search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தொகுதி பங்கீட்டை மார்ச் 9-ந்தேதிக்குள் முடிப்பதற்கு தி.மு.க. திட்டம்
    X

    தொகுதி பங்கீட்டை மார்ச் 9-ந்தேதிக்குள் முடிப்பதற்கு தி.மு.க. திட்டம்

    • தோழமை கட்சிகளின் பிடிவாதம் தி.மு.க. தலைவர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.
    • இந்த வார இறுதியில் இருந்து மீண்டும் தி.மு.க.வுடன் தோழமை கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளன.

    சென்னை:

    தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, முஸ்லீம் லீக், கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

    இதில் முஸ்லிம் லீக், கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி ஆகிய 2 கட்சிகளுக்கும் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டது. முஸ்லிம் லீக் கட்சி ராமநாதபுரம் தொகுதியிலும், கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி நாமக்கல் தொகுதியிலும் போட்டியிடுகின்றன.

    இந்த நிலையில் தி.மு.க.வுடன் நடத்திய 2 கட்ட பேச்சுவார்த்தையில் இதுவரை காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிகள் உடன்பாடுக்கு வரவில்லை. இந்த கட்சிகள் கடந்த தேர்தலை விட இந்த தடவை கூடுதல் தொகுதிகள் கேட்கின்றன.

    காங்கிரஸ் கட்சி 12 இடங்கள் கேட்கிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சி 4 இடங்கள் கேட்கிறது. இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிகள் தலா 3 இடங்கள் கேட்கின்றன.

    ம.தி.மு.க. 2 இடம் வேண்டும் என்கிறது. இந்த கூட்டணிக்கு புதிதாக வந்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் 2 இடம் வேண்டும் என்கிறது. இதனால் இழுபறி நீடித்து கொண்டே இருக்கிறது.

    இந்த நிலையில் தோழமை கட்சிகளின் பிடிவாதம் தி.மு.க. தலைவர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து தி.மு.க. தரப்பில் புதிய வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. வருகிற 9-ந்தேதிக்குள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்யும் வகையில் ஒத்துழைக்க கேட்டு கொண்டு உள்ளது.

    அதன் பேரில் இந்த வார இறுதியில் இருந்து மீண்டும் தி.மு.க.வுடன் தோழமை கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளன. அதில் சுமூக தீர்வு எட்டப்படும் என்று தெரிகிறது.

    Next Story
    ×