என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    1500 அரசு பஸ்களில் முன்பதிவு தீவிரம்- சென்னையில் இருந்து வெளியூர் செல்ல 3 நாட்களுக்கு இடங்கள் இல்லை
    X

    1500 அரசு பஸ்களில் முன்பதிவு தீவிரம்- சென்னையில் இருந்து வெளியூர் செல்ல 3 நாட்களுக்கு இடங்கள் இல்லை

    • பொதுமக்கள் நெரிசல் இல்லாமல் பயணம் செய்ய www.tnstc.com இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
    • முன்பதிவு பஸ்கள் நிரம்பினாலும் பொதுமக்கள் எந்நேரமும் பயணம் செய்ய ஏதுவாக முன்பதிவு இல்லாத சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    சென்னை:

    பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட வெளியூர்களில் தங்கி தொழில் செய்பவர்கள் விரும்புவார்கள். மற்ற பண்டிகையை விட பொங்கலை தான் சிறப்பாக கொண்டாடுவது வழக்கம்.

    சென்னை மற்றும் பல்வேறு நகரங்களில் இருந்து பொதுமக்கள் சொந்த ஊர் செல்வதற்காக நாளை மறுநாள் (வியாழக்கிழமை) முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கானவர்கள் வெளியூர் பயணத்தை பஸ், ரெயில்களில் திட்டமிட்டுள்ளனர்.

    சிறப்பு ரெயில்கள் உள்ளிட்ட அனைத்து ரெயில்களும் நிரம்பிவிட்ட நிலையில் அரசு விரைவு பஸ்களில் எல்லா இருக்கைகளும் நிரம்பிவிட்டன. 12, 13, 14 ஆகிய 3 நாட்களிலும் நீண்ட தூரம் செல்லக்கூடிய பஸ்கள் எல்லாம் நிரம்பிவிட்டன.

    குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், மதுரை, திருச்சி, பெங்களூர், கோவை, திருப்பூர், கும்பகோணம், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லக்கூடிய விரைவு பஸ்கள் நிரம்பிவிட்ட நிலையில் பிற போக்குவரத்து கழக பஸ்கள் முன்பதிவில் இணைக்கப்பட்டுள்ளன.

    இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் இளங்கோவன் கூறியதாவது:-

    அரசு பஸ்களில் வியாழன், வெள்ளி, சனிக்கிழமைகளில் பயணம் செய்வதற்கு பெரும்பாலான இடங்கள் நிரம்பி விட்டன.

    சென்னையில் இருந்து மட்டுமே 1 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். 900 அரசு விரைவு பஸ்களில் இருக்கைகள் நிரம்பி விட்டதால் மதுரை, நாகர்கோவில், சேலம், கோவை, விழுப்புரம் போக்குவரத்து கழகங்களை சேர்ந்த 600 பஸ்களுக்கு தற்போது முன்பதிவு நடைபெற்று வருகிறது.

    அதிலும் இடங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. அதனால் நாளை (11-ந்தேதிக்கு) மக்கள் முன்பதிவு செய்ய தீவிரமாக உள்ளனர். நாளை பயணம் செய்ய இதுவரையில் 10 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து இருக்கிறார்கள். இதுவார இறுதியில் வழக்கமாக நடைபெறும் முன்பதிவு அளவாகும்.

    பொதுமக்கள் நெரிசல் இல்லாமல் பயணம் செய்ய www.tnstc.com இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவு பஸ்கள் நிரம்பினாலும் பொதுமக்கள் எந்நேரமும் பயணம் செய்ய ஏதுவாக முன்பதிவு இல்லாத சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    கடந்த ஆண்டை காட்டிலும் இந்த வருடம் அதிக அளவில் மக்கள் வெளியூர் பயணத்தை மேற்கொள்வார்கள் என்று கருதுகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பொங்கல் சிறப்பு பஸ்கள் 12-ந்தேதி முதல் அறிவிக்கப்பட்ட போதிலும் வெளியூர் செல்வோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நாளை முதல் கூடுதலாக பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    Next Story
    ×