search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கலைஞர் நூற்றாண்டு விழா: சோனியா, மம்தா பானர்ஜி  தமிழகம் வருகிறார்கள்
    X

    கலைஞர் நூற்றாண்டு விழா: சோனியா, மம்தா பானர்ஜி தமிழகம் வருகிறார்கள்

    • மகளிர் மாநாட்டில் பங்கேற்க அகில இந்திய அளவில் பெண்களுக்காக பாடுபடுபவர்கள், பெண் தலைவர்கள் ஆகியோரை அழைத்து வருகிறார்கள்.
    • காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை கனிமொழி எம்.பி. நேரில் சந்தித்து அழைத்துள்ளார்.

    சென்னை:

    மறைந்த தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழா தமிழக அரசு சார்பிலும், கட்சி சார்பிலும் ஆண்டு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி தி.மு.க.வின் பல்வேறு அணிகள் மற்றும் அமைப்புகள் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன.

    தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., மகளிர் அணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை பிரமாண்டமாக கொண்டாட ஏற்பாடு செய்துள்ளார்.

    இதையொட்டி அடுத்த மாதம் (அக்டோபர்) 14-ந்தேதி பிரமாண்டமான மகளிர் மாநாடு மற்றும் கருத்தரங்கத்துக்கு ஏற்பாடு செய்துள்ளார். இந்த மாநாடு நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் 14-ந்தேதி மாலையில் நடைபெறுகிறது.

    இதில் பெண்கள் முன்னேற்றத்துக்காக கருணாநிதி செய்த சாதனைகள், கொண்டு வந்த திட்டங்களை பற்றி எடுத்துரைத்து கருணாநிதிக்கு பெருமை சேர்த்திடும் வகையில் மாநாட்டை சிறப்பாக நடத்த திட்டமிட்டுள்ளார்கள்.

    மகளிர் மாநாட்டில் பங்கேற்க அகில இந்திய அளவில் பெண்களுக்காக பாடுபடுபவர்கள், பெண் தலைவர்கள் ஆகியோரை அழைத்து வருகிறார்கள்.

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை கனிமொழி எம்.பி. நேரில் சந்தித்து அழைத்துள்ளார். அவர் கலந்து கொள்வதாக உறுதி அளித்துள்ளார். மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. அவரும் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இது தவிர கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த பிருந்தா காரத் எம்.பி. உள்ளிட்ட பிரபலங்களை கனிமொழி எம்.பி. நேரில் சென்று சந்தித்து அழைத்து வருகிறார்.

    இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்கான ஏற்பாடுகளை சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் அமைச்சர் மா.சுப்பிரமணியன், காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

    இது தொடர்பாக இரண்டு மாவட்ட செயலாளர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நாளை மறுநாள் (23-ந்தேதி) அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது.

    இந்த கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பங்கேற்று நிகழ்ச்சிகள் பற்றி விளக்குகிறார்.

    Next Story
    ×