என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தேர்தல் ஆணையத்தை பாஜக தனது மோசடி இயந்திரமாக மாற்றியுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- ராகுல் காந்தி கொடுத்துள்ள வாக்குத் திருட்டு சான்றுகள் இந்த மோசடியை அம்பலப்படுத்துகின்றன.
- பாஜக பட்டப்பகலில் இந்தியாவின் ஜனநாயகத்தைக் கொள்ளையடிப்பதை வேடிக்கை பார்க்க மாட்டோம்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், கர்நாடகாவில் உள்ள ஒரு தொகுதியில் வாக்காளர் பட்டியலில் நடைபெற்ற முறைகேடுகளை வெளியிட்டு, அதற்கான ஆதாரங்களையும் குறிப்பிட்டார்.
பா.ஜ.க.வும், தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து இதுபோன்ற பெரிய மோசடியில் ஈடுபட்டுள்ளன என தெரிவித்தார். இதையடுத்து, டெல்லியில் கடந்த வாரம் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, கர்நாடகத்தில் ஒரு பெண் வாக்காளர் 2 முறை வாக்கு செலுத்தியிருப்பதாக ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இந்நிலையில், ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்படவேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், "தேர்தல் ஆணையத்தை பாஜக தனது தேர்தல் மோசடி இயந்திரமாக மாற்றியுள்ளது. பெங்களூருவின் மகாதேவபுராவில் நடந்தது நிர்வாகக் குறைபாடு அல்ல, மக்களின் தீர்ப்பைத் திருடுவதற்கான திட்டமிட்ட சதி.
ராகுல் காந்தி கொடுத்துள்ள வாக்குத் திருட்டு சான்றுகள் இந்த மோசடியை அம்பலப்படுத்துகின்றன. இன்று பாராளுமன்ற வளாகத்திலிருந்து தேர்தல் ஆணையம் நோக்கி ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பேரணி நடத்துகிறது. இதில் நாங்கள் சில கோரிக்கைகளை முன்வைக்கிறோம்.
* கணினியால் படித்தறியக் கூடிய வடிவத்தில் அனைத்து மாநிலங்களின் வாக்காளர் பட்டியல் கோப்பும் உடனடியாக அளிக்கப்பட வேண்டும்.
* வாக்குத் திருட்டு முறைகேடு குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இந்தப் போராட்டத்தில் திமுக தோளோடு தோள் நிற்கிறது. பாஜக பட்டப்பகலில் இந்தியாவின் ஜனநாயகத்தைக் கொள்ளையடிப்பதை நாங்கள் அமைதியாக வேடிக்கை பார்க்க மாட்டோம்" என்று தெரிவித்துள்ளார்.






