என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கோரிக்கைகளை நிறைவேற்றாமல் அரசு டாக்டர்களை பழிவாங்குவதா?- ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
    X

    கோரிக்கைகளை நிறைவேற்றாமல் அரசு டாக்டர்களை பழிவாங்குவதா?- ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

    • போராட்டக் களத்தில் உள்ள மருத்துவர்களை நேரில் சென்று சந்தித்து தனது ஆதரவினை தெரிவித்தவர் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர், தற்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.
    • ஆதரவு தெரிவித்ததோடு நின்றுவிடாமல், தி.மு.க. ஆட்சி அமைந்ததும் அரசு மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்ற உத்தரவாதத்தையும் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களிடம் தெரிவித்தார்.

    சென்னை:

    ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தேர்தல் வாக்குறுதிகளுக்கு முற்றிலும் முரணான வகையில் சொத்து வரியை உயர்த்திய தி.மு.க. அரசு, மின்சார கட்டணத்தை உயர்த்திய தி.மு.க. அரசு பால் மற்றும் பால் பொருட்களின் விலையை உயர்த்திய தி.மு.க. அரசு, தற்போது அரசு மருத்துவர்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாததோடு மட்டுமல்லாமல் அவர்களை பழிவாங்கிக் கொண்டிருக்கிறது.

    தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 2019-ம் ஆண்டு காலவரையற்ற போராட்டம் நடத்தியபோது, சில மருத்துவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தையும் மேற்கொண்டனர்.

    அப்போது, போராட்டக் களத்தில் உள்ள மருத்துவர்களை நேரில் சென்று சந்தித்து தனது ஆதரவினை தெரிவித்தவர் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர், தற்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    ஆதரவு தெரிவித்ததோடு நின்றுவிடாமல், தி.மு.க. ஆட்சி அமைந்ததும் அரசு மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்ற உத்தரவாதத்தையும் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களிடம் தெரிவித்தார்.

    அவர்களுடைய கோரிக்கையே முந்தைய தி.மு.க. ஆட்சிக் காலத்தில், 2009-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட அரசாணை எண் 354-ஐ அமல்படுத்த வேண்டும் என்பதுதான். இதைக்கூட தி.மு.க. அரசிற்கு நிறைவேற்ற மனமில்லை. மாறாக, பழி வாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

    போராட்டக் குழுவின் நிர்வாகிகள் மீது அரசு ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன. போராடுவது அவர்களது உரிமை, கடமை என்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது வீரவசனம் பேசிவிட்டு, முதல்-அமைச்சராக வந்தவுடன் போராடுபவர்கள் மீது அடக்குமுறையை ஏவி விடுவது நியாயமா என்பதை முதல்-அமைச்சர் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

    இதற்குப் பெயர்தான் "சொன்னதை செய்வோம்" என்பதா? தி.மு.க. அரசின் இந்த அடக்குமுறை நடவடிக்கைக்கு அ.தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    Next Story
    ×