என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சிவகங்கை அருகே ஆடு திருட வந்ததாக அண்ணன்- தம்பி அடித்துக்கொலை - கிராம மக்கள் ஆத்திரம்
- ஆடுகளை அடைத்து வைத்திருக்கும் பட்டிகள், கிடைகள் அமைக்கப்பட்டுள்ள விவசாய நிலங்களுக்கு அருகாமையில் அவர்கள் மறைந்திருந்து நோட்டமிட்டனர்.
- தாய், தந்தை இறந்துவிட்ட நிலையில் இருவருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை.
காளையார்கோவில்:
சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே அமைந்துள்ளது மதகுபட்டி கிராமம். கடந்த சில மாதங்களாக மதகுபட்டி கிராமத்தில் அடிக்கடி ஆடுகள், கோழிகள் திருடு போவது தொடர்கதையாகி வந்தது. போதிய பாதுகாப்புடன் பட்டிகளில் ஆடுகளை அடைத்து வைத்திருந்தபோதும் இந்த திருட்டை தடுக்க முடியாமல் ஆடு வளர்ப்போர் தவித்து வந்தனர். நகைகளை அடகு வைத்தும், வட்டிக்கு கடன் வாங்கியும் ஆடுகளை வளர்த்து வருவோருக்கு இந்த தொடர் திருட்டு பெரும் இழப்பை ஏற்படுத்தி வந்தது.
ஆடு திருடும் கும்பலை பிடிப்பதற்காக பாதிக்கப்பட் டவர்கள் இரவு நேரங்களில் கண்விழித்து கண்காணித்து வந்தபோதிலும் வேறு பகுதியில் அங்கொன்றும், இங்கொன்றுமாக ஆடுகள் திருடு போய் வந்தன. அதேவேளையில் நள்ளிரவு நேரங்களில் மதகுபட்டி கிராமத்தில் வாகனங்கள் வந்து செல்வதை உறுதி செய்த பொதுமக்கள், ஆடு மற்றும் கோழிகளை திருடுவதில் யாரோ மர்ம நபர்கள் ஈடுபட்டு கைவரிசை காட்டி வருவதாக எண்ணினர். அவர்களை பிடிப்பதற்கான நடவடிக்கைகளில் தீவிரம் காட்டிய பொதுமக்கள் ஆடு, கோழி வளர்ப்போரிடம் இதுகுறித்து பேசி தக்க தருணத்தை எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இந்தநிலையில் நேற்று நள்ளிரவில் மதகுபட்டி கிராம மக்கள் தீவிர கண்காணிப்பில் இருந்தனர். குறிப்பாக ஆடுகளை அடைத்து வைத்திருக்கும் பட்டிகள், கிடைகள் அமைக்கப்பட்டுள்ள விவசாய நிலங்களுக்கு அருகாமையில் அவர்கள் மறைந்திருந்து நோட்டமிட்டனர்.
நள்ளிரவு சுமார் 12 மணியளவில் அங்குள்ள சுப்பு என்பவரது தோப்பிற்குள் 2 வாலிபர்கள் புகுந்து உள்ளனர். சத்தம் கேட்டு சுதாரித்த அந்த பகுதியில் கண்காணிப்பில் இருந்தவர்கள் கூச்சல் எழுப்பி ஒன்று கூடினர். இதைப்பார்த்த அந்த 2 வாலிபர்களும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றுள்ளனர். ஆனால் கிராம மக்கள் விடாமல் துரத்தி சென்றதுடன், அவர்களை கல், கம்பு, கட்டை உள்ளிட்ட கையில் கிடைத்த பொருட்களை கொண்டு சரமாரியாக தாக்கினர்.
இதில் பலத்த காயம் அடைந்த இருவரும் ஒருகட் டத்தில் ஓட முடியாமல் கீழே விழுந்து மயங்கினர். இதுகுறித்த தகவல் அறிந்த மதகுபட்டி போலீசார் நள்ளிரவில் சம்பவம் நடந்த கிராமத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் அங்கு உயிருக்கு போராடிக்கொண்டிருந்த இருவரையும் மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் இருவரும் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் பரபரப்பு தகவல்கள் கிடைத்தன. அதன் விபரம் வருமாறு:-
மதகுபட்டி அருகேயுள்ள கல்லம்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன்கள் மணிகண்டன் (வயது 30), விக்னேஷ் என்ற சிவசங்கரன் (25). இதில் மணிகண்டன் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். விக்னேஷ் கல்லம்பட்டி பகுதியில் கூலிவேலை பார்த்து பிழைப்பு நடத்தினார். தாய், தந்தை இறந்துவிட்ட நிலையில் இருவருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை.
கோவையில் வேலை பார்க்கும் மணிகண்டன் விடுமுறை நாட்களில் சொந்த ஊருக்கு வந்து செல்வார். அப்போது தனது தம்பியுடன் சேர்ந்து அந்த பகுதியில் நடைபெறும் சேவல் சண்டையிலும் பங்கேற்று வந்து உள்ளார். இதையடுத்து அவர்கள் இருவரும் சேர்ந்து ஆடு, கோழிகளை திருடி விற்பதாக கிராம மக்கள் சந்தேகித்து உள்ளனர். அதேபோல் மதகுபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஜல்லிக்கட்டுக்காக வளர்த்து வரும் காளைகளையும் சகோதரர்கள் திருடி இருக்கலாம் என்றும் கருதினர்.
இந்தநிலையில்தான் நேற்று நள்ளிரவில் மதகுபட்டிக்கு ஆடு திருட வந்ததாக கருதிய பொதுமக்கள் அவர்களை அடித்துக் கொலை செய்து உள்ளனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள மதகுபட்டி போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் 10 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






