என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சென்னையில் வெறிநாய் கடித்து இளைஞர் உயிரிழப்பு!
- சென்னையில் பிட்புல், ராட்வீலர் இன நாய்களை புதிதாக வாங்கி வளர்க்க நாளை முதல் தடை
- சென்னையில் செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற இன்றே கடைசி நாளாகும்.
சென்னையில் வெறிநாய் கடித்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கொடுங்கையூரை சேர்ந்த அருள் என்ற இளைஞரை கடந்த 5ஆம் தேதி தெருநாய் கடித்துள்ளது. கொடுங்கையூர் என்.எஸ்.கே சாலையில் நடந்து சென்றபோது அருளை நாய் கடித்துள்ளது. இதனைத்தொடர்ந்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் உடல்நலம் குன்றியுள்ளது. இதனையடுத்து ஆபத்தான நிலையில் ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் 2025-ல் இதுவரை 5.25 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 30 பேர் மரணமடைந்துள்ளனர். மேலும் சென்னையில் செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற இன்றே கடைசி நாளாகும். சென்னை மாநகராட்சியில், 98,523 செல்லப்பிராணிகள் விபரங்கள் பதிவு செய்யப்பட்டு இருந்தாலும், தற்போது வரை 56,378 செல்லப் பிராணிகளுக்கு மட்டுமே உரிமம் பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே சென்னையில் பிட்புல், ராட்வீலர் இன நாய்களை புதிதாக வாங்கி வளர்க்க நாளை முதல் (டிச. 20) தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி வளர்த்தால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.






