என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    O Panneer Selvam
    X

    ஓ.பன்னீர்செல்வத்தை எந்த காலத்திலும் சேர்க்க மாட்டோம்- அ.தி.மு.க. திட்டவட்ட அறிவிப்பு

    • எடப்பாடியார் ஒருபோதும் முதலமைச்சர் பதவி கொடுங்கள் எனவும், பொதுச்செயலாளர் பதவி கொடுங்கள் எனவும் யாரிடத்திலும் போய் நிற்கவில்லை.
    • துணை முதலமைச்சர் பதவி கொடுத்த போதே கட்சியில் முக்கிய முடிவுகள் எடுக்கும் தருணத்தில் அதற்கு மறுப்பு தெரிவித்து மவுனம் சாதித்தார்.

    மதுரை:

    அ.தி.மு.க.வில் இருந்து கடந்த 2017-ம் ஆண்டு ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டிருந்தார். அதன் பிறகு காட்சிகள் மாறின.

    எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வில் அவர் இணைந்தார். அப்போது அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கப்பட்டது.

    அதன் பிறகு எடப்பாடி பழனிசாமியுடன் ஓ.பன்னீர் செல்வம் ஒத்துப்போகாத நிலையில் 2-வது முறையாக கடந்த 2022-ம் ஆண்டு ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார்.

    அ.தி.மு.க. தலைமைக் கழகத்தை ஓ.பன்னீர்செல்வம் கைப்பற்ற வந்த போது அவரது ஆட்கள் தலைமைக் கழக கதவை காலால் எட்டி உதைத்து அங்கிருந்த பொருட்களை தஸ்தாவேஜுகளை அள்ளிச் சென்றனர். அதனால் ஓ.பன்னீர்செல்வத்தை அ.தி.மு.க.வில் இருந்து நீக்கி பொதுக்குழுவில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார்கள்.

    அதன் பிறகு ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வில் சேர எடுத்த முயற்சிகள் எதுவும் பலன் அளிக்கவில்லை. அவரை அ.தி.மு.க.வில் சேர்க்க முடியாது என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக உள்ளார். இதனால் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் பாரதிய ஜனதா ஆதரவுடன் ஓ.பன்னீர்செல்வம் சுயேட்சையாக போட்டியிட்டார்.

    இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வில் சேருவதற்கு மீண்டும் முயற்சிப்பதாக தகவல்கள் வெளியானது. இதனால் அ.தி.மு.க.வில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அவரை அ.தி.மு.க.வில் எக்காலத்திலும் சேர்க்க மாட்டோம் என்று சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரான முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

    மதுரையில் ஆர்.பி. உதயகுமார் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

    கேள்வி:- அ.தி.மு.க.வில் மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் இணைய போவதாக சிலர் வதந்தியை பரப்புகிறார்களே அது உண்மையா?

    பதில்:- பாராளுமன்ற தேர்தல் முடிவு வெளியான பிறகு மீண்டும் ஓ.பன்னீர்செல்வத்தை சேர்க்க திட்டம். திரைமறைவில் நடக்கும் ரகசிய முயற்சிகள் என்று நீங்கள் கேட்ட இந்த செய்தியை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர். அது மட்டுமல்ல எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் செய்திகள் ஊடகங்களில் வெளி வருகிறது.

    ஓ.பன்னீர்செல்வத்தை பொறுத்தவரையில், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதல் முதலாக அ.தி.மு.க.வில் தனக்கு பதவி பறிபோகிறது என்ற ஒரு சூழ்நிலை வந்தவுடன், பிரிவுக்காக முதன் முதலாக பிள்ளையார் சுழி போட்டவர் ஓ.பன்னீர்செல்வம்தான்.

    அதைத் தொடர்ந்து அம்மா உயிரை கொடுத்து உருவாக்கிய அ.தி.மு.க. அம்மா அரசை காப்பாற்றுவதற்கு நம்பிக்கை கோரும் தீர்மானத்தை சட்டமன்றத்தில் முன் வைத்த போது எதிர்க்கட்சிகளால் கொண்டு வரப்பட்ட போது அதிலும் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு நிலைப்பாடு இல்லாமல் எதிர்த்து வாக்களித்த ஒரு நிலையை சட்டமன்றத்தில் பார்த்தோம். அது அங்கே பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அதைத் தொடர்ந்து கட்சிக்கு எதிராக வாக்களித்தாலும் கட்சி ஒற்றுமையின் முக்கியத்துவத்தை கருதி அவரை மீண்டும் கட்சியில் இணைத்துக் கொண்டு அவருக்கு கட்சியில் மிக உயர்ந்த பொறுப்பான பொதுச்செயலாளர் அந்தஸ்திலான ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.

    ஆட்சியிலே முதலமைச்சர் அந்தஸ்தில் துணை முதலமைச்சர் பதவியும் சி.எம்.டி.ஏ. வீட்டு வசதி வாரிய பொறுப்பும் வழங்கப்பட்டது.

    ஆனால் கட்சியில் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டிய தருணத்தில் எல்லாம், ஒன்று அந்த முடிவுக்கு மறுப்பு தெரிவிப்பார். அல்லது மவுனம் சாதிப்பார். இதனால் கட்சியினுடைய வளர்ச்சி நடவடிககை வரலாறு காணாத வகையிலே பின் தங்கி இருந்ததை நாம் பார்த்தோம்.



    தேர்தலில் அவரது சொந்த மாவட்டத்தில் தேனியில் அம்மாவின் மறைவுக்கு பிறகு இன்றைக்கு இரட்டை இலை எத்தனை தொகுதியிலே அங்கு வெற்றி பெற்றிருக்கிறது? அவர் போட்டியிட்ட சட்டமன்ற தொகுதி தவிர 4 தொகுதியில் 3 தொகுதி தொடர்ந்து தோல்வியை தழுவி இருக்கிறது.

    தேனி எம்.பி. தொகுதி வெற்றி பெற்றதே? என்று நீங்கள் கேட்கலாம். தேனி எம்.பி. தொகுதி அப்போது வெற்றி பெற்றது வேறு விவகாரம். அந்த விவகாரத்துக்குள் செல்ல நான் விரும்பவில்லை.

    அந்த வெற்றி என்பது அவருக்கு மட்டும் சொந்தமல்ல. அது அ.தி.மு.க.வுக்கான சொந்தம். அதன் பிறகு அவர் அ.தி.மு.க.வில் செய்த குழப்பங்கள் ஏராளம். அ.தி.மு.க. தொண்டர்கள் கோவிலாக வணங்கும் தலைமைக் கழகத்தை குண்டர்களுடன் வந்து அடித்து நொறுக்கி தலைமைக் கழக கதவை காலால் எட்டி உதைத்து அங்கிருந்த தஸ்தாவேஜுகளை தூக்கிச் சென்றதை நாடே அறியும்.

    அந்த சமயத்தில் அவர் அ.தி.மு.க.வில் இருந்து 2-வது முறையாக நீக்கப்பட்டார். அ.தி.மு.க.வின் பொதுக்குழுவில் இதற்கான தீர்மானம் கொண்டு வரப்பட்டு ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

    அதன் பிறகு அ.தி.மு.க.வை எதிர்த்து நீதிமன்றம் சென்றார். இரட்டை இலையை முடக்கப் பார்த்தார்.

    அ.தி.மு.க.வின் 52 ஆண்டுகால வரலாற்றில் இத்தனை வழக்குகளை நீதிமன்றத்தில் சந்தித்தது கிடையாது. அதற்கு காரணம் ஓ.பி.எஸ்., அவர் சுயலாபத்துக்காக பதவி சுகத்துக்காக வழக்கு தொடர்ந்துள்ளார்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒப்புதலோடு நான் சொல்கிறேன். எந்த காலத்திலும் ஓ.பன்னீர்செல்வத்தை அ.தி.மு.க.வில் மீண்டும் சேர்ப்பதாக வருகின்ற செய்திகளில் துளியும் உண்மை இல்லை. இதை அழுத்தம் திருத்தமாக ஆணித்தரமாக அ.தி.மு.க. சார்பாக நான் சொல்கிறேன்.

    இரட்டை இலைக்கு எதிராக ஒற்றை சீட்டுக்காக தற்போது இரட்டை இலையை தோற்கடிப்பேன் என சுயேட்சையாக ராமநாதபுரத்தில் போட்டியிட்ட ஓ.பி.எஸ்.சை எந்த வகையில் ஏற்றுக்கொள்ள முடியும்.


    இதுபோல் ஓ.பி.எஸ். தொடர்ந்து கட்சிக்கு எதிராக பல பாவங்களை செய்து வருகிறார். எடப்பாடியார் ஒருபோதும் முதலமைச்சர் பதவி கொடுங்கள் எனவும், பொதுச்செயலாளர் பதவி கொடுங்கள் எனவும் யாரிடத்திலும் போய் நிற்கவில்லை.

    ஓ.பி.எஸ்.க்கு ஆட்சியிலும், கட்சியிலும் உரிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. கட்சியில் உரிய முக்கியத்துவம் பிரதிநித்துவம் கொடுக்கும் வகையில் துணை முதலமைச்சர் பதவி கொடுத்த போதே கட்சியில் முக்கிய முடிவுகள் எடுக்கும் தருணத்தில் அதற்கு மறுப்பு தெரிவித்து மவுனம் சாதித்தார். இதனால் கட்சியின் வளர்ச்சி நடவடிக்கை வரலாறு காணாத வகையில் பின்தங்கியது.

    ஓ.பன்னீர்செல்வத்தை பொறுத்தவரை ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதல் முதலாக அ.தி.மு.க.வில் தனக்கு பதவி பறிபோகிறது என்ற சூழல் வந்தவுடன் பிரிவுக்கு முதல் முதலில் பிள்ளையார் சுழி போட்டவர் ஓ.பி.எஸ்.தான். அ.தி.மு.க.வில் ஓ.பி.எஸ். இணைவதாக வரும் தகவலுக்கு எந்தவிதமான அடிப்படை ஆதாரமும் இல்லை.

    இவ்வாறு உதயகுமார் கூறினார்.

    Next Story
    ×