என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தமிழகத்தில் 7 இடங்களில் பா.ஜ.க. மண்டல மாநாடு: 'பூத்' கமிட்டியை வலுப்படுத்த நடவடிக்கை
- பூத் அளவில் மாதம் ஒருமுறை தெரு முனை கூட்டங்கள் நடத்த வேண்டும்.
- நவம்பர் 23-ந்தேதி சேலத்திலும், டிசம்பர் 21-ந்தேதி தஞ்சையிலும் மாநாடு நடத்தப்பட உள்ளது.
சென்னை:
தமிழகத்தில் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை சந்திக்க பா.ஜ.க. தயாராகி வருகிறது. இதற்காக அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துள்ளது.
தமிழகத்தில் பா.ஜ.க.வின் அரசியல் அடித்தளத்தை பலப்படுத்தி சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் வகையில் அக்கட்சியின் பூத் கமிட்டியை வலுப்படுத்தும் நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல் கலைக்கழகத்தில் பா.ஜ.க. பூத் கமிட்டியை வலுப்படுத்தும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்துக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமை தாங்கினார். தமிழக பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், தேசிய இணை பொறுப்பாளர் பி.சுதாகர் ரெட்டி, மத்திய மந்திரி எல்.முருகன், பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா, முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட தலைவர் ரகுராமன், மண்டல தலைவர்கள், கிளை தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், கட்சியின் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் தேர்தல் வியூகங்கள் குறித்து பேசினார். எந்தவொரு கட்சியின் வெற்றிக்கும் அதன் அடித்தளமாக விளங்கும் பூத் கமிட்டிகள் வலுவாக இருப்பது அவசியம்.
ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் கட்சியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பது, வாக்காளர்களை நேரடியாக தொடர்பு கொள்வது, அரசு நலத்திட்டங்களை விளக்குவது போன்ற பணிகளை பூத் கமிட்டி உறுப்பினர்கள் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இந்த பூத் கமிட்டி கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் கட்சி நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளையும் அவர் வழங்கினார்.
பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், தேசிய இணை பொறுப்பாளர் பி.சுதாகர் ரெட்டி ஆகியோர் தமிழக பா.ஜ.க. நிர்வாகிகளுக்கு தேர்தல் களப்பணிகள் தொடர்பான முக்கிய ஆலோசனைகளை வழங்கினார்கள்.
இன்று நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. 2026 சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் வகையில் பா.ஜ.க. சார்பில் அடுத்தடுத்து மண்டல மாநாடுகள் நடத்த முடிவு எடுக்கப்பட்டது. இதில் பா.ஜ.க. முதல் மண்டல மாநாடு நெல்லையில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 17-ந்தேதி நடத்தப்படுகிறது.
அதனை தொடர்ந்து செப்டம்பர் 13-ந்தேதி மதுரையிலும், அக்டோபர் 26-ந்தேதி கோவையிலும், நவம்பர் 23-ந்தேதி சேலத்திலும், டிசம்பர் 21-ந்தேதி தஞ்சையிலும் மாநாடு நடத்தப்பட உள்ளது.
அடுத்த ஆண்டு ஜனவரி 4-ந்தேதி திருவண்ணாமலையிலும், ஜனவரி 24-ந்தேதி திருவள்ளூரிலும் மண்டல மாநாடு நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 7 இடங்களில் பா.ஜ.க. மண்டல மாநாடு நடைபெற உள்ளது.
அ.தி.மு.க.வுடன் கூட்டணி, தி.மு.க.வுக்கு எதிரான மனநிலை உள்ளிட்டவற்றை சாதகமான அம்சங்களாக பா.ஜ.க. கருதுகிறது. விஜய் அரசியலுக்கு வருகை, நாம் தமிழர் கட்சி வாக்கு வங்கி ஆகியவை பாதகம் என பா.ஜ.க. பட்டியலிட்டு உள்ளது.
எனவே முதல் முறை வாக்காளர்களை ஒருங்கிணைப்பது மற்றும் தேசிய உணர்வை ஏற்படுத்துவது பா.ஜ.க.வுக்கு சாதகமாக அமையும் என்று பா.ஜ.க. கருதுகிறது. இதற்காக பூத் அளவில் மாதம் ஒருமுறை தெரு முனை கூட்டங்கள் நடத்த வேண்டும் எனவும் கட்சி நிர்வாகிகளுக்கு பா.ஜ.க. தலைமை அறிவுறுத்தி உள்ளது.
இந்த நிகழ்ச்சி இன்று முழுவதும் பல்வேறு அமர்வுகளாக நடைபெறுகிறது. இதில் பங்கேற்றுள்ள மாநில, மாவட்ட, மண்டல மற்றும் கிளை நிர்வாகிகளுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.
மத்திய அரசின் சாதனைகளையும், மக்கள் நல திட்டங்களையும் எளிய முறையில் மக்களிடம் கொண்டு சேர்ப்பது, வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்களை சேர்ப்பது மற்றும் சரி பார்ப்பது, சமூக ஊடகங்கள் மூலம் கட்சியின் செய்திகளை பரப்புவது, எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு உரிய முறையில் பதிலடி கொடுப்பது, தேர்தல் நாளில் வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வந்து வாக்களிக்க வைப்பது உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.