search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வெள்ளத்தால் ரூ.1000 கோடிக்கு சாலைகள் சேதம்- ஆய்வுக்கு பின் அமைச்சர் பேட்டி
    X

    வெள்ளத்தால் ரூ.1000 கோடிக்கு சாலைகள் சேதம்- ஆய்வுக்கு பின் அமைச்சர் பேட்டி

    • பாலம் தேசிய நெடுஞ்சாலை பிரிவை சேர்ந்தது.
    • பணி முடிவடைந்ததும் இந்த வழித்தடத்தில் போக்குவரத்து நடைபெறும்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கடந்த 16-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை கனமழை கொட்டி தீர்த்தது.

    குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 2 நாட்களாக விடாமல் பெய்த பெரு மழையால் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

    இதனால் தூத்துக்குடி மாநகரம் மட்டுமின்றி திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஏரல், ஆழ்வார்திருநகரி பகுதிகளில் சாலைகள் துண்டிக்கப்பட்டது.

    ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் தனி தீவுகளாக மாறின. மழை ஓய்ந்ததை தொடர்ந்து மீட்பு பணிகள் மற்றும் சீரமைப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஏரல் பகுதியில் பாலம் உடைக்கப்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

    அங்கு தற்காலிகமாக மாற்று சாலை அமைக்கப்பட்டது. இந்த பணிகளை பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். இதே போல ஸ்ரீவைகுண்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள சாலைகள், பாலங்களை சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. அவற்றை ஆய்வு செய்த பின்னர் அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது:-

    தூத்துக்குடியில் 112 இடங்களில் சாலைகளில் உடைப்பு ஏற்பட்டு அடித்து செல்லப்பட்டதால் இப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதில், 84 இடங்களில் சாலைகள் செப்பனிடபட்டு போக்குவரத்து சரி செய்யப்பட்டு உள்ளது.


    திருச்செந்தூர், பாளையங்கோட்டை சாலையில் 3 இடங்களில் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் பழுதடைந்து இருந்தன. தற்போது 2 இடங்கள் சரி செய்யப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள ஒரு இடத்தில் 3 மீட்டர் நீளத்திற்கு சாலை உடைப்பு ஏற்பட்டு சாலை துண்டிக்கப்பட்டு உள்ளது.

    இதனை சீரமைக்க பணிகள் நடைபெறுகின்றன. இந்த பணி முடிவடைந்ததும் இந்த வழித்தடத்தில் போக்குவரத்து நடைபெறும்.

    ஏரல் பாலமும், ஆத்தூர் பாலமும் ரூ.19.94 கோடி ரூபாய் மதிப்பில் அ.தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்டன. அணுகு சாலை வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டு விட்டது. அப்பகுதியில் தரைப்பாலம் உறுதியாக இருக்கிறது.

    நெல்லை-தூத்துக்குடி சாலையில் உள்ள பாலம் தேசிய நெடுஞ்சாலை பிரிவை சேர்ந்தது. அதில், ஒரே ஒரு தூண் மட்டுமே கீழே இறங்கி உள்ளது. என்ஜினீயர்களை உள்ளடக்கிய தொழில்நுட்ப குழுவை உடனடியாக வரவழைத்து ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தரைப்பாலம் வழியே வாகனங்கள் செல்கின்றன. இதுவரை இல்லாத அளவுக்கு தூத்துக்குடியில் 95 சென்டி மீட்டர் மழை பெய்ததால் சாலைகள் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளன.

    நெல்லை மாவட்டத்தில் 46, தூத்துக்குடி மாவட்டத்தில் 112, தென்காசி மாவட்டத்தில் 13, விருதுநகர் மாவட்டத்தில் 13, நாகர்கோவிலில் 5 சாலைகள் என நெடுஞ்சாலை துறையை பொறுத்த வரை ரூ.1000 கோடி அளவுக்கு சாலைகள் பாதிக்கப்பட்டு உள்ளன.

    தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது 65 இடங்களில் சாலைகள் சீர் செய்யப்பட்டு போக்குவரத்து தொடங்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள இடங்களில் சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×