search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறப்பு
    X

    குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறப்பு

    • அணையின் 90ஆண்டு கால வரலாற்றில் முதன்முதலாக 1934ம் ஆண்டு ஜூன் 12-ம் தேதி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
    • குறித்த நாளான ஜூன் 12-ல் இதுவரை 18ஆண்டுகள் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூரில் காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள ஸ்டான்லி நீர்த்தேக்கம் எனப்படும் மேட்டூர் அணை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் பாசன ஆதாரமாக விளங்குகிறது.

    இந்த அணையின் மூலம் தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் உள்ள 17.37 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. மேட்டூர் அணையில் இருந்து வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ந் தேதி குறுவை சாகுபடிக்காக நீர் திறக்கப்படும். டெல்டா பகுதி விவசாயிகள் இந்த நீரை நம்பியே குறுவை சாகுபடி செய்வர்.

    கடந்த ஆண்டு மழையால் மேட்டூர் அணை நிரம்பிய நிலையில் ஜூன் 12-ந்தேதிக்கு முன்பாகவே அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. மே மாதம் 24-ந்தேதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அணையில் இருந்து பாசனத்திற்காக நீரை திறந்துவிட்டார்.

    மேட்டூர் அணை வரலாற்றிலேயே, கோடை காலத்தில் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்ட நிகழ்வு முதல் முறையாக நிகழ்ந்தது.

    இது விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த ஆண்டும் மேட்டூர் அணையில் இருந்து உரிய நாளான ஜூன் 12-ந்தேதி டெல்டாவின் குறுவை பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் வேகமாக நடந்து வருகிறது.

    குறித்த நேரத்தில் தண்ணீர் திறப்பதன் மூலம் நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டிணம், மயிலாடுதுறை மாவட்டங்களில் 4 லட்சத்து 91ஆயிரத்து 200 ஏக்கர் நிலமும், கடலூர் மாவட்டத்தில் 30ஆயிரத்து 800 ஏக்கர் நிலமும் பாசன வசதி பெறும். ஜூன் 12-ம் தேதி முதல் 28-ம் தேதிவரை குறுவை, சம்பா, காளடி பயிர்களுக்கு 220 நாட்களுக்கு 372டிஎம்சி தண்ணீர் தேவைப்படும். டெல்டா பாசனப் பகுதிகளில் மழை பெய்தால் இந்த நீரின் தேவை சற்று குறையும்.

    மேட்டூர் அணையின் உச்ச நீர் மட்டம் 120 அடியாகும். இன்று காலை நிலவரப்படி அணை நீர்மட்டம் 103.65 அடியாக உள்ளது. தற்போதைய நிலவரப்படி 69.654 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. நீர்வரத்து விநாடிக்கு 1075 கன அடியாக உள்ளது.

    குடிநீருக்காக விநாடிக்கு 1508 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தென்மேற்கு பருவமழை காரணமாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை தொடங்கியுள்ளதால் ஜூன் 12-ம் தேதியே குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட இருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட உள்ளார்.

    அணையின் 90ஆண்டு கால வரலாற்றில் முதன்முதலாக 1934ம் ஆண்டு ஜூன் 12-ம் தேதி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. குறித்த நாளான ஜூன்12-ல் இதுவரை 18ஆண்டுகள் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஜூன்12-க்கு முன்பாக 11ஆண்டுகள் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்தவகையில் 19-வது முறையாக குறித்த நாளான ஜூன் 12-ம் தேதி, நடப்பாண்டும் அணையில் இருந்து நீர் திறக்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    டெல்டா பாசனப் பகுதியில் கடந்த ஆண்டு 58 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. தற்போது இது 65,500 ஏக்கர் நிலப்பரப்பாக அதிகரித்துள்ளது. அதேபோல் 4.36 லட்சம் டன் உரம் கையிருப்பில் உள்ளது என்று வேளாண் அதிகாரிகள் கூறினர்.

    மேட்டூர் அணையில் கடந்த ஆண்டு இந்த தேதியில் இருந்த தண்ணீரை விட, தற்போது 6 டிஎம்சி வரை குறைவாகவே உள்ளது. ஆனால் கடந்த 3 ஆண்டுகளில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பெய்ததால் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்துள்ளது.

    Next Story
    ×