என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மக்கள் நிச்சயமாக தி.மு.க.வை புறக்கணிப்பார்கள்- அன்புமணி
    X

    மக்கள் நிச்சயமாக தி.மு.க.வை புறக்கணிப்பார்கள்- அன்புமணி

    • பெரியாரின் பிறந்த நாளான இன்று சமூக நீதி நாள்.
    • ஆந்திரா, ஒடிசா போன்ற மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திவிட்டார்கள்.

    திண்டிவனம்:

    வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு 1987-ம் ஆண்டு செப்டம்பர் 17-ல் நடைபெற்ற போராட்டத்தில் உயிர் தியாகம் செய்த 21 வன்னியர்களின் உருவப்படங்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் பல்வேறு மாவட்டங்களில் நடத்தப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் டாக்டர் அன்புமணி திண்டிவனம் வன்னியர் சங்க அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த 21 தியாகிகள் படங்களுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் கூறியதாவது:-

    இடஒதுக்கீடு போராட்டத்தில் 21 தியாகிகள் காவல் துறையினரால் கொடூரமாக துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். ஆளும் தி.மு.க.விற்கு எதைப்பற்றியும் கவலை இல்லை. வன்னியர் சமூக மக்களின் வாக்கு மட்டும் அவர்களுக்கு வேண்டும். 15 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி டிசம்பர் மாதம் 17-ந் தேதி சிறை நிரப்பும் போராட்டம் அமைதியான முறையில் நடைபெறும்.

    தமிழக அமைச்சரையும், முதலமைச்சரையும் சந்தித்து இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி கூறியும் எதுவும் செய்யவில்லை. சமூக நீதி பற்றி பேச தி.மு.க.விற்கு அருகதை கிடையாது. பெரியாரின் பிறந்த நாளான இன்று சமூக நீதி நாள். ஆந்திரா, ஒடிசா போன்ற மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திவிட்டார்கள். ஆனால் தமிழகத்தில் நடத்தவில்லை. சமூக நீதி விரோதி தி.மு.க. தான். மக்கள் நிச்சயமாக தி.மு.க.வை புறக்கணிப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அன்புமணி அஞ்சலி செலுத்தியதையொட்டி திண்டிவனம் வன்னியர் சங்க அலுவலகம் பகுதி மற்றும் தனியார் திருமண மண்டபம் அருகே 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு வன்னியர் சங்க அலுவலகம் அருகே ராமதாஸ் தரப்பினர் மற்றும் அன்புமணி தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் வன்னியர் சங்க அலுவலகத்திற்குச் செல்லும் கேட் மூடப்பட்டு வருவாய் துறை முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    திண்டிவனத்தை தொடர்ந்து அன்புமணி சித்தணி, பாப்பம்பட்டு போன்ற பகுதிகளில் உள்ள நினைவு தூண்களில் மலர் தூவி அஞ்சலி செலுத்த உள்ளார்.

    Next Story
    ×