search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஈரோடு கிழக்கு தேர்தல் களம்- அடித்து ஆடிய எடப்பாடி: முதல் இன்னிங்ஸ் அபாரம்
    X

    ஈரோடு கிழக்கு தேர்தல் களம்- அடித்து ஆடிய எடப்பாடி: முதல் இன்னிங்ஸ் அபாரம்

    • ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் எடப்பாடியும், ஓ.பி.எஸ்.சும் முட்டி மோதி வரும் நிலையில் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மீண்டும் பா.ஜனதா ஆட்ட வியூகத்தை மாற்றியது.
    • ஒவ்வொரு முறையும் பா.ஜனதா வீசிய பந்துகளை லாவகமாக எதிர் கொண்டார் எடப்பாடி பழனிசாமி.

    என்னதான் புகழ் பெற்ற அணியாக இருந்தாலும் தமிழக ஆட்ட களத்தில் பா.ஜனதா அணியினரின் ஆட்ட வியூகம் எடப்பாடி அணியின் நேர்த்தியான ஆட்டத்தின் முன்பு எடுபடாமல் போய் விட்டது.

    ஆரம்பத்தில் இருந்தே அ.தி.மு.க. அணி பற்றிய கணிப்பு தவறாகவே இருந்து வருகிறது.

    ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க.வுக்குள் ஏற்பட்ட விரிசலை தங்களுக்கு சாதகமாக்கி கொள்ள பா.ஜனதா திட்டமிட்டு களம் இறங்கியது.

    ஒன்று தி.மு.க.வுக்கு எதிரான வலுவான அணி. அல்லது வலுவாக காலை ஊன்றுவது என்பதே பா.ஜனதாவின் அரசியல் வியூகமாக இருந்தது.

    அதற்காகவே எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் இணைப்பு என்ற திட்டத்தை அரங்கேற்றியது. அப்போது ஆட்சியில் இருந்ததால் பா.ஜனதா சொன்னதை கேட்பதை தவிர வழியில்லை என்ற கணக்கில் எடப்பாடி பழனிசாமியும் ஒத்துக்கொண்டார்.

    ஆனால் இருவரும் 'கட்சி' என்ற இலக்கை அடைய குறியாக இருந்ததால் ஆட்சி போனதும் காட்சியை மாற்றினார்கள்.

    தலைமைப் பதவி எனக்குத்தான் என்று மட்டையை கையில் எடுத்து பட்டையை கிளப்பினார் எடப்பாடி. கட்சிக்காரர்கள் என்ற ரசிகர்கள் ஆதரவும் அவருக்கே அதிகமானது.

    ஆனாலும் சமாளித்து ஆட ஓ.பன்னீர் செல்வத்தை தன் பக்கம் வைத்துக் கொண்டது பா.ஜனதா. அவர்களின் ஆட்ட வியூகத்தை புரிந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி அடித்து ஆட தொடங்கினார்.

    கொஞ்சம் விட்டுக் கொடுத்தாலும் பா.ஜனதாவின் கட்டுப்பாட்டுக்குள் செல்ல வேண்டியது வரலாம். அல்லது கட்சியை கட்டிக் காப்பதும் முடியாது என்று நினைத்து துணிந்து ஆடினார்.

    ஒவ்வொரு முறையும் பா.ஜனதா வீசிய பந்துகளை லாவகமாக எதிர் கொண்டார். தமிழகத்துக்கு பிரதமர் மோடி வந்த போது எதிர்க்கட்சி தலைவர் என்ற ரீதியில் வரவேற்றார். அதே நேரம் அமித்ஷா வந்த போது வரவேற்க செல்லவில்லை.

    பிரதமர் என்ற அடிப்படையில் மோடியை வரவேற்க சென்றேன். கட்சி தலைவர்களை கட்டாயம் வரவேற்க வேண்டியதில்லை என்று பதிலடி கொடுத்தார்.

    இப்போது ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் எடப்பாடியும், ஓ.பி.எஸ்.சும் முட்டி மோதி வரும் நிலையில் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மீண்டும் பா.ஜனதா ஆட்ட வியூகத்தை மாற்றியது.

    தான் சொல்வதை கேட்க ஓ.பி.எஸ். தயாராக இருந்ததால் அடுத்து எடப்பாடியை எதிர் கொள்வோம் என்ற ரீதியில் ஒட்டு மொத்த கவனத்தையும் எடப்பாடியை வழிக்கு கொண்டு வருவதில் திருப்பினார்கள்.

    இரட்டை இலை சின்னம் கிடைக்க வாய்ப்பில்லை என்ற நிலை வந்ததும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் வியூகத்துடன் பா.ஜனதா தலைவர்கள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார்கள்.

    Next Story
    ×