search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    40 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தி.மு.க.வுக்கு வர தயாராக இருந்தனர்: சபாநாயகர் அப்பாவு பேச்சு
    X

    40 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தி.மு.க.வுக்கு வர தயாராக இருந்தனர்: சபாநாயகர் அப்பாவு பேச்சு

    • எவ்வளவு போராட்டம், எவ்வளவு எதிர்நீச்சல், எவ்வளவு எதிர்வினைகளை தாண்டிதான் நாம் இங்கே எல்லோரும் நிற்கின்றோம்.
    • ஓரிரு நாட்கள் கழித்து என்னிடம் இந்த 40 பேர்களையும் நம்பி நாம் ஆட்சி அமைக்கலாம் என்று நினைக்கிறீர்களா ஒரு போதும் தேவையில்லை.

    சென்னை:

    புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சி ஒன்றில் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:-

    இப்போது நாமெல்லாம் நிமிர்ந்து நிற்கின்றோம். அதற்கு காரணமானவர் நிமிர்ந்து நிற்கிறார். எவ்வாறு அவர் (மு.க.ஸ்டாலின்) நிமிர்ந்த பார்வையோடு நிற்கிறார் என்று சொன்னால் எளிதாக இது கிடைத்து விடவில்லை.

    எவ்வளவு போராட்டம், எவ்வளவு எதிர்நீச்சல், எவ்வளவு எதிர்வினைகளை தாண்டிதான் நாம் இங்கே எல்லோரும் நிற்கின்றோம்.

    கலைஞர் வருகிறார் என்று சொன்னால் கலைஞர் எவ்வளவு பெரிய தாக்குதல்களை எல்லாம் தாங்கி இருக்கிறார் என்பது உங்கள் எல்லோருக்கு தெரிந்திருக்கும்.

    நான் ஒரு உண்மையை சொல்ல விரும்புகிறேன். அம்மையார் ஜெயலலிதா மறைந்த போது 18 எம்.எல்.ஏ.க்கள் கவர்னரிடம் புகார் கொடுத்த காரணத்தால் நீக்கப்பட்டார்கள்.

    2017-ம் ஆண்டு அ.தி.மு.க. பல பிரிவுகளாகி 18 எம்.எல்.ஏ.க்கள் தனி அணியாக சென்ற போது அவர்கள் நீக்கப்பட்டனர். அதற்கு துணையாக இருந்தவர் டி.டி.வி. தினகரன்.

    அன்று காலையிலேயே ஒரு நண்பர் என்னை அழைக்கின்றார். இன்றைய முதலமைச்சரான மு.க. ஸ்டாலினிடம் ஒரு தகவலை சொல்லுங்கள். 40 அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் தி.மு.க.வுக்கு வர தயாராக இருக்கிறார்கள். நான் அழைத்து வந்து விடுகிறேன். அவர்கள் எங்கு செல்வது என்று தெரியாமல் இருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.

    இப்போது எதிர்க்கட்சி தலைவராக இருக்கிற எடப்பாடி பழனிசாமி அப்போது முதலமைச்சராக பொறுப்பேற்று இருந்தாலும் அடுத்த நிலைக்கு எவ்வாறு செல்வது என்று தெரியாத நிலையில், டி.டி.வி. தினகரன் திகார் சிறைக்கு சென்ற அந்த நாளில் 40 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தி.மு.க. வுக்கு வர தயாராக இருந்த தகவலை என்னிடம் அந்த நண்பர் தெரிவித்தார்.

    அப்போது 4 ஆண்டு காலம் இன்னும் ஆட்சி இருக்கிறது என்பதால் தி.மு.க. ஆட்சி அமைத்தால் வந்தவுடனே பஞ்சாயத்து தேர்தலை வைத்தால் 2 கோடி பேருக்கு பதவி கொடுத்து விடலாம். கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேருக்கு கூட்டுறவு துறையில் பதவி போட்டுக் கொடுத்து விடலாம் என்றெல்லாம் நினைப்பு வந்தது.

    10 வருடம் தி.மு.க. ஆட்சி இல்லாமல் இருக்கிறது. நிச்சயமாக இந்த வாய்ப்பை பயன்படுத்த வேண்டும் என்ற நம்பிக்கையோடு நான் முதல்வருடைய வீட்டிற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவசரமாக பார்க்க வேண்டும் என்று சொன்னேன்.

    இன்றைய முதல்வர் மதிய உணவுக்காக வந்திருந்த சமயம். இந்த தகவல் சென்றதும் என்ன விசயம் அப்பாவு என்று கேட்டார்.

    நான் அப்போது டி.வி. விவாதங்களில் சென்று பேசுவது வழக்கம். அது தொடர்பாகதான் பேசுகிறாரோ என்று நினைத்தேன். அப்போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் விசயங்கள் பற்றி அவரது கவனத்திற்கு கொண்டு சென்றேன். அதற்கு அவர், நான் அப்புறம் சொல்கிறேன் அப்பாவு என்று தொலைபேசியில் முடித்துக் கொண்டார்.

    அதன் பிறகு ஓரிரு நாட்கள் கழித்து என்னிடம் இந்த 40 பேர்களையும் நம்பி நாம் ஆட்சி அமைக்கலாம் என்று நினைக்கிறீர்களா ஒரு போதும் தேவையில்லை. மக்களிடம் செல்வோம். மக்கள் நமக்கு அந்த அதிகாரத்தை தந்தால் நாம் ஆட்சி செய்வோமே தவிர அதற்கு முன்பாக தேவையில்லை என்று சொன்னவர் இன்றைய முதல்வர். அந்த அளவுக்கு முதலமைச்சர் மு.கஸ்டாலின் கொள்கையோடு இருந்தவர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×