என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    யாருடன் கூட்டணி: 19-ந்தேதி அறிவிக்கும் காங்கிரஸ்?
    X

    யாருடன் கூட்டணி: 19-ந்தேதி அறிவிக்கும் காங்கிரஸ்?

    • தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் குறித்த ஆயத்தக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற உள்ளது.
    • காங்கிரசிற்கு சாதகமான தொகுதிகளுடன் மாநில நிர்வாகிகள் டெல்லி சென்றுள்ளனர்.

    தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி தி.மு.க. கூட்டணியின் பிரதான கட்சியாக செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில், நடிகர் விஜய் த.வெ.க. என்னும் புதிய கட்சியை தொடங்கியது முதல் காங்கிரஸ் கட்சிக்குள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு, கூடுதல் இடங்களில் போட்டி என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

    இதற்கிடையே ராகுல்காந்தியின் நெருங்கிய வட்டாரத்தில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் தொழில் வல்லுனர் மற்றும் தரவு பகுப்பாய்வு துறை தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி அவ்வப்போது நடிகர் விஜய்யை சந்தித்து தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வந்தார்.

    தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருச்சி வேலுசாமி தலைமையில் ஜனநாயகன் பொங்கல் விழா கொண்டாடி தி.மு.க. கூட்டணியில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு, அதிக இடங்களில் போட்டி கோரிக்கையை மேலும் வலுப்படுத்தி உள்ளார்.

    இந்தநிலையில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் குறித்த ஆயத்தக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற உள்ளது.

    அகில இந்திய காங்கிரஸ் தலைமையகமான டெல்லி, இந்திரா பவனில் 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் குறித்த ஆயத்தக் கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.

    அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

    கூட்டத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார், தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள், தமிழகத்தை சேர்ந்த அகில இந்திய காங்கிரஸ் துணை அமைப்புகளின் தலைவர்கள், முன்னாள் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர், எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ராகுல்காந்தியை சந்திக்க உள்ளனர்.

    தி.மு.க. கூட்டணியில் தொடர்ந்தால் கூடுதல் சீட் கேட்பது தொடர்பாகவும் ஆலோசனை நடைபெற உள்ளது. காங்கிரசிற்கு சாதகமான தொகுதிகளுடன் மாநில நிர்வாகிகள் டெல்லி சென்றுள்ளனர்.

    ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் சென்னையில் 19-ந்தேதி காங்கிரஸ் மாநில செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இன்று எடுக்கப்படும் முடிவு செயற்குழுவில் தெரிவிக்கப்பட்டு ஒப்புதல் பெற திட்டமிடப்பட்டுள்ளது.

    செயற்குழுவிற்கு பின்னர் கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை நாளை மறுநாள் காங்கிரஸ் வெளியிடுகிறது. 2029 பாராளுமன்ற தேர்தலையும் மனதில் வைத்து கூட்டணி முடிவை எடுக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

    Next Story
    ×