search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அ.தி.மு.க. ஆட்சியில் டெண்டர் முறைகேடு புகார்: எடப்பாடி பழனிசாமி வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு
    X

    அ.தி.மு.க. ஆட்சியில் டெண்டர் முறைகேடு புகார்: எடப்பாடி பழனிசாமி வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு

    • வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, நெடுஞ்சாலை துறை டெண்டர் முறைகேடு புகார் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தும்படி 2018-ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது.
    • ஆட்சி மாற்றம் காரணமாக புதிதாக விசாரிக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறி வழக்கை கடந்த ஜூலை 18-ந்தேதி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

    சென்னை:

    அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் நெடுஞ்சாலை துறையை கையில் வைத்திருந்த எடப்பாடி பழனிசாமி அதில் பல டெண்டர் முறைகேடுகளை செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார் அளித்திருந்தார்.

    இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு துறை நடவடிக்கை எடுக்காததால் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, நெடுஞ்சாலை துறை டெண்டர் முறைகேடு புகார் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தும்படி 2018-ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது.

    இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு உத்தரவை ரத்து செய்ததுடன், வழக்கை சென்னை ஐகோர்ட்டு மீண்டும் விசாரித்து முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

    இதையடுத்து அந்த வழக்கு விசாரணை நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் அமர்வில் நடைபெற்றது. விசாரணை முடிவில் 2018-ல் லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையிலேயே விசாரணை நடத்தப்பட வேண்டும். ஆட்சி மாற்றம் காரணமாக புதிதாக விசாரிக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறி வழக்கை கடந்த ஜூலை 18-ந்தேதி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

    இதனிடையே சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து ஆர்.எஸ்.பாரதி மேல்முறையீடு செய்தால் தங்கள் தரப்பு விளக்கத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என எடப்பாடி பழனிசாமி சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்தார்.

    இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆர்.எஸ்.பாரதி கொடுத்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்தும், வழக்கை முழுமையாக முடித்து வைத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகவும் லஞ்ச ஒழிப்பு துறை சார்பாக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. மேலும் வழக்கை தொடர்ந்து நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும் லஞ்ச ஒழிப்பு துறை கோரிக்கை வைத்து உள்ளது.

    Next Story
    ×