என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

8 மாவட்டங்களில் புயலை எதிர்கொள்ள 500 பேரிடர் மீட்பு படை- 1100 தீயணைப்பு வீரர்கள் தயார்
- சென்னையில் புயல் பாதிப்பு ஏற்படும் இடங்களுக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை முழு வீச்சில் மேற்கொள்ள தீயணைப்புத் துறையினரும் தயாராக உள்ளனர்.
- சென்னை மாநகர போலீசாரும் மீட்பு பணிகளை மேற்கொள்ள முழு வீச்சில் தயாராகி வருகிறார்கள்.
சென்னை:
வங்கக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நாளை மறுநாள் (3-ந்தேதி) புயலாக வலுப்பெறும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயல் வடதமிழகம்-தெற்கு ஆந்திரா கடலோர பகுதிகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பெரும்பாலான வட மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து புயல் பாதிப்பை எதிர்கொள்ளும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. புயல் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதாக கருதப்படும் மாவட்டங்களில் போதிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.
இதையடுத்து புயல் பாதுகாப்பு ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. தமிழக பேரிடர் மீட்பு படையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.
சென்னை எழிலகத்தில் அமைந்துள்ள பேரிடர் மீட்பு படையினர் மயிலாடுதுறை, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை ஆகிய மாவட்டங்களில் மீட்பு படையினரை தயார் நிலையில் நிறுத்தி வைத்துள்ளனர்.
இது தொடர்பாக பேரிடர் கட்டுப்பாட்டு மைய அதிகாரி ஒருவர் கூறும் போது, மழை பாதிப்புகளை சரி செய்யவும் போதிய முன் ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் தயார் நிலையில் உள்ளோம்.
நாளை மறுநாள் உருவாகும் புயல் எந்த மாதிரியான பாதிப்பை ஏற்படும் என்பது மறுநாள் (4-ந்தேதி) தான் தெரியும் என்ற போதிலும் இப்போதைக்கு நாங்கள் உஷார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். 24 மணிநேரமும் செயல்படக்கூடிய அவசர கால கட்டுப்பாட்டு மையம் செயல்பட்டு வருகிறது.
இந்த மையத்தில் பொது மக்கள் அளிக்கும் புகார்களுக்கு உடனடியாக தீர்வு காணவேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதன் பேரில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகள், ஊழியர்கள் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகிறோம். புயல் பாதிப்பை எதிர்கொண்டு நிலைமையை சீராக்க முழு அளவில் தயாராகி இருக்கிறோம் என்று தெரிவித்தார்.
பேரிடர் மீட்பு படையினர் தனித்தனி பிரிவுகளாக பிரிந்து செயல்பட்டு வருகிறார்கள். தமிழகத்தை சேர்ந்த பேரிடர் மீட்பு படையினர் 8 குழுக்களாக பிரிந்து செயல்பட்டு வருகிறார்கள். இந்த குழுவில் 250 பேர் வரை உள்ளனர்.
இதே போன்று தேசிய பேரிடர் மீட்பு படையினர் 9 குழுக்களாக பிரிந்து செயல்பட்டு வருகிறார்கள். அதிலும் 250 பேர் உள்ளனர். இதன் மூலம் 500 பேரிடர் மீட்பு படையினர் புயல் பாதிப்புகள் ஏற்படும் இடங்களுக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை துரிதப்படுத்த இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
சென்னையில் புயல் பாதிப்பு ஏற்படும் இடங்களுக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை முழு வீச்சில் மேற்கொள்ள தீயணைப்புத் துறையினரும் தயாராக உள்ளனர். சென்னையில் உள்ள 43 தீயணைப்பு நிலையங்களில் பணியாற்றும் 1,100 தீயணைப்பு வீரர்களும் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். தீயணைப்புத் துறை இணை இயக்குனர் பிரியா ரவிச்சந்திரன் மேற்பார்வையில் மாவட்ட தீயணைப்பு அலுவலர்களான சரவணன், லோகநாதன், தென்னரசு, ராபின் ஆகியோர் தீயணைப்பு வீரர்களை ஒருங்கிணைத்து செயல்பட்டு வருகிறார்கள்.
புயல் பாதிப்பால் முறிந்து விழும் மரங்களை அப்புறப்படுத்துவதற்கு 45 தீயணைப்பு நிலையங்களிலும் மரம் வெட்டும் எந்திரங்கள் உள்ளன. அவைகளை தயார்படுத்தி வைத்துள்ளனர். இது தவிர மோட்டார் மூலமாக இழுத்து வரப்படும் ரப்பர் படகுகள், கட்டிட இடிபாடுகளை வெட்டி அகற்றும் 'பில்டிங் கட்டர்'கள் ஆகியவற்றையும் தீயணைப்பு அதிகாரிகள் தயார்படுத்தி உஷார் நிலையில் வைத்துள்ளனர்.
சென்னை மாநகர போலீசாரும் மீட்பு பணிகளை மேற்கொள்ள முழு வீச்சில் தயாராகி வருகிறார்கள். எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் செயல்பட்டு வரும் ஆயுதப்படை வளாகத்தில் மீட்பு கருவிகளான படகு உள்ளிட்ட பொருட்களுடன் ஆயுதப்படையில் உள்ள 100-க்கும் மேற்பட்ட மீட்பு படை காவலர்களும் தயாராக உள்ளனர்.
மீட்பு பணியில் ஈடுபடும் காவலர்கள் சிறப்பு பயிற்சி எடுத்தவர்களாக இருப்பார்கள். பேரிடர் காலங்களில் பேரிடர் மீட்பு படையினரை போல இவர்கள் துரிதமாக செயல்படுவார்கள். ரப்பர் படகுகள், மரம் அறுக்கும் எந்திரங்களும் ஆயுதப்படை போலீசில் உள்ளன. அவைகள் தயார்படுத்தப்பட்டு சென்னை போலீசாரும் உஷாராக இருக்க போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டு உள்ளார்.
இது தவிர சென்னை மாநகரில் உள்ள சட்டம்-ஒழுங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர்கள், போக்குவரத்து ஆய்வாளர்கள் உள்ளிட்டோரும் தங்களது பகுதியில் உள்ள வெள்ள பாதிப்புகள் மற்றும் இடர்பாடுகளை சரி செய்ய தயாராக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கூடுதல் கமிஷனர்கள், இணை மற்றும் துணை கமிஷனர்களும் புயல் பாதிப்பு ஏற்படும் பகுதிகளுக்கு நேரில் சென்று மீட்பு பணிகளை முடுக்கிவிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை மாநகராட்சி சார்பிலும் தேவையான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. 162 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் இருக்கும் வகையில் 300 படகுகளையும் அதிகாரிகள் தயாராக வைத்துள்ளனர். தற்போது பெய்த கனமழையால் எங்கெங்கு தண்ணீர் தேங்கி உள்ளது என்பதை மாநகராட்சி அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர். அடுத்த மழைக்கு அந்த பகுதிகளில் மழை நீர் தேங்காமல் உரிய நடவடிக்கைகளை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மேயர் பிரியா, கமிஷனர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் புயல் பாதுகாப்பு ஏற்பாடுகளை முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறார்கள். இது தவிர தமிழகம் முழுவதும் புயல் பாதிப்பு ஏற்படும் என்று கருதப்படும் இடங்களில் 121 பாதுகாப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
4967 நிவாரண முகாம்களும் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இப்படி புயலை எதிர்கொள்ள தமிழக அரசு அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர்.






