என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

100 நாள் வேலைத் திட்டம்: மத்திய அரசை கண்டித்து இடதுசாரிகள், விசிக டிசம்பர் 23ல் ஆர்ப்பாட்டம்
- நாடு முழுவதும் வறுமை நிலை ஓரளவு குறைந்ததற்கு இந்த திட்டம் அடிப்படை காரணமாகும்.
- மன்மோகன் சிங் இத்திட்டத்திற்கு நிதி ஒரு பொருட்டாக இருக்காது என தெரிவித்தார்.
காங்கிரஸ் கூட்டணி அரசால் 2005-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் (MGNREGA). இதன் கீழ் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.
பா.ஜ.க. ஆட்சியில் இதற்கான நிதியை விடுவிக்காததால் இதன் கீழ் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாக பல்வேறு மாநிலங்கள் குற்றம்சாட்டின.
இதற்கிடையே, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் என்பதை விரிவுபடுத்தி பூஜ்ய பாபு ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் (Pujya Bapu Rural Employment Scheme) என மத்திய அரசு பெயர் மாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், 100 நாள் வேலைத் திட்டத்தை ஒழித்துக் கட்டும் மோடி அரசைக் கண்டித்து இடதுசாரிகள், விசிக ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து இடதுசாரிகள், விசிக வெளியிட்டுள்ள அறிக்கையில், "இருபது ஆண்டுகளுக்கு முன்பு இடதுசாரி கட்சிகளின் முன்முயற்சியால், தி.மு.க, காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் "தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம் 2005" செப்டம்பர் 5 ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. நாட்டின் வரலாற்றில் முதன் முறையாக உடல் உழைப்பு மட்டுமே வாழ்வாதாரம் என்று இருக்கும் ஊரகப் பகுதி தொழிலாளர் குடும்பங்கள் ஆண்டுக்கு 100 நாள் வேலை பெறும் உரிமை சட்டப்பூர்வமாக வழங்கப்பட்டது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தின் கீழ் வேலை வாய்ப்புத் திட்டங்கள் உருவாக்கப்பட்டு, 2006 பிப்ரவரி 2 ஆம் தேதி தொடங்கி, நாடு முழுவதும் விரிவுபடுத்தி செயல்படுத்தப்பட்டு வருகிறது. திட்ட தொடக்க விழாவில் பேசிய அப்போதைய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் இத்திட்டத்திற்கு நிதி ஒரு பொருட்டாக இருக்காது என தெரிவித்தார்.
உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த முன்னோடி திட்டமாக திகழும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சமூக சொத்துக்கள் நாடு முழுவதும் உருவாக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளன; வேளாண் உற்பத்தி அதிகரித்துள்ளன; தீவிரமாகி வந்த நகரமயமாகும் வேகம் தணிந்து வேலை தேடி கிராமங்களில் இருந்து புலம் பெயர்ந்து செல்வது குறைந்துள்ளது. பட்டியலின மக்கள், பழங்குடியினர், பெண்கள் என சமூகத்தின் பலவீனமான பகுதியினர் வருமான வாய்ப்பு காரணமாக சுயமரியாதையுடன் கண்ணியமான வாழ்க்கைச் சூழலை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் வறுமை நிலை ஓரளவு குறைந்ததற்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம் அடிப்படை காரணமாகும்.
கடந்த 2014 ஆம் ஆண்டில் ஒன்றிய அரசின் அதிகாரத்தை கைப்பற்றிய பாஜக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சிதைத்து, அதன் திட்டப் பணிகளை சீர்குலைத்து, நிதி ஒதுக்கீட்டை குறைப்பது, வேலைநாட்களை குறைப்பது, பயனாளிகளின் எண்ணிக்கையை குறைப்பது, உரிய காலத்தில் நிதி வழங்காமல் இழுத்தடிப்பது என அடியோடு அழித்தொழிக்கும் தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, ஒன்றிய பாஜக அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை முற்றாக நீக்கிவிட்டு, வளர்ந்த பாரதம் - வேலைக்கான உறுதியளிப்பு மற்றும் ஊரக வாழ்வாதாரம் திட்டம் 2025 (விக்ஷித் பாரத் - கேரண்டி பார் ரோஜ்கர் மற்றும் ஆஜீவிகா மிஷன் 2025) என்ற புதிய மசோதாவை 16.12.2025 அன்று மக்களவையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்காத மக்கள் ஒற்றுமைக்கும், சிறுபான்மை மக்களுக்கும் எதிராக, மதவெறியூட்டி செயல்பட்டு வரும் வகுப்புவாத சக்திகள் விடுதலைப் போராட்டத்தை வழிநடத்திய தேசத் தந்தை மகாத்மா காந்தியை 1948 ஜனவரி 30ல் ஆர்.எஸ்.எஸ். படுகொலை செய்தது. அவர் இறந்த பிறகும் மகாத்மா காந்தியின் பெயரையும் கூட சகிக்க முடியாமல் அவரின் பெயரிலான திட்டத்தையும் படுகொலை செய்துள்ளது.
புதிய விபி-ஜி ராம் ஜி திட்டம் சட்டப்பூர்வ வேலை பெறும் உரிமையை பறித்து விட்டது. இந்தத் திட்டத்திற்கான செலவில் 40 சதவீதம் தொகையை மாநில அரசின் தலையில் சுமத்துகிறது. இதனால் மாநில அரசுகள் கூடுதல் நிதிச் சுமையை ஏற்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்படுகின்றன.
முந்தைய சட்டத்தில் வேலை கேட்டு முறையிட்டால் 15 நாட்களுக்குள் வேலை வழங்க வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. வேலை வழங்க முடியாத நிலையில் இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும். தவறு செய்யும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், அபராதம் விதித்து வசூலிக்கவும் வகை செய்யப்பட்டிருந்தது. புதிய திட்டத்தில் ஒன்றிய அரசின் பொறுப்புகள் அனைத்தும் விலக்கிக் கொள்ளப்பட்டு, கிராம ஊராட்சிகளுக்கு வழங்கிய அதிகாரங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டத்தின் மூலம் வேலை அட்டை பெற்றுள்ள சுமார் 14 கோடி குடும்பங்களையும், அதில் இணைந்துள்ள 26 கோடி தொழிலாளர்களையும் வஞ்சிக்கும் வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை நீக்கிவிட்டு புதிய வி பி - ஜி ராம் ஜி என்ற வகுப்புவாத சார்பு கொண்ட வஞ்சகத் திட்டத்திற்கு நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் இடதுசாரி கட்சிகள் - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவை ஒருங்கிணைந்து வரும் 23.12.2025 ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை தமிழகம் முழுவதும் மாவட்ட, வட்ட, ஒன்றிய தலைநகரங்களில் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்துள்ளன.
இந்த முடிவின் படி இடதுசாரி கட்சிகள் - விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட அமைப்புகள், ஒருங்கிணைந்து, ஊரகப் பகுதி உழைக்கும் மக்களை பெருமளவில் திரட்டி, கண்டன ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.






