள் உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை 90 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    * ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும் AI ஆய்வகம் அமைக்கப்படும்.

    * AI தொழில்நுட்பம் மூலம் சாலைகளில் விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    * ஜவுளி, தோல், ஆடை, கணினி போன்ற தொழில் துறைகளில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படும்.

    * அமைச்சர் மெய்யநாதன் குறிப்பிட்டதைபோல் தேவைப்படும் இடங்களில் சமூக நீதி விடுதிகள் அமைக்கப்படும்.

    * 2030-ம் ஆண்டிற்குள் ஆதி திராவிடர், பழங்குடியினர் ஒவ்வொருவருக்கும் வீட்டுமனை பட்டா வழங்கப்படும்.

    * நிகர சாகுபடி பரப்பு 50 லட்சம் ஏக்கராக உயர்த்தப்படும், நுண்ணுயிர் பாசனம் 21 லட்சம் ஹெக்டேருக்கு உயர்த்தப்படும்.

    * 18 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் 5 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படும்.

    * காந்தியடிகள் பெயரில் மாதிரி கிராமங்கள் திட்டம் உருவாக்கப்படும்.

    * கிராமங்களை பொருளாதார வளர்ச்சி மையங்களாக மாற்றும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

    * மாவட்டம் தோறும் நவீன தொழில் பூங்கா அமைக்கப்படும்.

    * திடக்கழிவு மேலாண்மையில் புதிய மாற்றங்கள் செய்யப்படும்.

    * அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டம் விரிவுப்படுத்தப்படும்.

    * 2030-க்குள் பால் உற்பத்தி 4.5 கோடி லிட்டராக உயர்த்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    * அடுத்ததும் திமுக அரசு தான், திராவிட மாடல் 2.0 அரசுக்கான டிரெய்லர் தான் இந்த நிகழ்ச்சி என்றார்.

    Next Story
    ×