search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இன்றுடன் ஓராண்டு - என்னதான் ஆச்சு வேங்கைவயல் விவகாரம்?
    X

    இன்றுடன் ஓராண்டு - என்னதான் ஆச்சு வேங்கைவயல் விவகாரம்?

    • இதுவரை 31 நபர்கள் டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
    • ஓராண்டை கடந்தும் குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் இருப்பது ஏமாற்றம் அளித்துள்ளது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் உள்ள வேங்கைவயலில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தண்ணீர் வழங்கும் மேல்நிலைத் தொட்டிக்குள் கடந்த டிசம்பர் 26-ந் தேதி மனித மலம் கண்டெடுக்கப்பட்டது கடும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் நடந்து ஒரு வருடம் கடந்தும் விசாரணையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படாமல் இதுவரை யாரும் கைது செய்யப்படாமல் இருப்பது அந்த மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

    இந்த சம்பவத்தினை முதலில் புதுக்கோட்டை மாவட்ட காவல் துறையினர் விசாரணை நடத்தினர். பின்னர் இந்த ஆண்டு ஜனவரியில் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த குடிநீர் தொட்டி மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. தொடர்ச்சியாக அங்கு போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

    இதுபற்றி எறையூர் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் கூறும்போது, இந்த சம்பவத்தில் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். ஆனால் தாமதமாகி வருகிறது. ஓராண்டை கடந்தும் இயல்பு நிலை இன்னமும் திரும்பாமல் இருப்பது வேதனை அளிக்கிறது.

    எங்களுக்கு ஒரு சாதாரண வாழ்க்கை தேவை. இந்த சம்பவத்திற்குப் பிறகு கிராமத்தில் சாதிப்பிளவுகள் இன்னும் ஆழமாகியுள்ளன என வேதனை தெரிவித்தார்.

    சி.பி.சி.ஐ.டி. துணை போலி சூப்பிரண்டு பால்பாண்டி கூறும்போது, இந்த விவகாரத்தில் சாட்சிகள் யாரும் இல்லாததால் அறிவியல் பூர்வமான முறையில் சோதனையும், அதன் அடிப்படையிலான விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது.

    இதுவரை முத்துக்காடு, இறையூர், காவிரி நகர் உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 31 நபர்கள் டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அதில் ஒருவர் குரல் மாதிரி சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.

    இவர்களில் 10 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு நீதிமன்றத்தில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் குற்றவாளிகளை பிடிப்போம் என்றார்.

    தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் செயலாளர் சி.கே.கனகராஜ் கூறுகையில், கடந்த வாரம் நாங்கள் வேங்கை வயல் கிராமத்திற்கு சென்றோம். ஓராண்டை கடந்தும் குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் இருப்பது ஏமாற்றம் அளித்துள்ளது. இந்த வழக்கினை திட்டமிட்டு காலம் தாழ்த்துவதாக சந்தேகிக்கின்றோம்.

    இப்போதும் தலித் மக்கள் அதிக பயத்தில் இருக்கிறார்கள். நாங்கள் போராட்டம் நடத்த முடிவு செய்தோம், ஆனால் போலீசார் அனுமதி மறுத்ததால் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. தலித் மக்களுக்கு தொடர்ந்து நம்பிக்கை அளிக்க முயற்சி செய்து வருகிறோம் என்றார்.

    சம்பவம் நடந்து ஒரு ஆண்டு ஆகியும் இன்னும் இந்த வழக்கில் யாரும் கைது செய்யப்படவில்லை. முடிவு இல்லாத தொடர்கதை போல நீளும் வேங்கை வயல் வழக்கு விசாரணையை இன்னும் தீவிரப்படுத்தி வழக்கை முடிவுக்கு கொண்டு வந்து அந்த பகுதியில் இயல்பு நிலை திரும்ப செய்யவேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    Next Story
    ×