என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்- தே.மு.தி.க. நிலைப்பாடு என்ன?
- தே.மு.தி.க. தனது வேட்பாளரை நிறுத்தி, அதற்கு அ.தி.மு.க ஆதரவை கேட்கலாம்.
- தே.மு.தி.க. எடுக்கும் நிலைப்பாட்டை பொறுத்தே விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பரபரப்பு இன்னும் கூடும்.
சென்னை:
விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ. புகழேந்தி மரணம் அடைந்ததை தொடர்ந்து அந்த தொகுதிக்கு அடுத்த மாதம் 10-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. வாக்குகள் 13-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜனதா கூட்டணி மற்றும் நாம்தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி, விழுப்புரம் (தனி) பாராளுமன்ற தொகுதிக்குள் வருகிறது. ஆனால் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி பொது தொகுதியாகும். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி கட்சி சார்பில் போட்டியிட்ட ரவிக்குமார், விக்கிரவாண்டி சட்டசபை தொகுதியில் மட்டும் 72 ஆயிரத்து 188 வாக்குகள் பெற்றார்.
அ.தி.மு.க., தே.மு.தி.க. கூட்டணி சார்பில் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் பாக்கியராஜ் 65 ஆயிரத்து 365 வாக்குகள் பெற்றார். பா.ஜனதா கூட்டணி சார்பில் போட்டியிட்ட பா.ம.க வேட்பாளர் முரளி சங்கர் 32 ஆயிரத்து 198 வாக்குகள் பெற்றார்.
இந்த தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் அதிக வாக்குகள் பெற்று இருப்பதால், இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் கடும் போட்டி ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் அ.தி.மு.க. இந்த இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக நேற்று திடீரென்று அறிவித்தது.
இந்த அறிவிப்பு அ.தி.மு.க. தொண்டர்களுக்கு மட்டுமின்றி அதன் கூட்டணி கட்சியான தே.மு.தி.க.விற்கும் பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.
இந்த விவகாரத்தில் தே.மு.தி.க. என்ன நிலைப்பாடு எடுக்க போகிறது என்று இன்னும் தெரியவில்லை. ஒருவேளை அங்கு தே.மு.தி.க. தனது வேட்பாளரை நிறுத்தி, அதற்கு அ.தி.மு.க ஆதரவை கேட்கலாம். அல்லது, அ.தி.மு.க. போன்று போட்டியில் இருந்து விலகி கொள்ளலாம்.
தே.மு.தி.க. எடுக்கும் நிலைப்பாட்டை பொறுத்தே விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பரபரப்பு இன்னும் கூடும்.
இருப்பினும் தற்போதைய நிலையில் அங்கு மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.தி.மு.க. கூட்டணி சார்பில் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா போட்டியிடுகிறார். பா.ஜனதா கூட்டணி சார்பில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா போட்டியிடுகிறார்.






