search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குன்னூரில் 9.6 செ.மீ. மழை கொட்டியது- 16 இடங்களில் மரங்கள் விழுந்து மின்சாரம் துண்டிப்பு
    X

    குன்னூர் மவுண்ட் பிளசென்ட் பகுதியில் இன்று காலை நடுரோட்டில் விழுந்த மரம்

    குன்னூரில் 9.6 செ.மீ. மழை கொட்டியது- 16 இடங்களில் மரங்கள் விழுந்து மின்சாரம் துண்டிப்பு

    • பல குடியிருப்புகளை ஒட்டியுள்ள படிக்கட்டுகளில் மழைநீர் அருவி போல் ஆர்ப்பரித்து கொட்டி குடியிருப்புகளுக்குள் புகுந்தது.
    • மாவட்ட நிர்வாகம் சார்பில் 456 முகாம்கள் தயார் நிலையில் உள்ளது

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டம் குன்னூர், கோத்தகிரி பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு பெய்த கனமழையால் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. பல இடங்களில் மரங்கள் முறிந்து மின்வினியோகம் பாதிக்கப்பட்டது.

    இந்தநிலையில் நேற்று இரவு 2-வது நாளாக அங்கு கனமழை கொட்டியது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கியது. மாடல்ஹவுஸ் பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது. இதனால் அங்கு வசித்தவர்கள் இரவில் தூங்க முடியாமல் சிரமத்துக்கு ஆளானார்கள். அவர்கள் வீடுகளில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு இரவை கழித்தனர்.

    பல குடியிருப்புகளை ஒட்டியுள்ள படிக்கட்டுகளில் மழைநீர் அருவி போல் ஆர்ப்பரித்து கொட்டி குடியிருப்புகளுக்குள் புகுந்தது. நேற்று இரவும் சில இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. மரங்களும் முறிந்து விழுந்தன. அதிகபட்சமாக குன்னூரில் 9.6 சென்டி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

    மழை காரணமாக குன்னூர் தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டது. நேற்று இரவு 10 மணியில் இன்று காலை வரை குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர்.

    குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள குறும்பாடி, சப்ளை, டிப்போ, காட்டேரி, வண்ணாரப்பேட்டை , வண்டிச்சோலை மவுண்ட் பிளசென்ட் உள்ளிட்ட மரங்கள் முறிந்து விழுந்தும், மண் சரிவும் ஏற்பட்டன. தீயணைப்புத் துறையினர் உடனடியாக சென்று சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கனமழையை எதிர்கொள்ள பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் இருப்பதாக மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதுவரை 16 இடங்களில் மரம் விழுந்தும், 7 வீடுகள் இடிந்தும் உள்ளன. மாவட்ட நிர்வாகம் சார்பில் 456 முகாம்கள் தயார் நிலையில் உள்ளது. நான்கு மண்டலமாக மீட்பு குழுவினர் பிரிக்கப்பட்டு 3500 பேர் மீட்பு பணியில் ஈடுபடுகின்றனர் என தெரிவித்தார்.

    குன்னூர் அருகே உள்ள யானை பள்ளம் ஆதிவாசி கிராமத்துக்கு செல்லும் சாலையில் பாறைகள் உருண்டு விழுந்ததுடன் மண் மற்றும் மரங்களும் சரிந்து விழுந்தது. இதனால் இந்த கிராமத்திற்கு செல்லும் சாலை முற்றிலும் துண்டிக்கப்பட்டதால் அத்தியாவசிய தேவைக்கு கூட மக்கள் கிராமத்தை விட்டு வெளியேற இயலாமல் பாதிப்புக்குள்ளாகினர்.

    இதனை தொடர்ந்து குன்னூர் தாசில்தார் கனி சுந்தரம் தலைமையில் வருவாய் ஆய்வாளர் செங்கோடன், தீயணைப்பு துறை நிலை அலுவலர் குமார், நெடுஞ்சாலைத்துறை பாலச்சந்திரன் மற்றும் உலிக்கல் பேரூராட்சி அதிகாரிகள் பாதிக்கப்பட்ட இடத்துக்கு சென்று ஜே.சி.பி எந்திரம் உதவியுடன் பாறைகள், மண் குவியல்கள் மற்றும் மரங்களை அப்புறப்படுத்தினர்.

    குன்னூர்-மேட்டுப்பாளையம் செல்லும் மலைப்பாதையில் இந்திரா நகர் என்ற இடத்தில் நேற்று மாலை திடீரென பாறை உண்டு விழுந்தது. இதனை ஜே.சி.பி. உதவியுடன் அகற்றினர். மேலும் காட்டேரி , கரும்பாலம் இடையே ஏற்பட்ட மண் சரிவை குன்னூர் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மேற்பார்வையில் அப்புறப்படுத்தப்பட்டது. ஆப்பிள் பி பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு பொதுமக்கள் வெளியே நடந்து செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×