என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கோவையில் ஐ.பி.எல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் கும்பல் கைது
- கைதான 7 பேரும் கோவை, கேரளா மற்றும் வடமாநிலத்தை சேர்ந்த வாலிபர்கள் ஆவர்.
- போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், இந்த கும்பல் ஐ.பி.எல் போட்டிகள் தொடங்கியதில் இருந்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
கோவை:
இந்தியாவின் பல்வேறு நகரங்களில், 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தியன் பிரிமீயர் லீக் எனப்படும் ஐ.பி.எல் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
வார நாட்களில் ஒரு போட்டியும், வார இறுதி நாட்களில் 2 போட்டிகளும் நடைபெற்று என தினமும் போட்டிகள் நடந்து வருகிறது.
இந்த ஐ.பி.எல். போட்டியை மையமாக வைத்து ஏராளமானோர் சட்டவிரோதமாக பெட்டிங் நடத்துவது தொடர்கதையாக உள்ளது. அவர்களை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் கோவை மாவட்டம் காட்டூர் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஐ.பி.எல். போட்டியை மையமாக வைத்து சூதாட்டம் நடைபெற்று வருவதாக நேற்று காட்டூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் உதவி கமிஷனர் கணேசன், இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் தகவல் வந்த இடத்திற்கு சென்றனர்.
அப்போது அங்கு 7 பேர் கொண்ட கும்பல் ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். போலீசார் வந்ததை பார்த்தும் அந்த கும்பல் அதிர்ச்சியாகியது. பின்னர் அங்கிருந்து அவர்கள் தப்ப முயன்றனர்.
போலீசார் உடனடியாக 7 பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவர்களை காட்டூர் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் ராஜேஷ், சவுந்தர், அருண்குமார், நந்தகுமார், விபுல், ஜிதேந்திரா, விபின் என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1 கோடியே 9 லட்சத்து 90 ஆயிரம் ரொக்க பணம், சூதாட்டத்திற்கு பயன்படுத்திய 12 செல்போன்கள், 2 கார்கள், 2 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
கைதான 7 பேரும் கோவை, கேரளா மற்றும் வடமாநிலத்தை சேர்ந்த வாலிபர்கள் ஆவர்.
தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், இந்த கும்பல் ஐ.பி.எல் போட்டிகள் தொடங்கியதில் இருந்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
தினமும் நடக்கும் போட்டியில் இந்த அணிதான் வெற்றி பெறும், இவ்வளவு ரன் அடிக்கும், என ஒரு போட்டிக்கு இவர்கள் ரூ.100-ல் ஆரம்பித்து லட்சக்கணக்கில் பந்தயம் கட்டியதும், அதன் மூலம் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்ததும் தெரியவந்தது.
தொடர்ந்து போலீசார் அந்த கும்பலிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் இவர்கள் மட்டும் தான் ஈடுபட்டுள்ளனரா? அல்லது வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






