search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அயோத்தியில் சீதை மற்றும் அனுமனுக்கு கோவில் கட்டுவோம்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
    X

    அயோத்தியில் சீதை மற்றும் அனுமனுக்கு கோவில் கட்டுவோம்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

    • பிரதமர் மோடி தப்பி தவறி சென்னை வந்தால் வேட்டி கட்டிக்கொண்டு வரக்கூடாது.
    • காங்கிரஸ் லஞ்சம் பெறுகிறது என்று கூறிவந்த மோடி தற்போது லஞ்ச மோசடியில் சிக்கி உள்ளார்.

    சென்னை:

    கோவிலை இடிக்கும் எண்ணம் காங்கிரசுக்கு இல்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் அயோத்தியில் சீதை மற்றும் அனுமனுக்கு கோவில் கட்டுவோம் என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.

    அவர் மேலும் கூறியதாவது:-

    நான் சாதாரணமாக எல்லா மனிதர்களைப் போல பிறக்கவில்லை. இயற்கை முறைப்படி நான் பிறக்கவில்லை. நேரடியாக கடவுள் மூலமாக பிறந்தேன் என்று பிரதமர் மோடி சொல்கின்றார். தேர்தல் முடியும் தருவாயில் ஆட்சியும் முடிந்துவிடும் என்பதை உணர்ந்து ஏதேதோ பேசுகிறார். தரமற்ற நிலக்கரியை தமிழ்நாட்டுக்கு கொடுத்து 6 ஆயிரம் கோடி ஊழல் மோடி செய்துள்ளார்.

    காங்கிரஸ் லஞ்சம் பெறுகிறது என்று கூறிவந்த மோடி தற்போது லஞ்ச மோசடியில் சிக்கி உள்ளார். தமிழர்களை மோடி திருடர்கள் என்று சொல்லி இருக்கிறார்.

    பிரதமர் மோடி தப்பி தவறி சென்னை வந்தால் வேட்டி கட்டிக்கொண்டு வரக்கூடாது. தமிழர்கள் ஒடிசா மாநிலத்தை ஆள கூடாது என்றால் பாகிஸ்தானில் பிறந்த அத்வானியை ஏன் இந்தியாவில் துணை பிரதமராக்கினார்கள்.


    பிரதமர் மோடி கொஞ்சம் வாயை மூடிக்கொண்டு இருக்கவேண்டும். தமிழர்களை நீங்கள் சீண்டி பார்க்க கூடாது. டெபாசிட் வாங்கும் அளவிற்கு இருந்த பா.ஜ.க கட்சி தற்போது அண்ணாமலையை தலைவராக போட்டுக்கொண்டு டெபாசிட் கூட இழக்கப் போகிறார்கள்.

    தி.மு.க, காங்கிரஸ் இரண்டு கட்சிகளும் நாங்கள் இன்று ஒரே அணியில் இருக்கிறோம். பாசிச சக்தியை துரத்த வேண்டும், ஜனநாயகத்தை காக்கவேண்டும் என்பதால் கொள்கை அடிப்படையில் இணைந்து இருக்கிறோம். காமராஜர் கொடுத்த நல்லாட்சி போல் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி கொடுத்துள்ளார் என்றார்.

    முன்னதாக, தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் பா.ராமசந்திரன் நினைவு நாளையொட்டி அவரது படத்திற்கு, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கேவன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதில் துணைத் தலைவர்கள் கோபண்ணா, பொன் கிருஷ்ணமூர்த்தி, பொதுச் செயலாளர்கள் ரங்கபாஷ்யம், எஸ்.ஏ.வாசு மற்றும் ஏ.ஜி.சிதம்பரம், வி.ஆர்.சிவராமன், ஜெ.பாலமுருகன், அகரம் கோபி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×