என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தேர்தல் அறிக்கை தயாரிப்பில் தீவிரம் காட்டும் பா.ஜ.க.- ஜனவரி மாதம் வெளியிட திட்டம்
- தமிழகத்துக்கான தேர்தல் அறிக்கையை தயார் செய்ய டெல்லி தலைமை முடிவு செய்து உள்ளது.
- இந்த குழுவினர் விரைவில் தமிழகம் வந்து மாநில தலைமையுடன் ஆலோசனை செய்ய உள்ளனர்.
சென்னை:
தமிழகத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலை பா.ஜ.க. கட்சி அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து சந்திக்கிறது.
இந்த கூட்டணியை வலுப்படுத்தவும், தேர்தல் பணிகளை மேற்கொள்ளவும் பைஜயந்த்பாண்டாவை தேர்தல் பொறுப்பாளராக டெல்லி பா.ஜ.க. தலைமை நியமித்து உள்ளது. அவரும் 2 முறை தமிழகத்துக்கு வந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி இருக்கும் கட்சிகளான அ.ம.மு.க., பா.ம.க., தே.மு.தி.க. மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய கட்சிகளை இணைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். அந்த கட்சிகளின் தலைவர்களையும் நேரில் சந்தித்து பேசினார். ஆனால் எந்த கட்சியும் இதுவரை உறுதியான முடிவுகளை தெரிவிக்கவில்லை. தேர்தலுக்கு இன்னும் நான்கைந்து மாதங்கள் இருப்பதால் மெதுவாக முடிவெடுக்கலாம் என்று நினைக்கிறார்கள்.
இது ஒரு புறம் இருக்க தமிழகத்துக்கான தேர்தல் அறிக்கையை தயார் செய்ய டெல்லி தலைமை முடிவு செய்து உள்ளது. இதற்காக மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், ராஜ்நாத்சிங், நிதின்கட்கரி மற்றும் அனுராக் தாகூர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவுக்கு ஆலோசனை வழங்க தமிழகத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரியும் நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த குழுவினர் விரைவில் தமிழகம் வந்து மாநில தலைமையுடன் ஆலோசனை செய்ய உள்ளனர்.
தேர்தல் அறிக்கையில் தி.மு.க. அறிவித்து நிறைவேற்றாத வாக்குறுதிகள், ஊழல்கள், சட்டம், ஒழுங்கு நிலைமை, போதைபொருள் நடமாட்டம் உள்ளிட்ட பல்வேறு விசயங்களை ஆதாரங்களுடன் தயாரிக்க முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த தேர்தல் அறிக்கையை ஜனவரி மாதம் தை பொங்கலையொட்டி வெளியிடவும் திட்டமிட்டு இருப்பதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.






