என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சென்னை போலீசை திணறடிக்கும் இ-மெயில் வாலிபர்: கனிமொழி எம்.பி. வீடு உள்பட 7 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
- தேனாம்பேட்டை மெட்ரோ ரெயில் நிலையத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
- மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு போனில் மிரட்டல் விடுத்த ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த ஞானமூர்த்தி என்ற வாலிபரை கைது செய்தனர்.
சென்னை:
சென்னையில் போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்துக்கு இ-மெயில் மூலமாக மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது வாடிக்கையாகி இருக்கிறது.
பல்வேறு பெயரிலான இ-மெயில் முகவரிகளில் இருந்து முக்கிய பிரமுகர்களின் இல்லங்கள் மற்றும் அரசியல் கட்சி அலுவலகங்களுக்கு மர்மநபர் வெடிகுண்டு மிரட்டலை விடுத்துக் கொண்டே உள்ளார்.
அந்த வகையில் இ-மெயில் மூலமாக நேற்று இரவு சென்னை சி.ஐ.டி. காலனியில் உள்ள கனிமொழி எம்.பி.யின் வீடு, மயிலாப்பூரில் உள்ள ஆடிட்டர் குருமூர்த்தி வீடு, முன்னாள் டி.ஜி.பி. நடராஜ் வீடு, ஆழ்வார்பேட்டை நாரதகான சபா, வேப்பேரி பெரியார் திடல், கிழக்கு கடற்கரை சாலை, இஸ்கான் கோவில் ஆகிய 6 இடங்களுக்கும் தொலைபேசி மூலமாக தேனாம்பேட்டை மெட்ரோ ரெயில் நிலையத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து போலீசார் நேற்று இரவு மேற்கண்ட 7 இடங்களிலும் வெடிகுண்டு சோதனை நடத்தினர். ஆனால் அது புரளி என்பது தெரியவந்தது.
இ-மெயில் மூலமாக மிரட்டல் விடுத்த நபர் இதுவரை போலீசில் சிக்காத நிலையில், மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு போனில் மிரட்டல் விடுத்த ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த ஞானமூர்த்தி என்ற வாலிபரை கைது செய்தனர். அவர் பேசிய தொலைபேசி எண்ணை வைத்து இருப்பிடத்தை கண்டுபிடித்த போலீசார் அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இ-மெயில் மூலம் மிரட்டல் விடுத்த நபரை தொடர்ந்து தேடிவருகிறார்கள்.






