search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அதிரடியாக குறைந்த தங்கம் விலை
    X

    அதிரடியாக குறைந்த தங்கம் விலை

    • வெள்ளி விலையும் குறைந்துள்ளது.
    • கிராமுக்கு ரூ.2.50 பைசா குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.86.50-க்கும் பார் வெள்ளி ரூ.86,500-க்கும் விற்பனையாகிறது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த சில நாட்களாக வரலாறு காணாத வகையில் உயர்ந்து வந்தது.

    தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரிப்பு, இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் சூழல், அமெரிக்காவில் வங்கி வட்டி குறைப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்தது.

    இதன் மூலம் இதுவரை இல்லாத வகையில் தினமும் தங்கம் விலை அதிகரித்த படியே இருந்தது.

    கடந்த மார்ச் மாதம் இறுதியில் பவுன் ரூ.50 ஆயிரத்தை தாண்டியது. அதன் பின்னரும் விலை தொடர்ந்து உயர்ந்தபடியே இருந்தது.

    ரூ.52 ஆயிரம் முதல் ரூ.54 ஆயிரம் வரை பவுன் விலை தாண்டியது. தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டாலும் ஒரு நாளில் அதிகரிக்கும் விலை தொடர்ந்து அதிகமாக இருந்து வந்தது. சில நாட்களுக்கு முன்பு ஒரே நாளில் பவுனுக்கு ரூ. ஆயிரத்துக்கு மேல் அதிகரித்தது.

    இதற்கிடையே கடந்த 19-ந்தேதி தங்கம் விலை பவுன் ரூ. 55 ஆயிரத்தை தாண்டி வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை தொட்டது. இது ஏழை, நடுத்தர மக்களை அதிர்ச்சி அடைய வைத்தது.

    இதற்கிடையே நேற்று பவுன் ரூ.55 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. நேற்று பவுனுக்கு ரூ.320 குறைந்து ரூ.54 ஆயிரத்து 760-க்கு விற்றது. ஒரு கிராம் ரூ.6,845 ஆக இருந்தது.

    இந்த நிலையில் தொடர்ந்து உச்சத்தில் இருந்த தங்கம் விலையில் இன்று அதிரடி மாற்றம் காணப்பட்டது. இன்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,160 குறைந்து விலையில் பெரும் சரிவு ஏற்பட்டது. இதன் மூலம் பவுன் ரூ.54 ஆயிரத்துக்கு கீழ் வந்தது.

    சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.1,160 குறைந்து ரூ.53,600-க்கு விற்றது. ஒரு கிராம் தங்கம் விலையில் ரூ.145 குறைந்து ரூ.6,700 ஆக உள்ளது.

    தங்கத்தை போல வெள்ளி விலையிலும் பெரும் சரிவு காணப்பட்டது. வெள்ளி கிலோவுக்கு ரூ.2,500 குறைந்து ரூ.86 ஆயிரத்து 500 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.86.50-க்கு விற்கப்படுகிறது.

    கடந்த 3 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,520 குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    தங்கம் விலை தொடர்ந்து உச்சநிலையில் இருந்ததால் ஏழை, நடுத்தர மக்கள் கவலையில் ஆழ்ந்தனர். தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்தபடி இருக்கும் என்ற தகவல் வெளியாகி இருந்தது.

    இந்த நிலையில் இன்று தங்கம் விலையில் ஒரே நாளில் பெரும் சரிவு ஏற்பட்டு இருப்பது அவர்களுக்கு நிம்மதியையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. வரும் நாட்களிலும் விலை மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அமெரிக்க மத்திய வங்கி இந்த ஆண்டு தனது வட்டி விகிதத்தை குறைக்காது என்று தகவல் வெளியாகி இருக்கிறது. இதனாலும் வேறு சில காரணங்களாலும் தங்கம் விலையில் சரிவு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

    Next Story
    ×