என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரிவினையை தூண்டும் விதமாக பேசுகிறார்- நயினார் நாகேந்திரன்
    X

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரிவினையை தூண்டும் விதமாக பேசுகிறார்- நயினார் நாகேந்திரன்

    • தி.மு.க. ஆட்சி பழிவாங்கும் ஆட்சியாக இருக்கிறது.
    • தேர்தல் வர இருப்பதால் இந்தாண்டு பொங்கல் பரிசாக ரூ.5 ஆயிரம் கூட கொடுப்பார்கள்.

    இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேல் நினைவு தினத்தை முன்னிட்டு நெல்லை வடக்கு மாவட்ட பா.ஜ.க. அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் முத்து பலவேசம் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    அப்போது அ.தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், கடம்பூர் ராஜு, நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேச ராஜா மற்றும் திரளான பா.ஜனதா மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். தொடர்ந்து நிருபர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன் கூறியதாவது:-

    பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரன் மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் ஒன்றாக சேர்ந்து மரியாதை செலுத்தியது குறித்து நான் கருத்துக்கள் ஏதும் சொல்ல விரும்பவில்லை.

    தமிழக முதலமைச்சர் பீகாரை பற்றி பேசியதை தான் பிரதமர் மோடியும் பேசி இருக்கிறார். தமிழக முதலமைச்சர் தான் பிரிவினையை தூண்டும் விதமாக பேசுகிறார். அவர் வட மாநிலம், தென் மாநிலம் என்னும் பிரிக்கும் சூழ்ச்சியில் ஈடுபட வேண்டாம். அவருக்கு தோல்வி பயம் வந்துள்ளது. அதன் காரணமாக ஒவ்வொரு கால கட்டத்திலும் பொய்யையே பேசி வருகிறார். இந்த ஆட்சியே பொய் சொல்லும் ஆட்சியாக உள்ளது.

    இந்த ஆட்சியில் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு என பல உயர்வு கொண்டு வரப்பட்டு மக்கள் மீது சுமையை ஏற்றி உள்ளனர். தேர்தல் வர இருப்பதால் இந்தாண்டு பொங்கல் பரிசாக ரூ.5 ஆயிரம் கூட கொடுப்பார்கள்.

    தி.மு.க. ஆட்சி பழி வாங்கும் ஆட்சியாக இருக்கிறது. ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் ஒரு கூட்டம் நடத்த வேண்டும் என்றால் எங்கு வேண்டுமானாலும் நடத்தலாம் என்ற நிலை இருக்கிறது.

    தமிழக நகராட்சி நிர்வாகத்துறை பணியாளர்கள் நியமனத்தில் கோடிக்க ணக்கில் ஊழல் நடந்ததாக கூறப்படுவது குறித்து விசாரணை நடத்த வேண்டும்

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையில், தேர்தல் காலங்களில் எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம். அரசியலில் நிரந்தர நண்பர்களும், நிரந்தர பகைவர்களும் இல்லை. நாங்கள் வெற்றியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்றார்.

    Next Story
    ×